
அதிமுகவினர் ராயபுரத்தில் கள்ள ஓட்டு போட வந்ததாகக் கூறி, நபர் ஒருவரை அரை நிர்வாணப்படுத்தி சட்டையால் கைகளைக் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயபுரம் பகுதியில் 49-வது வார்டில் மக்கள் நேற்று முன்தினம் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைச் செலுத்திக் கொண்டிருந்தனர். ஆளுங்கட்சியினர் யாரும் கள்ள வாக்குகளைச் செலுத்தி விடக்கூடாது என்பதில் முனைப்புக் காட்டிய அதிமுகவினர், அதிக அளவில் வாக்குச்சாவடிக்கு அருகில் முகாமிட்டிருந்தனர். அப்போது அவர்கள் நபர் ஒருவரை ஏற்கெனவே வேறொரு வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு, கள்ள வாக்கு செலுத்த வந்ததாகக் கூறி சுற்றிவளைத்தனர். இந்த தகவலறிந்து அந்த இடத்துக்கு விரைந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அந்த நபரிடம் வாக்குவாதம் செய்தார்.
பின்னர், அங்கிருந்த அதிமுகவினர் அவரை சிலர் தாக்க தொடங்கினர். அப்போது, பிடிபட்ட நபரை அடிக்க வேண்டாம் என்றும் அவரது கையை கட்டும்படியும் ஜெயக்குமார் கூறினார். அந்த நபரின் சட்டை கழற்றப்பட்டு அவரது கைகளும் கட்டப்பட்டன. இதனையடுத்து, அதிமுகவினர் அந்த நபரின் சட்டையைக் கழற்றி அவரை அரை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்றனர்.
‘வேற வார்டை சேர்ந்த உனக்கு இங்கு என்ன வேலை என்றும், திமுகவைச் சேர்ந்த நீ எத்தனை கள்ள வாக்குகளை போட்டாய்’ என்றும் அவரிடம் ஜெயக்குமார் கேள்வி கேட்டார். இதை தொடர்ந்து, ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். நபர் ஒருவரை சட்டையை கழற்றவைத்து ஊர்வலமாக அழைத்து சென்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலானது. ஒரே முன்னாள் அமைச்சரே ரவுடி போல இப்படி நடந்து கொண்டது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.