டெல்லியில் ஸ்டாலின்! கில்லியாய் பாய்வாரா? கிலியடித்து பதுங்குவாரா? தி.மு.க.வில் பரபர விவாதம்!

By vinoth kumarFirst Published Dec 10, 2018, 1:39 PM IST
Highlights

திராவிட கருணாநிதி எப்படி தன் மருமகனும், கார்ப்பரேட் லுக் உடையவருமான மாறனை தன் நிழலாக டெல்லியில் உலவ விட்டாரோ அதேபோல் ஸ்டாலினும் தன் மருமகன் (மகள் செந்தாமரையின் கணவர்) சபரீசனை தன் நிழலாக டெல்லியில் வளையவரவைப்பார் என்கிற பேச்சும் அடிபடுகிறது. கவனிப்போம்!

ஆடு மேய்ச்சபடியே அண்ணனுக்கும் பொண்ணு பார்க்கிறேன்! லாஜிக்கில் டெல்லிக்கு போய் இறங்கியிருக்கிறார் ஸ்டாலின். கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை சோனியா, ராகுலை நேரில் சந்தித்து வழங்கியதோடு நேற்று சோனியாவின் பிறந்தநாளுக்கும் வாழ்த்து கூறிவிட்டார். 

இது ஒரு அஜெண்டாவாக இருக்க, நாடாளுமன்ற வளாகத்தினுள்ளேயே பி.ஜே.பி.க்கு எதிராக எதிர்கட்சிகள் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வதுதான் மிக முக்கிய குறிக்கோளாகவும் இருந்தது. 

தி.மு.க.வின் தலைவரான பிறகு டெல்லியில் வலம் வரும் ஸ்டாலினின் அரசியல் கில்லியாக பாயுமா? அல்லது கிலி கொண்டு பதுங்குமா! என்பதுதான் தி.மு.க.வினுள் பெரும் விவாதமாய் போய்க் கொண்டிருக்கிறது. இந்திராகாந்தி காலத்திலேயே டெல்லி அரசியலை கலக்கிய பெருமை கருணாநிதிக்கு உண்டு. எமர்ஜென்ஸியை ஏக தீரத்துடன் எதிர்த்து அந்த இரும்பு மனுஷியை நெளிய வைத்தது தி.மு.க. கருணாநிதியின் மனசாட்சியாக டெல்லியில் வலம் வந்தது அவரது அக்காள் மகன் முரசொலி மாறன் தான். மாறனின் சாணக்கிய அரசியல் மூலமாக தேசிய அளவில் தி.மு.க. சாதித்தவை பல. 

ஆனால் மாறனுக்குப் பிறகு தி.மு.க.வுக்கு டெல்லியில் ஏற்றிருக்கும் வெற்றிடத்தை யாராலும் நிரப்ப இயலவில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. மாறனின் மகன் தயாநிதி மத்தியமைச்சராகவே போய் அமர்ந்தார். ஆனால் ஜொலிக்கவில்லை. சட்ட நுணுக்கங்களுடன் பேசக்கூடிய மிகச்சிறந்த அரசியல்வாதியான ஆ.ராசாவாலும் சோபிக்க முடியவில்லை. 2ஜி வழக்கை வாங்கிக்கட்டி கட்சியின் ஸ்திரத்தன்மைக்கு பலகீனத்தை உருவாக்கியதும், அவ்வழக்கில் தானே ஆஜாராகி வாதாடி ஜெயித்து கட்சியின் மானத்தை மீட்டெடுக்கவும்தான் அவருக்கு போதுமனாதாக இருந்துவிட்டது நேரம்.

 

கருணாநிதியின் மகளாக ராஜ்யசபா வழியே எளிதாக டெல்லியில் வலம் வரும் கனிமொழியால் அரசியல் லாபி எதையும்  செய்ய முடியவில்லை. இதுவரையில் ராஜ்யசபாவில் அவர் ஆற்றிய சில உரைகள் கவனிக்கப்பட்டன என்பதைத்தாண்டி எந்த எழுச்சியுமில்லை. திருச்சி சிவாவால் ஆன பயனென்ன? என்பது யாவரும் அறிந்ததே. ஆக சூழல் இப்படி இறுக்கமாக இருக்கும் நிலையில் டெல்லியில் வலம் வந்திருக்கிறார் ஸ்டாலின். கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கு சோனியா குடும்பத்திலிருந்து ஒருவரை வரவழைத்தால் மட்டுமே அவரது டெல்லி அரசியல் பாதி வெற்றி என்று அர்த்தம். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி இனி நடைபெற இருக்கும் எதிர்கட்சிகளின் ஆட்டங்களில் தி.மு.க.வுக்கும் பிரதான முக்கியத்துவம் வழங்கப்பட்டால் மட்டுமே ஸ்டாலினுக்கு தேசிய அரசியலில் தேஜஸ் இருக்கிறதென்று அர்த்தம். 

இவை இரண்டும் சாத்தியப்படுகிறதா? என்று பொறுத்திருந்து கவனிப்போம். அதேவேளையில், திராவிட கருணாநிதி எப்படி தன் மருமகனும், கார்ப்பரேட் லுக் உடையவருமான மாறனை தன் நிழலாக டெல்லியில் உலவ விட்டாரோ அதேபோல் ஸ்டாலினும் தன் மருமகன் (மகள் செந்தாமரையின் கணவர்) சபரீசனை தன் நிழலாக டெல்லியில் வளையவரவைப்பார் என்கிற பேச்சும் அடிபடுகிறது. கவனிப்போம்!

click me!