
முதல்வர் பழனிசாமி, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ரஜினிகாந்த் ஆகிய மூவருக்கும் ஒரே இடத்தில் இருந்து உத்தரவு வருவதாக திமுக எம்பி டி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது நடந்த வன்முறையில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த பலர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ரஜினிகாந்த், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், போராட்டத்தில் சமூக விரோதிகள் சிலர் புகுந்து வன்முறையை கட்டவிழ்த்து விட்டதாக கூறினார். மேலும் போராட்டம் நடத்தும்போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து வன்முறையை கட்டவிழ்த்து விட்டதால்தான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக முதல்வர் விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில், ரஜினியின் கருத்து எதிர்வினையாற்றியுள்ள திமுக எம்பி டி.கே.எஸ். இளங்கோவன், முதல்வர் பழனிசாமி, பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய மூவருக்கும் ஒரே இடத்தில் இருந்துதான் உத்தரவு வருகிறது என கூறினார். மேலும் துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேரில் யார் சமூக விரோதி என்பதை ரஜினி விளக்க வேண்டும் என வலியுறுத்தினார்.