திமுக ராஜ்யசபா எம்பி வேட்பாளர் பட்டியல்..! வில்சனை டிக் அடித்த ஸ்டாலின்..!

By Selva KathirFirst Published Jul 1, 2019, 10:33 AM IST
Highlights

திமுகவின் வழக்கறிஞர் வில்சன் ராஜ்யசபா எம்.பி. ஆவது உறுதியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

திமுகவின் வழக்கறிஞர் வில்சன் ராஜ்யசபா எம்.பி. ஆவது உறுதியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய சூழல் மற்றும் சட்டப்பேரவை எம்.எல்.ஏ.க்களின் பலத்தின் அடிப்படையில் திமுகவால் 3 ராஜ்யசபா எம்.பி.க்களை வெல்ல முடியும். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைக்கும் போது மதிமுவிற்கு ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவி என்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து மதிமுகவிற்கு ஒரு எம்பி பதவியை கொடுத்தது போக எஞ்சிய 2 எம்.பி. பதவிகளை திமுக தனது நிர்வாகிகளுக்கு கொடுக்க முடியும். 

அந்த வகையில் தொமுச பொதுச் செயலாளராக இருக்கும் சண்முகம் ராஜ்யசபா எம்.பி. ஆவது கடந்த மாதமே உறுதியாகிவிட்டது. இதனை அவரை நேரில் அழைத்து ஸ்டாலினே கூறிவிட்டார். எஞ்சிய ஒரு இடத்திற்கு தான் கடும் போட்டி நிலவியது. அதிலும் முஸ்லீமுக்கு ஒரு ராஜ்யசபா எம்பி பதவியை திமுக கொடுக்க வேண்டும் என்று கலக குரல்கள் எழ ஆரம்பித்தன. 

திமுகவின் பேச்சாளர் மனுஷ்யபுத்திரனை திமுக ராஜ்யசபா எம்.பி.யாக்க வேண்டும் என்று ஒரு லாபியும் இருந்தது. ஆனால் மனுஷ்யபுத்திரன் போன்றோரை எம்.பி.யாக்கினால் சரியாக இருக்காது என்று சபரீசன் மற்றும் துர்கா ஸ்டாலின் கருதியுள்ளனர். இதனால் அவர் பெயர் ராஜ்யசபா எம்.பி. போட்டியில் இருந்து நீக்கப்பட்டது. தொடர்ந்து ஏகேஎஸ் விஜயன் ராஜ்யசபா எம்.பி. ஆவார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் இவர்கள் அனைவரையும் பின் தள்ளி திமுக வழக்கறிஞர் வில்சன் பெயர் தற்போது முதல் பெயராகியுள்ளது. அதற்கு காரணம் வில்சனுக்கு ஏதாவது பெரிய பரிசு ஒன்றை கொடுக்க வேண்டும் என்று கடந்த ஓராண்டாகவே ஸ்டாலின் நினைத்து வருவது தான். 

ஏனென்றால் கலைஞர் சமாதியை மெரினாவில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றுத் தந்தது வில்சன் தான். கடந்த ஓராண்டில் பல்வேறு வெற்றிகளை ஸ்டாலின் பெற்றாலும் தந்தையை மெரினாவில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் மூலம் பெற்ற வெற்றி தான் அவருக்கு பிரதானமாக தெரிகிறது. எனவே அந்த வெற்றிக்கு காரணமான வில்சனை கவுரவிக்கும் பொருட்டு ராஜ்யசபா எம்.பி.யாக்க முடிவு செய்துள்ளார்.

 

இந்த தகவலை வில்சனிடம் திமுக நிர்வாகிகள் கூறிய நிலையில் தான் ராஜ்யசபா செல்ல உள்ளதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் மகிழ்ச்சியுடன் கூறி வருகிறார் வில்சன். பல்வேறு வழக்குகளில் திமுகவிற்கு சாதகமான தீர்ப்புகளை பெற்றுத் தந்த வில்சன் மிக முக்கிய வழக்குகளில் கோட்டை விட்டதும் உண்டு. இருந்தாலும் கலைஞர் சமாதி வழக்கில் ஜெயித்து கொடுத்ததால் அவர் எம்பி ஆவது உறுதியாகியுள்ளது.

click me!