மாநகராட்சி அதிகாரியை போட்டு பொளந்த திமுக MLA.. ரவுடித்தனத்துக்கு இடமில்ல.. ஆப்பு அடித்த துரைமுருகன்.

By Ezhilarasan BabuFirst Published Jan 28, 2022, 1:24 PM IST
Highlights

சாலையை சுரண்டி எடுத்து விட்டு அதன் மீது சாலை அமைக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை, அது முறையாக பின்பற்றப்படவில்லை, அதனால்தான் ஒப்பந்ததாருக்கும் எனது ஆட்களுக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. அப்போது நான் அந்த இடத்தில் இல்லை, 

திமுக திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி சங்கர் கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான காரணம் குறித்து பகீர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி அதிகாரிகளை அவர் தாக்கியதாக வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் அவரின் கட்சி பதவி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

திமுகவின் மீனவர் அணி செயலாளராகவும் 2006 முதல் 2011 வரை தமிழக மீன்வளத் துறை அமைச்சராகவும் இருந்தவர் கே.பி.பி சாமி, வடசென்னையில் திமுகவின் அசைக்க முடியாத சக்தியாக தொண்டர் அடி படையுடன் வலம்வந்தவர்தான் சாமி, இவர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் ஆதரவாளராகவும் இருந்து வந்தார். ஒரு கட்டத்தில் உடல் நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்தார். அவருக்குப்பின் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அவரின் சகோதரர் கே.பி.பி சங்கருக்கு திருவெற்றியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட திமுக தலைமை வாய்ப்பு வழங்கியது. நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை எதிர்த்து போட்டியிட்ட அவர்,  பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆரம்பம் முதலே கேபிபி சாமி குடும்பத்தின் மீது பல்வேறு புகார்கள் இருந்து வருகிறது.

அதாவது வடசென்னை பகுதியில் ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல் போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் மீது குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இது கட்சிக்கு அவர் பெயரையும் ஏற்படுத்துவதாக பலமுறை திமுக தலைவர் ஸ்டாலினே சாமியை எச்சரித்து வந்துள்ளார். சாமியின் மறைவுக்குப்  பிறகும் இப்போது அவரது சகோதரர்கள் அதே பாணியை பின்பற்றி வருகின்றனர் என கூறப்படுகிறது. இந்நிலையில்தான் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடியான வெளியிட்டுள்ள அறிக்கையில் திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி ஷங்கர் திருவொற்றியூர் மேற்கு பகுதி கழக செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சங்கர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கேபிபி சாமியின் மீதான இந்த நடவடிக்கை அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேபிபி சங்கர் பதவி பறிக்கப்பட்டதற்கு பின் பல காரணங்கள் இருந்தாலும் ரோடு போடும் காண்ட்ராக்ட் பணியில் மாநகராட்சி அதிகாரியை அவர் தாக்கியதே அவரின் கட்சி பதவி  பறிக்கப்பட்டதற்கான உடனடி காரணம் என தெரியவந்துள்ளது.  அதாவது திருவொற்றியூர் மண்டலத்தில் பல்வேறு சாலைகள் அமைக்கும் பணிக்கு 3 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டு மாநகராட்சியின் மேற்பார்வையில் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை 1:30 மணி அளவில் நடராஜன் கார்டன் முதல் தெரு, 2வது மற்றும் 3வது தெரு ஆகிய இடங்களில் 30 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. 

