புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: திமுகவில் கொலை, கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய லோக்கல் ரவுடிக்கு சீட்டு..!

By karthikeyan VFirst Published Mar 10, 2021, 8:14 PM IST
Highlights

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் திமுகவில் ரவுடி செந்திலுக்கு சீட்டு வழங்கப்படவுள்ளது.
 

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு, பெரும்பான்மையின்றி ஆட்சிக்காலம் முடிவதற்குள்ளாகவே கவிழ்ந்த நிலையில், ஏப்ரல் 6ம் தேதி புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது.

புதுச்சேரியில் ஆட்சியமைக்க தீவிரம் காட்டும் பாஜக, அதிமுக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுடன் வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஆட்சியமைக்கும் என தெரிவிக்கின்றன.

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப்பங்கீட்டில் இழுபறி நீடித்துவருகிறது. விரைவில் தொகுதிப்பங்கீடு உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், திமுகவில் ரவுடி ஒருவருக்கு புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி ஒதுக்கப்படவுள்ளது.

புதுச்சேரி தட்டஞ்சாவடி பகுதியை சேர்ந்த தட்டாஞ்சாவடி செந்தில் என்பவர் பல்வேறு கொலை, கொள்ளை, நில அபகரிப்பு வழக்குகளில் சிக்கிய ரவுடி. குண்டர் சட்டத்தில் கைதாகி அண்மையில் தான் ரிலீஸானவர். என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்துவந்த ரவுடி செந்தில், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காலாப்பட்டு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். 

புதுச்சேரியில் பெரும்பான்மையாக உள்ள சமூகத்தை சேர்ந்த ரவுடி செந்தில், அந்த குறிப்பிட்ட சாதி அமைப்பு ஒன்றையும் நடத்திவருகிறார். எனவே அந்த சாதி ஓட்டுக்களின் மூலம் வென்றுவிட முடியும் என நம்பி, காலாப்பட்டு தொகுதியில் போட்டியிட விரும்பினார்.

ஆனால் காலாப்பட்டு தொகுதியை ரவுடி செந்திலுக்கு என்.ஆர்.காங்கிரஸால் ஒதுக்க முடியவில்லை. என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணியில் இருக்கும் நிலையில், என்.ஆர்.காங்கிரஸிலிருந்து பாஜகவிற்கு தாவிய கல்யாணசுந்தரம் பாஜக சார்பில் காலாப்பட்டு தொகுதியில் போட்டியிட இருப்பதால், என்.ஆர்.காங்கிரஸால் ரவுடி செந்திலுக்கு அந்த தொகுதியை ஒதுக்க முடியவில்லை.

அதனால், என்.ஆர்.காங்கிரஸில் இருப்பதில் பலனில்லை என்பதை அறிந்து, திமுகவில் தனக்கு காலாப்பட்டு தொகுதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்த ரவுடி செந்தில், திமுகவில் இணைந்தார். திமுக - காங்கிரஸ் கூட்டணி தொகுதிப்பங்கீடு உறுதியாகவில்லை என்றாலும், காலாப்பட்டு தொகுதி ரவுடி செந்திலுக்குத்தான் என்பது உறுதியாகிவிட்டது. 

ஏற்கனவே திமுக - காங்கிரஸ் கூட்டணி மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தியில் இருப்பதால், பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்நிலையில், கொலை, கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர் மட்டுமல்லாது, மக்களை மிரட்டி நில அபகரிப்பு செய்யும் ரவுடிக்கெல்லாம் திமுக சீட்டு கொடுப்பதால், மொத்தமாக வேட்டுவைக்க புதுச்சேரி மக்கள் தயாராகிவிட்டார்கள்.
 

click me!