
ஆர்.கே.நகர் தொகுதியில் திமுகவினரின் வாக்குகளையும் பணம் சாப்பிட்டுவிட்டது என்று திமுகவின் துணை பொது செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு தமிழக அரசியலில் பல்வேறு உச்சகட்ட குழப்பங்கள் நிலவி வருகிறது. ஜெ. மறைந்ததை அடுத்து, சசிகலாவே அடுத்த முதலமைச்ச்ர என்று கூறிய அனைவரும் அவருக்கு எதிராக போர்கொடி தூக்கினர். பின்னர், சசிகலாவை கட்சியில் இருந்து கழட்டி விட்டனர். டிடிவி தினகரனை கட்சி உறுப்பினரே இல்லை என கூறி ஓரங்கட்டினர் எடப்பாடி-பன்னீர் அணி. இந்த நிலையில், தேர்தல்
ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னமும், கட்சியும் எடப்பாடி-பன்னீர் அணிக்கு ஒதுக்கப்பட்டது.
ஜெ. மறைவை அடுத்து காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதியில், கடந்த 21 ஆம் தேதி இடைதேர்தல் நடைபெற்று, இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
தற்போது 8 சுற்றுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சுயேட்சை வேட்பாளர் தினகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். 39,548 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார் தினகரன்.
இது குறித்து தினகரன் பேசும்போது, ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் நான் முன்னிலை வகித்து வருவது மகிழ்ச்சி என்றும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், தினகரன் முன்னிலை வகிப்பது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர். பாமக நிறுவனர் ராமதாஸ் கூறும்போது, ஜனநாயகத்தை பணநாயகம் விழுங்க தொடங்கியிருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தில் திமுக உள்ளது. இது குறித்து, எதிர்கட்சி துணைத் தலைவரான துரைமுருகன் பேசும்போது, ஆர்.கே.நகரில் திமுகவினரின் வாக்குகளையும் பணம் சாப்பிட்டு விட்டது என்று கூறியுள்ளார். ஜனநாயகம் வெல்லவில்லை பணநாயகம் வென்று விட்டது என்று துரைமுருகன் கூறியுள்ளார்.