
அரசியல் ஆதாயத்திற்காக திமுக தலைவர் கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்காமல் 2 ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் ஸ்டாலின் வைத்தாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
நீலகிரி மக்களவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து குன்னூரில் முதல்வர் பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில் தான் அரசியலில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக திமுக தலைவர் கருணாநிதியை 2 ஆண்டுகளாக ஸ்டாலின் வீட்டு சிறையில் வைத்திருந்தார். கருணாநிதியை வீட்டில் அடைத்து வைத்து திமுக தலைவராக பொறுப்பேற்றார் ஸ்டாலின்.
அவருக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்திருந்தால் நன்றாக பேசி இருப்பார் என அவர்களின் கட்சியினரே கூறுகிறார்கள். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர் கொடநாடு விவகாரம் தொடர்பாக ஸ்டாலின் பொய் பேசுகிறார். கொடநாடு கொலை சம்பவம் தொடர்பாக இனி ஸ்டாலின் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
நீலகிரி தொகுதிக்கு இதுவரை ஆ.ராசா எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. நீலகிரி மாவட்டத்தை முன்னிலைப்படுத்த பல திட்டங்களை வகுத்தவர் ஜெயலலிதா என கூறினார். திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார் என்று மு.க.ஸ்டாலின் கூறி வந்த நிலையில், கருணாநிதி வீட்டு சிறையில் வைக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
நேற்று திண்டுக்கல்லில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து ஓட்டச்சத்திரம் பகுதியில் முதலமைச்சர் வாக்கு சேகரித்தார். அப்போது மு.க.ஸ்டாலின் மரியாதை கொடுத்து பேசாவிட்டால் காது ஜவ்வு கிழிந்துவிடும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.