காங்கிரஸுக்கு திமுக தரப்போகும் அதிர்ச்சி... நாங்குநேரியில் போட்டியிட திமுக அதிரடி முடிவு?

By Asianet TamilFirst Published Aug 20, 2019, 6:34 AM IST
Highlights

கடந்த 2006 -11 காலகட்டத்தில் தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டதை நினைவுகூறும் காங்கிரஸார், அதுபோலவே காங்கிரஸ் தொகுதியான நாங்குநேரியில் போட்டியிட வேண்டும் என்று  மாநில தலைமையை நெருக்கிவருவதாகக் கூறப்படுகிறது. 

காலியாக உள்ள நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போடியிட காங்கிரஸ் கட்சி ஆர்வம் காட்டிவரும் வேளையில், திமுகவும் போட்டியிட தயாராகிவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாகிவிட்டார். இதனால். தன்னுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். காலியாக உள்ள அந்தத் தொகுதிக்கு அக்டோபர் முதல் வாரத்துக்கு முன்பாக இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2016-ல் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்பதால், காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கைகள் அக்கட்சியில் வைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ்  தலைவர் அழகிரி, “ நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலில், யார் போட்டியிடுவது என்பது குறித்து, திமுகவிடம் இன்னும் பேசவில்லை. காங்கிரஸ் கட்சியினர், தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். காங்கிரஸ் போட்டியிடுமா, இல்லையா என்பதை கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும்.” என்று தெரிவித்துள்ளார். 
அண்மையில் நடந்துமுடிந்த வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  நாடாளுமன்றத் தேர்தலில் பிரமாண்டமாக வெற்றி பெற்ற திமுக, இத்தேர்தலில் திணறி வெற்றி பெற்றது. வாக்குகள் குறைந்துபோனதற்கு வேலூரில் வழக்கமான இடைத்தேர்தல் பாணியில் தேர்தல் நடைபெற்றதே காரணம் என திமுக நினைக்கிறது. நாங்குநேரியிலும் அதே பாணியில் தேர்தல் நடைபெறும் என்பதால், காங்கிரஸால் தாக்குபிடிக்க முடியாது என்றும் திமுக தரப்பில் ஆலோசிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே நாங்குநேரியில் திமுக போட்டியிட காங்கிரஸ் தலைமையிடம் பேசவும் அக்கட்சி திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், கடந்த 2006 -11 காலகட்டத்தில் தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டதை நினைவுகூறும் காங்கிரஸார், அதுபோலவே காங்கிரஸ் தொகுதியான நாங்குநேரியில் போட்டியிட வேண்டும் என்று  மாநில தலைமையை நெருக்கிவருவதாகக் கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் சோனியாவும் மு.க. ஸ்டாலினும் எடுக்கும் முடிவுதான் இறுதியானதாக இருக்கும் என்கிறார்கள் திமுகவினர்.   

click me!