காங்கிரஸ் 180 இடங்களைப் பிடிக்காவிட்டால் திமுக அணி மாற வாய்ப்பு... சந்திர சேகர ராவ் கட்சி அறிவிப்பு!

By Asianet TamilFirst Published May 15, 2019, 8:56 AM IST
Highlights

மத்தியில் மூன்றாவது அணியை ஆட்சியில் அமர்த்தும் பணிகளைத் தொடங்கியுள்ள சந்திரசேகர ராவ், கட்சித் தலைவர்களைச் சந்தித்து பேசிவருகிறார். கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்த சந்திரசேகர ராவ், நேற்று முன்தினம் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
 

காங்கிரஸ் கட்சிக்கு 180 இடங்களுக்கு மேல் கிடைக்காவிட்டால், மூன்றாவது அணிக்கு திமுக வர வாய்ப்பு உள்ளது என்று தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தெரிவித்துள்ளது.
காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக ‘ஃபெடரல்’ கூட்டணியை உருவாக்க தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவரும் தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ் முயற்சி மேற்கொண்டுள்ளார். மத்தியில் மூன்றாவது அணியை ஆட்சியில் அமர்த்தும் பணிகளைத் தொடங்கியுள்ள சந்திரசேகர ராவ், கட்சித் தலைவர்களைச் சந்தித்து பேசிவருகிறார். கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்த சந்திரசேகர ராவ், நேற்று முன்தினம் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
இந்தச் சந்திப்பின்போது சந்திரசேகர ராவ் மூன்றாவது அணிக்கு ஸ்டாலினை அழைத்ததாகவும், ஸ்டாலின் காங்கிரஸ் கூட்டணிக்கு சந்திரசேகர ராவை அழைத்ததாகவும் தகவல்கள் வெளியாயின. மேலும் மே 23-க்கு பிறகு இரு தலைவர்களும் பேசவும் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் ஆதரவை பெற தயார் என்று தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரசூல்கான் கூறுகையில், “பெடரல் அரசை அமைக்க போதிய எம்.பி.க்கள் கிடைக்காவிட்டால், காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கோரப்படும். ஆட்சிக்கு தலைமை வகிக்கும் பொறுப்பை பெடரல் அணியே வைத்துக்கொள்ளும். அந்தப் பொறுப்பை காங்கிரஸுக்கு வழங்காது. மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு 180 இடங்களுக்கு மேல் கிடைக்காவிட்டால், அந்தக் கூட்டணியில் திமுக இருப்பது அந்தக் கட்சிக்கு எந்தப் பலனையும் கொடுக்காது. அதனால், பெடரல் அணிக்கு திமுக வர வாய்ப்பு உள்ளது.” என்று தெரிவித்தார்.

click me!