ஆட்சியைக் கவிழ்க்க வேகமெடுக்கும் பேச்சு வார்த்தை… 50 அதிமுக எம்எல்ஏக்களுடன் திமுக ரகசிய பேச்சு !!

By Selvanayagam PFirst Published Jun 9, 2019, 10:07 AM IST
Highlights

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை இழுத்து, ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில், தி.மு.க., தீவிரமாக இருப்பதால், கட்சி தாவ தயாராகும், எம்.எல்.ஏ.,க்கள் யார் யார் என்ற கேள்வி, ஆளும் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. உளவுத் துறை ரகசிய விசாரணையில் 50 எம்எல்ஏக்கள் திமுகவுக்கு தாவ தயாராக இருப்பதாக தெரியவந்துள்ளது.

தமிழக சட்டசபையில், தற்போது, அதிமுகவுக்கு  சபாநாயகருடன் சேர்த்து, 123 எம்எல்ஏக்கள்  உள்ளனர். திமுகவிற்கு காங்கிரஸ், முஸ்லீம் லீக் என 101 எம்எல்ஏக்கள் உள்ளனர்.; தினகரன், சுயேச்சை எம்.எல்.ஏ., வாக உள்ளார்.
 
நாங்குநேரி தொகுதி காலியாக உள்ளது. அண்மையில் நடைபெற்ற  இடைத்தேர்தலில், 22 சட்ட சபை தொகுதிகளில், திமுகவிற்கு, 13 தொகுதிகளில் மட்டுமே, வெற்றி கிடைத்தது. அதிமுக ஒன்பது இடங்களில் வெற்றி பெற்றதால், ஆட்சிக்கு சிக்கல் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மக்களவைத் தேர்தலில், 37 இடங்களை பிடித்தும், மத்தியில், பாஜக ஆட்சி அமைந்ததால், திமுகவுக்கு  எந்த பலனும் இல்லாமல் போய் விட்டது என அக்கட்சி கருதுகிறது. அதனால் எப்படியாவது எடப்பாடி அரசைக் கவிழ்த்து தமிழகத்திலும் ஆட்சியை கைப்பற்ற திமுக துடியாய் துடிக்கிறது.

அதனால் அதிமுக எம்எல்ஏக்களை இழுத்து, ஆட்சியை கவிழ்க்க, திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக எம்எல்ஏக்களை இழுக்கும் பொறுப்பு கே.என்.நேரு, பொன்முடி ஆகியோருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும் அதிமுகவில் அதிருப்தியில் உள்ள, எம்எல்ஏக்களுடன் ரகசிய பேச்சு நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக, மாநில உளவுத்துறை போலீசார், எடப்பாடிக்கு  அறிக்கை அளித்துள்ளனர். தி.மு.க., தரப்பில், யார் யாருடன் பேசப்படுகிறது என்ற பட்டியலையும் அளித்துள்ளனர். அதில், 50க்கும் மேற்பட்ட, எம்.எல்.ஏ.,க்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளதால் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து அதிருப்தி எம்எல்ஏக்களை அழைத்து எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் திமுக தரப்பிலும் அதிமுக எம்எல்ஏக்களை இழுக்க நடத்தப்பட்டு வரும் பேச்சு வார்த்தை வேகமெடுத்துள்ளது.

திமுக வலையில் விழுந்துள்ள, ஆளும் கட்சி எம்எல்ஏக்களிடம், அறிவாலய தரப்பு தொடர்ந்து இணைப்பில் உள்ளது. 'இப்போதைக்கு, அங்கேயே அமைதியாக இருங்கள். சட்டசபையில் ஓட்டெடுப்பின் போது, சபையில் இருக்காமல், வெளியில் சென்று விடுங்கள். அதன்பின், மற்றதை பேசிக் கொள்ளலாம் என, கூறியிருப்பதாக தெரிகிறது.

click me!