
திமுகவினர் ரவுடிகளை இறக்கி பூத்களை கைப்பற்ற திட்டமிட்டிருப்பதாகவும், அதை தடுக்க துணை ராணுவத்தினர் பாதுகாப்பிற்கு வர வேண்டுமென மாநில தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்து அ.தி.மு.க வெற்றியடைய உள்ள சூழலில், திமுகவினர் பல சோதனைகளை அதிமுகவிற்கு கொடுத்துவருவதாக தெரிவித்தார். தேர்தல் பறக்கும் படையினர் வேடிக்கை பார்த்துகொண்டு பதுங்கும் படையினராக செயல்பட்டு வருவதாக கூறினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது பூத் கைப்பற்றுதல், கலவரத்தை உண்டுபண்ணுவதற்காக திமுகவினர் ரவுடிகளை இறக்கி இருப்பதாகவும், உடனடியாக அதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், தேர்தல் ஆணையம் கண்டறிந்துள்ள பதட்டமான மற்றும் மிக பதட்டமான வாக்குசாவடி மையங்களில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 100மீட்டருக்குள் வாக்காளர் அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும், வாகனங்கள் செல்ல காவல்துறை அனுமதிக்க கூடாது என அவர் தெரிவித்துள்ளார். அந்தந்த பூத்துக்கான ஏஜெண்ட் மட்டுமே வாக்குசாவடி மையங்களில் அனுமதிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். ஏனென்றால் கடந்த 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் 89 இடங்களில் மறு தேர்தல் நடத்தப்பட்டதாகவும், அந்த நிலைமை இந்த முறை ஏற்பட கூடாது, துணை ராணுவத்தினரை பாதுகாப்புக்காக தேர்தல் ஆணையம் கொண்டு வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
உதயநிதி ஸ்டாலின் பரப்புரையின் போது தனது மாண்பை மீறி முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு இனி சாவுமணி என தகாத வார்த்தையால் பேசுவதாகவும், அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அதிமுகவின் ஓட்டு ஒரு போதும் யாரிடமும் பிரிந்து செல்லாது என தெரிவித்த அவர், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் என்ற அறிவிப்பை காவல்துறை வெளியிட்டு, கொடி அணி வகுப்பு நடத்துவதை அதிகபடுத்த வேண்டுமென அவர் தெரிவித்தார். பூத் சிலிப்பை ஒரு போதும் திமுகவினர் கொடுக்கக்கூடாது, மாநகராட்சி அதிகாரிகள் வழங்க வேண்டும் எனவும், அப்படி நடந்தால் அதிமுகவினரால் புகைப்படம் எடுத்து அதை உயர்நீதிமன்றத்தில் தர போவதாகவும் அவர் எச்சரித்தார்.