சென்னை - சேலம் 8 வழிச்சாலை வேண்டவே வேண்டாம்... நிதின் கட்கரியைச் சந்தித்து திமுக எம்.பி.க்கள் அதிரடி!

By Asianet TamilFirst Published Jul 11, 2019, 9:17 PM IST
Highlights

மக்களைச் சமாதானப்படுத்தி இத்திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று அதிமுக அரசு கூறிவரும் நிலையில், திமுக எம்.பி.க்கள் இத்திட்டத்தை கைவிடக் கோரி மத்திய அமைச்சரை வலியுறுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

சென்னை - சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து திமுக எம்.பி.க்கள் மனு அளித்துள்ளனர். 
சென்னை - சேலம் இடையே 8 வழிச் சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்துவருகின்றன. இந்தத் திட்டத்துக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விவசாய நிலங்களை கையகப்படுத்த தடை விதித்தது. நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் வந்த தீர்ப்பால், மத்திய, மாநில அரசுகள் அமைதியான.
தேர்தலுக்கு பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கு விசாரணை நடந்தபோது, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க   நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில், சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து திமுக எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
இத்திட்டம் நிறைவேற உள்ள தொகுதிகளைச் சேர்ந்த திமுக எம்.பி.க்கள் இந்த சந்திப்பில் ஈடுபட்டார்கள்.  எஸ்.ஆர்.பார்த்திபன் (சேலம்), கவுதம சிகாமணி (கள்ளக்குறிச்சி), செந்தில்குமார் (தருமபுரி), அண்ணாதுரை (திருவண்ணாமலை) ஆகிய எம்.பி.க்கள் இன்று திடீரென்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து வலியுறுத்தினார்கள். அமைச்சரிடம் இதுதொடர்பாகக் கோரிக்கை மனுவையும் அளித்தார்கள்.
மக்களைச் சமாதானப்படுத்தி இத்திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று அதிமுக அரசு கூறிவரும் நிலையில், திமுக எம்.பி.க்கள் இத்திட்டத்தை கைவிடக் கோரி மத்திய அமைச்சரை வலியுறுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!