ஜனநாயக முறைப்படிதான் ஆட்சிக்கு வருவோம்…கொல்லைப்புறமாக அல்ல !! ஸ்டாலின் பேச்சு !!

By Selvanayagam PFirst Published May 23, 2019, 7:04 AM IST
Highlights

தமிழகத்தில் கொல்லைப்புறமாக அல்லாமல் ஜனநாயக முறைப்படி ஆட்சிக்கு வருவோம் என்று  சென்னையில் நேற்று நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழ் மாநில தேசிய லீக் பொதுச்செயலாளர் திருப்பூர் அல்தாப் தலைமையில் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை ராயபுரத்தில் நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

அப்போது பேசிய ஸ்டாலின், நோன்பு திறப்பு நிகழ்ச்சி வழக்கமான ஒன்றாக இருந்தாலும், இந்த ஆண்டு இப்போது நடைபெறும் இந்த நிகழ்ச்சி ஒரு எதிர்பார்ப்பு நிறைந்ததாக இருக்கிறது. காரணம் நாட்டை ஆள்வது யார்? என்பதை தீர்மானிக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது என தெரிவித்தார்.


நாடாளுமன்ற தேர்தலின் கடைசிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்த ½ மணி நேரத்தில் ஊடகத்துறையினர் ஒரு கருத்துக்கணிப்பு வெளியிட்டார்கள். கருத்துக்கணிப்பில் வெளியான செய்திகளை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். தி.மு.க. எப்போதும் கருத்துக்கணிப்புகளை ஏற்றுக்கொள்வது கிடையாது என தெரிவித்தார்..

நாம் செய்ய வேண்டிய பணியை செய்து இருக்கிறோம். மக்கள் ஆற்ற வேண்டிய பணியை ஆற்றி இருக்கிறார்கள். இன்றைய நோன்பு திறப்பு நிகழ்ச்சி என்பது நிச்சயமாக வரக்கூடிய காலத்தில் வரலாற்றில் இடம்பெறும் வகையில் அமையும். 

மத்தியில் நாம் எதிர்பார்க்கும் ஆட்சி தான் அமையும். உறுதியாக ராகுல்காந்தி தான் நாட்டின் பிரதமர் ஆவார். இதைத்தான் நான் அப்போதும் சொன்னேன், இப்போதும் சொல்கிறேன், எப்போதும் சொல்வேன் என ஸ்டாலின் கூறினார்.

அதேபோன்று தமிழகத்தில் நான் செல்லும் இடங்களில் எல்லாம் இந்த ஆட்சியை கவிழ்க்கவில்லை என்று கேட்கிறார்கள். அதற்கான விடை  விரைவில் கிடைக்கப்போகிறது. தலைவர் கருணாநிதி கொல்லைப்புறம் வழியாக எந்த இடத்துக்கும் வரக்கூடாது என்ற வகையில் தான் எங்களை வளர்த்து இருக்கிறார். 

அதன்படி, நடைபெறவுள்ள  வாக்கு எண்ணிக்கை மூலம் ஜனநாயக முறைப்படி ஆட்சிக்கு வருவோம் என ஸ்டாலின் தெரிவித்தார்.

click me!