
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடன் தொலைபேசியில் பேசியது பற்றி முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் திமுக அளித்துள்ள அறிக்கை ஒருதலைப் பட்சமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசு எடுத்துள்ள நடவடிக்கை பற்றி நான் கூறியதைக் கூறாமல் ஸ்டாலின் ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாக அவர் கூறியுள்ளார்.
போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்னை குறித்து ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பேசியது குறித்து செய்திகள் வெளியாயின. இந்நிலையில், போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் பற்றி பேசியது என்ன என்று முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேசியது குறிப்பிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள ஊதிய உயர்வைவிட தற்போது வழங்கப்பட உள்ள ஊதிய உயர்வு அதிகம் என்று குறிப்பிட்டதைக் கூறியுள்ளார்.
முன்னதாக, போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு மு.க.ஸ்டாலின் கோரியிருந்தார்.
இந்நிலையில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் உடனே வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப தொழில்சங்கங்களுக்கு அறிவுறுத்துமாறு மு.க.ஸ்டாலினிடம் கூறினேன் என்று தெரிவித்தார் முதல்வர் எடப்பாடி. ஆனால் தாம் எந்த விவரத்தையும் தெரிவிக்கவில்லை என மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தாம் கூறியதை தெரிவிக்காமல் ஒருதலைப்பட்சமாக திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது என்று வேதனை தெரிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
ஒருதலைப்பட்சமாக திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது வருத்தமளிக்கிறது என்று கூறிய முதல்வர், பொதுமக்களின் நலன் கருதி போக்குவரத்து தொழிலாளர்கள் உடனே பணிக்கு திரும்ப மீண்டும் வேண்டுகோள் விடுப்பதாகவும் கூறினார்.