
சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் பதவியை திமுகவுக்கு அளிக்காமல் காங்கிரசுக்கு அளித்ததன் மூலம் திமுக காங்கிரஸ் மோதலுக்கு தூபம் போட்டுள்ளதாக சட்டசபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துரைமுருகனுக்கு வழங்காமல் கே.ஆர் ராமசாமிக்கு வழங்கியதை கவுரவ பிரச்சனையாக பார்க்கும் திமுக அனைத்து குழுவிலிருந்தும் விலகியுள்ளது.காங்கிரசுக்கும் இது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்துள்ளது அதிமுக தலைமை.
சட்டசபையை வழி நடத்த தமிழக சட்டசபை விதிகளின்படி, பொதுக்கணக்குக்குழு, பேரவை விதிகள் குழு, ஒழுங்கு நடவடிக்கைக் குழு, நூலகக் குழு , உரிமைக்குழு உள்ளிட்ட 12 குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.
சட்டப்பேரவையின் பொதுகணக்குக்குழு தலைவர் பொறுப்பு எதிர்க்கட்சி தலைவருக்கு வழங்கப்படுவது மரபு. ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்து 8 மாதத்துக்கு மேலாகியும் பொதுகணக்குக்குழு தலைவர் பதவி நியமிக்கப்படாமல் இருந்தது.
இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின்போது, நடந்து வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் சட்டமன்ற குழுக்கள் நியமிக்கப்படும் என்று சபாநாயகர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இதனிடையே, தனக்கு சட்டப்பேரவையின் கூட்டத்தொடரின் போது 12 குழுக்கள் அமைக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை சபாநாயகர் வெளியிட்டார்.
தனக்கு பொதுகணக்குக்குழு தலைவர் பொறுப்பு வேண்டாம் என்றும், அதனை துரைமுருகனுக்கு தருமாறும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், சட்டப்பேரவையின் குழுக்களில் பொதுகணக்குக்குழு தலைவராக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து சபாநாயகர் தனபாலுடன் திமுக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நியாயப்படி பொதுக்கணக்கு குழு தலைவர் எதிர்கட்சிக்குத்தானே வழங்க வேண்டும் . எப்படி நீங்கள் காங்கிரசுக்கு வழங்கலாம் என்று கேட்டனர்.
காங்கிரசும் எதிர்கட்சித்தானே , திமுகவுக்குத்தான் வழங்க வேண்டும் என்ற சட்டம் இல்லையே , கடந்த காலங்களில் நீங்கள் எதை செய்தீர்களோ அதையேத்தான் நாங்கள் இன்று செய்துள்ளோம் என்றார் சபாநாயகர்.
கடந்த திமுக ஆட்சியில் பொதுக்கணக்கு குழு தலைவர் பதவியை அன்றைய எதிர்கட்சியான அதிமுகவுக்கு வழங்காமல் மற்ற கட்சிகளுக்கு வழங்கினீர்கள் , இன்று கேள்வி எழுப்புகிறீர்கள் நீங்கள் பின் பற்றிய அதே நடைமுறைதான் நாங்கள் புதிதாக எதையும் செய்யவில்லை என்று சபாநாயகர் கூற இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
வழக்கமாக திமுகவுடன் வெளிநடப்பு செய்யும் காங்கிரசார் இந்த முறை எதுவும் சொல்லாமல் சட்டசபையிலேயே அமர்ந்து விட்டனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறுகையில், குழு தலைவர் பதவி தராததால் எந்த குழுவிலும் திமுக எம்எல்ஏக்கள் இடம்பெற மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து கட்சி மேலிடத்துடன் பேசி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தார்.
சட்டமன்ற குழுக்கள் விவகாரத்தில் காங்கிரசையும் , திமுகவையும் மோதவிட்டு செயல்படும் அதிமுகவின் ராஜதந்திரம் பற்றித்தான் இப்ப சட்டசபையில் பேச்சு.