
ஆர்.கே.நகரில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை முதலே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதுவரை 16 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், இன்னமும் 3 சுற்றுகளே மீதமுள்ள நிலையில், இதுவரை சுயேச்சையாகப் போட்டியிட்ட தினகரனே முன்னிலை பெற்று வருகிறார்.
மொத்தம் 19 சுற்று வாக்கு எண்ணிக்கை உள்ள நிலையில், இப்போது தினகரன் பெற்றுள்ள வாக்குகளில் பாதி அளவுக்கும் சற்று அதிகமாகத்தான் அதிமுக., வேட்பாளர் மதுசூதனன் பெற்றுள்ளார். அவரைக் காட்டிலும் பாதி அளவில் திமுக., வேட்பாளர் பெற்று வருகிறார்.
இந்நிலையில், தினகரன், அதிமுக., இரண்டு வேட்பாளர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே வைப்புத் தொகையை இழப்பார்கள் என்று தெரிகிறது.
ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம் : சுற்று- 16
டிடிவி தினகரன் (சுயேச்சை) - 76,701
மதுசூதனன் (அதிமுக) - 41,529
மருதுகணேஷ் (திமுக) - 21,827
கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) - 3,535
கரு. நாகராஜன் (பாஜக)- 1,185
பொதுவாக பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு பங்காவது பெற்றால்தான் டெபாசிட் இழக்காமல் இருக்க முடியும் என்று கூறப்படுகிறது. இது போல், தாங்கள் கட்டிய டெபாசிட் தொகையை திரும்பப் பெறுவதற்கு பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளைப் பெற்றாக வேண்டும்.
சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை தேர்தல் ஆணயைத்திடம் வைப்புத் தொகையாக, அதாவது டெபாசிட் ஆக கட்ட வேண்டும். தேர்தல் முடிவுகள் வெளியானதும், மொத்தம் பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளை அந்த வேட்பாளர் பெறும் பட்சத்தில், அவர் கட்டிய வைப்புத் தொகை அவரிடம் மீண்டும் அளிக்கப்படும்.
ஆர்.கே நகரில் மொத்தம் 1,76,885 வாக்குகள் பதிவாகின. இதில், ஒரு வேட்பாளர் ஆறில் ஒரு பங்கு என, 29,481 வாக்குகள் பெற்றால் அவர் டெபாசிட் பெறும் தகுதி வாய்க்கப் பெறுவார்.
இந்நிலையில், இன்றைய தேர்தல் முடிவுகளின் படி, அதிமுக டெபாசிட் பெற்ற கட்சியாக அறிவிக்கப் படும். திமுக டெபாசிட் இழந்த கட்சியாகவும், சுயேச்சை வேட்பாளரான தினகரன் வெற்றி பெற்றவராகவும் அறிவிக்கப்படவுள்ளார்.
தேசியக் கட்சியான பாஜக.,வை பின்னுக்கு தள்ளி நோட்டா முன்னிலை பெறு வருகிறது. அடுத்து உள்ள நாம் தமிழர் கட்சியும் டெபாசிட் இழக்கும்.
இந்திய தேர்தல் வரலாற்றில், சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒரு சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெறுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தோல்வியை சந்தித்திருக்கும் திமுக.,வினரோ, பாஜக.,வை குறிவைத்தே கருத்துகளை விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். அதற்கு, ஆலமரமே சாய்ந்து விழுந்துவிடும் போது, அடியில் அகப்பட்ட சிறுசெடிகளைப் பற்றி பேசலாமா என்பதுதான் இதற்கான பதிலாக பாஜக.,வினர் கூறிவருகின்றனர்.