நாட்டிலேயே பெட்ரோல் விலை குறைப்புக்கு ரோடு போட்டது திமுகதான்.. அசராமல் அடிக்கும் முத்தரசன்..!

By Asianet TamilFirst Published Nov 5, 2021, 7:54 PM IST
Highlights

பா.ஜ.க அரசின் வரிக் குறைப்பு, முதுகை உடைக்கும் தாங்க முடியாத சுமையால் மூச்சுத்திணறும் ஒட்டகத்தை ஏமாற்ற கோழி இறகை எடுத்துக் காட்டும் ஒட்டகக்காரனை போல், மக்களை ஏமாற்றும் வேலையில் ஈடுபட்டு வருவதால் பாதிக்கப்பட்ட மக்களின் கோபத்தில் இருந்து தப்பி விட முடியாது.

நாட்டில் முதன் முறையாக தமிழ்நாடு அரசு தனது மதிப்புக் கூட்டு வரியைக் குறைத்து, மக்களுக்கு உதவியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு தீபாவளி பரிசாக பெட்ரோல் லிட்டர் ரூ.5, டீசல் லிட்டர் ரூ.10 குறைத்தது. மத்திய அரசின் கலால் வரியைக் குறைத்ததன் மூலம் இந்த விலை குறைப்பை மத்திய அரசு செய்தது. இதனையடுத்து பாஜக ஆளும் மாநில அரசுகள், வரிசையாக பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கும் வகையில் விற்பனை வரி, வாட் வரியை குறைத்தன. இந்நிலையில் மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை குறைப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விமர்சனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பா.ஜ.க மத்திய அரசு கடந்த 04.11.2021- ஆம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் லிட்டருக்கு ரூ.10-ம் கலால் வரிக் குறைப்பு அறிவித்துள்ளது. இதனையொட்டி பா.ஜ.க.வும், அதன் ஆதரவாளர்களும் பெட்ரோல், டீசல் விலைகள் ஏகமாக சரிந்து விட்டதாக முழங்கி வருகின்றனர். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? கடந்த 36 மாதங்களில் பா.ஜ.க மத்திய அரசு கலால் வரியை ரூ.36 உயர்த்தியுள்ளது. மத்திய அரசின் சுங்கவரி, கலால் வரி உயர்வு காரணமாகவே பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.114- ஐ தாண்டி செல்கிறது. 

டீசல் விலையும் லிட்டர் ரூ.100க்கு உயர்ந்துவிட்டது. தொடர்ந்து உயர்த்தப்படும் எரிபொருள் எண்ணெய் விலை உயர்வின் தாக்கம் நுகர்பொருள் சந்தையில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக காய்கறி, பால் பொருட்கள், உணவு தானியங்கள் உட்பட அனைத்து அத்தியாவசியப் பண்டங்களின் விலைகளும் உயர்ந்து வருகின்றன. சேவைக் கட்டணங்களும் அதிகரித்து வருகின்றன. இதனால், மக்கள் வாழ்க்கைத் தரம் சரிந்து வருவதை ஆய்வு நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இதுபற்றி பா.ஜ.க அரசு சிறிதும் கவலைப்படவில்லை.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு பெட்ரோல் லிட்டர் ரூ.50க்கும், டீசல் ரூ.40க்கும் விற்க முடியும் என சந்தைப் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பா.ஜ.க சிந்திக்கவும் முன்வரவில்லை. நாட்டில் முதன் முறையாக தமிழ்நாடு அரசு தனது மதிப்புக் கூட்டு வரியைக் குறைத்து, மக்களுக்கு உதவியது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக தற்போது சில மாநிலங்கள் மதிப்புக் கூட்டு வரியினை குறைத்துள்ளன.

இந்நிலையில் பா.ஜ.க அரசின் வரிக் குறைப்பு, முதுகை உடைக்கும் தாங்க முடியாத சுமையால் மூச்சுத்திணறும் ஒட்டகத்தை ஏமாற்ற கோழி இறகை எடுத்துக் காட்டும் ஒட்டகக்காரனை போல், மக்களை ஏமாற்றும் வேலையில் ஈடுபட்டு வருவதால் பாதிக்கப்பட்ட மக்களின் கோபத்தில் இருந்து தப்பி விட முடியாது என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு பா.ஜ.க அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறது” என அறிக்கையில் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
 

click me!