மானம் ரோஷம் இருந்தால் அதிமுக எம்எல்ஏவா வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுங்க.. எஸ்.வி.சேகரை காய்ச்சிய ஜெயக்குமார்

By Asianet TamilFirst Published Aug 5, 2020, 8:50 PM IST
Highlights

அதிமுக கொடியிலிருந்து அண்ணா படத்தை நீக்க சொன்ன நடிகர் எஸ்.வி.சேகர், அதிமுக எம்.எல்.ஏ.வாக வாங்கிய சம்பளம், பென்சன் ஆகியவற்றை திருப்பி தருவாரா என்று ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய தேசிய கல்வி கொள்கை அமலுக்கு வந்ததையடுத்து தமிழகத்தில் மும்மொழி கல்வி கொள்கை பின்பற்றப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், தமிழகத்தில் மும்மொழி கல்வி கொள்கைக்கு எதிராக பாஜக நீங்கலாக எல்லா கட்சிகளும் திரண்டன. இதனையடுத்து தமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டுமே பின்பற்றப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக அறிவித்தார். இதனால், பாஜகவினர் ஏமாற்றமடைந்தனர். 
இந்த விவகாரத்தில் நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் விமர்சித்தார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். அதில், ‘திமுகவின் நிலைப்பாட்டையே அதிமுகவும் எடுப்பதாக எஸ்.வி.சேகர் குற்றம்சாட்டி பேசினார். அதோடுவிடாமல், அதிமுக உருப்பட வேண்டும் என்றால் கட்சியின் கொடியில் உள்ள அண்ணா படத்தை நீக்கிவிட வேண்டும் என்றும் கொடியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் படத்தை வைக்க வேண்டும் என்றும் கட்சிக்கு அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்று சூட்ட வேண்டும் அதிரடியாக அறிவுரையும் வழங்கினார் எஸ்.வி.சேகர்.


எஸ்.வி.சேகரின் இந்தப் பேச்சுக்கு அதிமுக தரப்பில் பதில்கூட சொல்லவில்லை என்று சமூக ஊடகங்களில் அதிமுகவை பலரும் விமர்சித்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு காட்டமாகப் பதிலடி தந்தார் அமைச்சர் ஜெயக்குமார். “ஜெயலலிதா அடையாளம் காட்டிதான் எஸ்.வி.சேகர் மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றார். அதிமுக கொடியையும் அண்ணாவையும் காட்டித்தான் வாக்கு வாங்கி மயிலாப்பூரில் வெற்றி பெற்றார்.


உண்மையிலேயே எஸ்.வி.சேகருக்கு மானம், ரோஷம் இருந்தால் அதிமுக எம்எல்ஏவாக அவர் 5 ஆண்டுகளுக்கு பெற்ற சம்பளம், பென்சன் ஆகியவற்றைத் திரும்பித் தர வேண்டும். இதையெல்லாம் எஸ்.வி.சேகர் தருவாரா? முதலில் அவர் இதற்கு பதில் சொல்லட்டும். ஆதாரம் எதுவும் இல்லாமல் அவர் பேசுகிற பேச்சுக்கள் எல்லாம் தமிழ்நாட்டு மக்களிடம் கொஞ்சமும் எடுபடாது” என்று பதிலடி கொடுத்தார் ஜெயக்குமார். 

click me!