அவரு எம்ஜிஆரா, வைகோவா...? திமுக எம்எல்ஏ கு.க. செல்வம் பற்றிய கேள்வியை லெப்ட் ஹேண்டில் டீல் செய்த துரைமுருகன்!!

By Asianet TamilFirst Published Aug 5, 2020, 9:12 PM IST
Highlights

திடீரென பாஜக ஆதரவாளராக மாறிவிட்ட திமுக எம்.எல்.ஏ. கு.க. செல்வம் ஒரு பொருட்டே அல்ல என்று திமுக பொருளாளர்  துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏவான கு.க.செல்வம் டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவை  நேற்று நேரில் சந்தித்து பேசினார். இதனையடுத்து பாஜகவில் சேரவில்லை என்றும் அதிரடியாக அறிவித்து திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்தார். இதனையடுத்து திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் கு.க. செல்வம். மேலும் அவர் வகித்து  வந்த தலைமை நிலைய செயலாளர், பொதுக்குழு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்தும் திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் நீக்கினார். மேலும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஏன் நிரந்தரமாக நீக்கக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் திமுக தெரிவித்தது.
இந்நிலையில் இன்று மாலை சென்னையில் உள்ள பாஜக மாநில தலைமையகமான  கமலாலயத்துக்கு  கு.க.செல்வம் சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய கு.க. செல்வம், “திமுகவில் வாரிசு அரசியல் என்பது குடும்ப அரசியலாக மாறிவிட்டது. திமுகவிலிருந்து என்னை நீக்கினாலும் கவலை இல்லை” என்று தெரிவித்தார். இந்நிலையில் கு.க செல்வம் விவகாரம் குறித்து திமுக பொருளாளர் துரைமுருகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த துரைமுருகன், “ எம்.ஜி.ஆர்., சம்பத், வைகோ போன்றவர்கள் திமுகவிலிருந்து பிரிந்து சென்றபோது திமுக சிறிய இடர்பாடுகளைச் சந்தித்தது. வி.பி. துரைசாமி, கு.க.செல்வம் போன்றவர்கள் செல்வதால் எங்களுக்கு எந்த இடர்பாடும் இல்லை. இவர்களை நாங்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அதைப்பற்றி சொல்ல ஒன்றுமில்லை” ” என்று அவர் பாணியில் பதில் சொன்னார் துரைமுருகன். 

click me!