அம்மா இருந்திருக்கணும்.. திமுக ஆட்சியையும், கள்ளச்சாராயத்தையும் பிரிக்க முடியாது - வெளுத்து வாங்கிய சசிகலா

By Raghupati RFirst Published May 14, 2023, 7:15 PM IST
Highlights

திமுக ஆட்சியையும், கள்ளச்சாராயத்தையும் பிரிக்க முடியாது என்று திமுகவை கடுமையாக கண்டித்துள்ளார் சசிகலா.

சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த மீனவ கிராமமான எக்கியார்குப்பத்தில் அமரன் என்பவர் கள்ளச்சாராயம் விற்றதாகவும், அதை சங்கர், சுரேஷ், தரணிவேல், மண்ணாங்கட்டி, ராமமூர்த்தி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் வாங்கி அருந்தியதாகவும் கூறப்படுகிறது.

இதில் முதலில் சுரேஷ் என்பவர் வாந்தி மயக்கத்தோடு சுருண்டு விழ, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புதுச்சேரியை அடுத்த காலப்பட்டில் உள்ள பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிறிது நேரம் கழித்து சங்கர் மற்றும் தரணிவேலுவும் சுருண்டு விழ இவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ஊர் முழுவதும் சாராயம் அருந்தியவர்கள் ஆங்காங்கே மயங்கிவிழ அவர்களும் ஜிப்மர் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 

இதனிடையே சிகிச்சைப் பெற்றுவந்த சுரேஷ், சங்கர் மற்றும் தரணிவேல் மற்றும் ராஜமூர்த்தி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மண்ணாங்கட்டி என்பவர் கவலைக்கிடமான நிலையில் இருந்தார். எஞ்சிய 22 பேர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு மாநிலத்தின் பாதுகாப்புக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறிவருவது மிகவும் வேதனை அளிக்கிறது. திமுக தலைமையிலான அரசு தமிழக மக்களின் பாதுகாப்பைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், இரண்டு ஆண்டு ஆட்சிக்காலத்தை நிறைவு செய்ததையே பெரும் சாதனையாக நினைத்துக்கொண்டு திராவிட மாடல் என்ற ஒற்றை விளம்பரத்தை நாள்தோறும் செய்து பொழுதை கழித்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்திற்கு அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் சுரேஷ், சங்கர், தரணிவேல், ராஜமூர்த்தி ஆகிய நான்கு நபர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. மேலும் 12 நபர்கள் மிகவும் பாதிப்படைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இது போன்ற உயிரிழப்புகள் ஏற்பட காரணமாக அமைந்துள்ள திமுக தலைமையிலான அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக ஆட்சியையும், கள்ளசாராயத்தையும் யாராலும் பிரித்துப்பார்க்கமுடியாது. எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் கள்ளசாராய கலாசாரமும் தலைவிரித்தாடும். திமுக ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக காவல்துறையும் கள்ளசாராயத்தை தடுக்க எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் மெத்தனப்போக்கோடு இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

இதையும் படிங்க..அமுதா ஐஏஎஸ் முதல் உதயசந்திரன் வரை.. வெளிநாட்டு பயணத்திற்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் மாற்றிய அதிகாரிகள் யார்?

மேலும் மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழாவின்போது இரண்டு கோஷ்டிகளுக்கிடையே ஏற்பட்ட கடுமையான மோதலைத் தொடர்ந்து இன்றைக்கு மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலைஅழகுபுரத்தை சேர்ந்த ஆனந்த குமார் என்பவரை, மதுரை மீனாட்சி திரையரங்கு பகுதியில் ஐந்து பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி கொலை செய்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இந்த கோர சம்பவத்தால் இங்குள்ள மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

இதுபோன்று பட்டப்பகலில் வெட்டி கொலைசெய்யும் அளவுக்கு சமூக விரோதிகளும், ரவுடிகளும் இன்றைய ஆட்சியில் சுதந்திரமாக இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. தமிழக காவல்துறை விழிப்புடன் செயல்பட்டு இருந்தால் இந்த கொலையை தடுத்து இருக்க முடியும். திமுக தலைமையிலான அரசு, இது போன்ற சமூகவிரோத செயல்கள் ஏற்படாமல் தடுத்து மக்களின் பாதுகாப்புக்கு வழிவகுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சி காலத்தில் கொலை, கொள்ளை, கள்ளச்சாராயம் போன்ற சமூக விரோத செயல்களுக்கு இடம் அளித்திடாமல் சட்டம் ஒழுங்கு சரியாக பேணிப் பாதுகாக்கப்பட்டது. தமிழகமும் அமைதி பூங்காவாக இருந்தது. ஆனால் இன்றைய ஆட்சியில் தமிழகம் அழிவுப்பாதைக்கு சென்று கொண்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் கள்ளசாராயம் என்ற அரக்கனை தலைதூக்க விட்டால், கொலை, கொள்ளை என்பது சர்வ சாதாரணமான முழு நேர தொழிலாக மாறிவிடும். பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமை ஏற்பட்டு விடும். சாமானிய மக்களின் பாதுகாப்பு என்பது கொஞ்சமும் இல்லாமல் தமிழகம் தவித்துக் கொண்டு இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார் சசிகலா.

இதையும் படிங்க..கர்நாடக தேர்தல்: சறுக்கிய பாஜக & ஜேடிஎஸ்.. காங்கிரசின் வெற்றிக்கு உதவிய டாப் 5 காரணங்கள்

இதையும் படிங்க..கர்நாடக தேர்தலில் மண்ணை கவ்விய 14 அமைச்சர்கள்.. இப்படியொரு நிலைமையா.! பரிதாபத்தில் பாஜக

click me!