
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவலர்களுடன் தகராறில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கரூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தம்பிதுரையும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கடந்த மாதம் 26-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சென்றார். வேட்பாளர் ஜோதிமணியுடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் சென்றனர். இந்நிலையில், தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைக் கடந்தும் ஆட்சியர் அறையை விட்டு தம்பிதுரை வெளியே வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த திமுக மாவட்டச்செயலாளர் செந்தில்பாலாஜி, தம்பிதுரையை வெளியேற்றுமாறும், தங்களுக்கு காலதாமதம் ஏற்படுவதாகவும் கூறினார்.
இதனையடுத்து டிஎஸ்பி. சுகுமாருக்கும், செந்தில் பாலாஜிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வேட்பாளர் ஜோதிமணியும் அவருடன் கடுமையாக வாதிட்டார். பின்னர் செந்தில்பாலாஜி திடீர் போராட்டத்திலும் ஈடுபட்டதாக, காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஆர்.சுப்ரமணியம், செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதனால் கைது நடவடிக்கையில் இருந்து செந்தில் பாலாஜி தப்பித்தார்.