கூட்டணி தர்மத்திற்கு எதிராக செயல்படும் திமுகவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மிகப் பெரிய அளவிலான வெற்றியை பெற்றது. இந்த வெற்றி திமுகவிற்கு ஒரு பக்கம் தனது செல்வாக்கை உயர்த்தியிருந்தாலும் கூட்டணி கட்சியினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.திமுக தலைமையிலான கூட்டணியில் 21 மாநகராட்சியையும், 132 நகராட்சி மற்றும் 455 பேரூராட்சிகளையும் கைப்பற்றியது. இந்தநிலையில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பெரும்பாலான இடங்களில் திமுகவினரே போட்டியிட்டு வெற்றிபெற்றனர். இதன் காரணமாக காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் உள்ளிட்டோர் கடும் அதிருப்தி அடைந்தனர். இந்த விஷயத்தில் திமுக தலைமை உடனடி நடவடிக்கை எடுக்கம் படி கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் உடனடியாக கூட்டணி கட்சிகளுக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவினர் ராஜினாமா செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். தமிழகம் முழுவதும் ஒரு சில இடங்களில் மட்டுமே திமுகவினர் ராஜினாமா செய்தனர். பெரும்பாலான இடங்களில் ராஜினாமா செய்ய மறுத்துள்ளனர். இதனால் திமுக தலைமை மட்டுமில்லாமல் கூட்டணி கட்சியினரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
undefined
அல்லிநகரம், நெல்லிகுப்பம்,காங்கேயம், பொன்னேரி,மீஞ்சூர்,பெ.மல்லாபுரம் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் கூட்டணி கட்சியை எதிர்த்து போட்டியிட்டவர்கள் ராஜினாமா செய்ய மாட்டோம் என பிடிவாதமாக உள்ளனர். பெரும்பாலான இடங்களில் நகராட்சி மற்றும் பேரூராட்சியில் தாங்கள் தான் தலைவர் என்று வாக்குறுதி அளித்ததால் பல கோடி ரூபாய் வரை செலவு செய்ததாகவும், மேலும் தேர்தலில் தனக்கு மட்டும் இல்லாமல், தேர்தலில் போட்டியிட்ட மற்ற வேட்பாளருக்கும் சேர்த்து செலவு செய்ததாக கூறினர்.இந்த நிலையில் தலைமை கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே தங்களுக்கு கட்சியே வேண்டாம் எனவும் நடவடிக்கை எடுத்தால் எடுக்கட்டும் என பேச தொடங்கியுள்ளனர். இதனால் திமுக தலைமை என்ன செய்வதென்று தெரியாத நிலையில் உள்ளனர். மாவட்ட செயலாளர்கள் வெற்றி பெற்ற தலைவர் மற்றும் துணை தலைவரிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த வித முன்னேற்றமும் இல்லாத காரணத்தால் அந்த நிர்வாகியின் பட்டியலை திமுக தலைமைக்கு அனுப்பும் பணியை தொடங்கியுள்ளனர்.
இந்தநிலையில் திமுகவினரின் கூட்டணி தர்மத்தை மீறியுள்ளதாக கூறி பெ.மல்லாபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். கூட்டணியில் தங்களது கட்சிக்கு பெ.மல்லாபுரம் பேரூராட்சி ஒதுக்கீடு செய்யப்பட்டதாவும் ஆனால் கூட்டணி தர்மத்தை மீறி திமுகவை சேர்ந்த சாந்தி புஷ்பா எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்றதாக விடுதலை சிறுத்தை கட்சியினர் தெரிவித்தனர். இதனையடுத்து பேச்சுவார்த்தை நடத்தியும் பதவி விலக மறுப்பதால் தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர் பதவியை விட்டு விலகவுள்ளதாக கவுன்சிலர் சின்னவேடி தெரிவித்துள்ளார். இதனையடுத்து தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடிக்கு சென்ற போது மீண்டும் கட்சி நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. ஏதோ கூட்டணி கட்சியில் இருப்பவர்களை திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காகவோ, அல்லது தவறு செய்தவர்களை மிரட்டுவதற்காகவோ கூறவில்லையென்று தெரிவித்தார். எனவே எச்சரிக்கை விடுத்தது போல் பதவி விலகவில்லையென்றால், தவறை உணர்ந்து திருந்தவில்லையென்றால் உரிய நடவடிக்கை நிச்சயமாக எடுப்பேன் என ஸ்டாலின் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே திமுக தலைமை விடுத்த எச்சரிக்கையை கண்டுகொள்ளாத எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் மீண்டும் முதல்வரின் கருத்தை கேட்பார்களா என்பது கேள்வி குறியாக உள்ளது.