அப்போது திடீரென தனது அடியாட்களுடன் வந்த எம்எல்ஏ கே.பி.பி சங்கர் பணிகளை உடனே  நிறுத்தும்படி கூறியுள்ளார், அப்போது இந்த பிரச்சினையில் சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் தலையிட எம்எல்ஏ சங்கர் மற்றும் அவரது அடியாட்கள் உதவி பொறியாளரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.மேலும் அங்கு சாலை அமைக்க தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 13 லாரி ரோடு கலவையையும் அவர்கள் வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனால் பயந்து மன உளைச்சலுக்கு ஆளான மாநகராட்சி உதவி பொறியாளர் வியாழக்கிழமை விடுப்பில் சென்றுள்ளார். பின்னர் இந்த விவகாரம் கட்சித் தலைமைக்கு தெரியவந்த நிலையில்தான் கேபிபி சங்கரின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு பேசியுள்ள உதவி பொறியாளர், கூறியிருப்பதாவது:- புதன் கிழமை அதிகாலை சாலை அமைக்கும் பணி நடந்து கொண்டு இருந்தது.

அந்த இடத்தில் நாங்கள் மேற்பார்வையில் ஈடுபட்டிருந்தோம் அப்போது அங்கு வந்த எம்எல்ஏ சாலை அமைக்கும் பணி நடக்கக்கூடாது என சொல்லியும் ஏன் நடக்கிறது என ஆவேசம் கேட்டார், அப்போது அவரும் அவரது ஆட்களும் எங்கள் அனைவரையும் சரமாரியாக தாக்கினர். என்ன செய்வது என்று தெரியாமல் உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துவிட்டு நான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன், அதன்பிறகு தொலைபேசியில் அழைத்த எம்எல்ஏ என்னிடம் மன்னிப்பு கேட்டார். பிறகு பணி செய்ய அவர் ஒப்புக்கொண்டார் எனக் கூறியுள்ளார்.

இதேபோல் இது குறித்து விளக்கம் அளித்துள்ள எம்எல்ஏ கேபிபி சங்கர், தானும் தனது ஆட்களும் யாரையும் அடிக்கவில்லை, எனது ஆட்கள் சம்பவ இடத்திற்கு சென்று பணியை நிறுத்தியது உண்மை தான். ஆனால் அந்த சாலை அமைக்கும் பணி முறையாக செய்யப்படவில்லை, சாலையை சுரண்டி எடுத்து விட்டு அதன் மீது சாலை அமைக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை, அது முறையாக பின்பற்றப்படவில்லை, அதனால்தான் ஒப்பந்ததாருக்கும் எனது ஆட்களுக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. அப்போது நான் அந்த இடத்தில் இல்லை, ஆனால் இந்த விவகாரத்தில் லஞ்சம் மற்றும் கமிஷன் கேட்டு தகராறு நடந்தது என கூறப்படுவது முற்றிலும் தவறானது என அவர் கூறியுள்ளார். 

இதேபோல் சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையர் (வடக்கு) சிவகுரு பிரபாகரன் இதுகுறித்து கூறுகையில், இந்த பிரச்சனை எப்படி நடந்தது, காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகிறோம். ஆனால் சாலை அமைக்கும் பணியில் பிரச்சனை இருக்கிறது என்பது குறித்து எங்கள் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து இருக்கிறோம், மாநகராட்சி பொறியாளர் தாக்கப்பட்டுள்ளார் என்பது இதுவரை எனக்கு தெரியாது. ஆனால் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பேன் என அவர் கூறியுள்ளார்.

அதாவது வட சென்னை மற்றும் திருவெற்றியூர் என்றாலே கேபிபி சாமி மற்றும் அவர்களின் சகோதரர்களின் ஆதிக்கம், அட்ராசிட்டிதான் என்பது அனைவருக்கும் தெரியும்.  அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரியை எம்எல்ஏ கேபிபி சங்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது. ஏற்கனவே திமுக ரவுடியிசம், அராஜக கட்சியென எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்துவரும் நிலையில், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அதிகாரியை தாக்கியது மற்றவர்ளுக்கு தெரிந்தால் திமுகவின் இமேஜை டேமேஜ்ஆக வாய்ப்புள்ளது என்பதை அறிந்த தலைமை, அந்த சட்டமன்ற உறுப்பினரின் பதவியை பறித்து நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

click me!