
ஓபிஎஸை மீண்டும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை என்றும், விஜய்க்கு அரசியல் அனுபவமில்லை என்றும் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியார்களை சந்தித்தார், அப்போது, அதிமுகவில் இணைய நான் தயாராக இருக்கிறேன் என்கிறாரே ஓபிஎஸ்? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி பதிலளித்த இபிஎஸ், ‘‘பலமுறை சொல்லிவிட்டேன். உங்களுக்கு விறுவிறுப்பான செய்தி வேண்டும் என்பதற்காக கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இன்றைக்கா கேட்கிறார்? நான்காண்டுகளாக இதையே தான் கேட்டுக்கொண்டு இருக்கிறார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவின்படி அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதனால் கட்சியில் சேர்ப்பதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை.
அவர் புதுக் கட்சியும் தொடங்கும் விருப்பமில்லை என்கிறார். அதுபற்றி நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், 2500க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றாக கூடி பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு.
சரத்குமார் உள்ளிட்டோர் கூட்டணி ஆட்சி அமையும் என்கிறார். அவர்கள் எல்லாம் தலைவர்கள் இல்லை. அன்புமணி எல்லாம் சொல்லவில்லை. சரத்குமார் தலைவர் அல்ல. கட்சி வளர்வதற்காக, ஆர்வமாக செயல்படுவதற்காக அப்படிச் சொல்வார்கள். எங்களுடைய நிலைப்பாடு, நான் ஏற்கனவே பலமுறை சொல்லிவிட்டேன். அதிமுக தான் ஆட்சி அமைக்கும்.
தேமுதிகவோடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை. மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுசெய்யப்பட்ட பின்னர் உங்களுக்கு முறைப்படி அறிவிக்கப்படும். நிறைய கட்சிகளுடன் பேச்சு நடக்கிறது. அதையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க முடியுமா..?
தொடர்ந்து ஸ்டாலின் பெண்களுக்குப் பாதுகாப்பு இருப்பதாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனால் நேற்றைக்குக் கூட வடமாநில பெண் குடும்பத்துடன் கொல்லப்பட்டிருக்கிறார். வரும்போது ட்வீட் போட்டுவிட்டுத்தான் வந்திருக்கிறேன். தினமும் நடக்கிறது. பாலியல் சீண்டலை இந்த ஆட்சியில் கண்டுகொள்ளவில்லை. பத்திரிகை, ஊடகங்களில் வரும் செய்திகளை வைத்துதான் சொல்கிறோம்.
அழுத்தத்தினால் ஏற்பட்ட கூட்டணி என்று தேசிய ஜனநாயக கூட்டணியை விமர்சிக்கிறார்கள். கூட்டணி அமையவில்லை என்றால் வரவில்லை என்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி கடையை விரித்துவைத்திருக்கிறார் யாரும் வரவில்லை என்கிறார்கள். கூட்டணி அமைந்த பின்னர் அழுத்தம் என்கிறீர்கள். வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புகின்றனர். தெளிவாக நாங்கள் பேட்டி கொடுத்துவிட்டோம். பிரதமர் மோடி அழகாகப் பேசினார். கூட்டம் முடிந்து கூட்டணித் தலைவர்கள் எல்லோரும் பேட்டி கொடுத்துவிட்டோம்.
எல்லாக் கட்சிகளும் கூட்டணிக்குள் வந்த பின்னர் தான் தொகுதிப் பங்கீட்டுக்குச் செல்ல முடியும். இன்னும் சில கட்சிகளுடன் பேசிக்கொண்டு இருக்கிறோம் அந்தக் கட்சிகளையெல்லாம் ஒருங்கிணைத்த பின்னர் தொகுதிகள் பிரிக்கப்படும். நாங்கள் 210 இடங்களில் வெல்வோம்.
தேர்தல் பிரசாரத்தில் எந்தெந்த கருத்துகளை அதிமுக முன்வைக்க இருக்கிறது என்பதை முன்பே சொல்ல முடியாது. ஒரு சிலவற்றைத் தான் சொல்ல முடியும். அப்புறம் அதற்கு வேல்யூ இல்லாமல் போய்விடும். திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று பொதுமக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மாற்று என்றால் அதிமுக தான். அதிமுக ஆட்சியில் அம்மா இருக்கும்போதும், நான் இருக்கும்போதும் சிறப்பான திட்டம் கொடுத்தோம் என்பதற்கு இந்த மாவட்டமே சாட்சி.
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறோம். ஆனால், திமுக ஆட்சி அப்படியல்ல, தினந்தோறும் போட்டோ ஷூட் எடுப்பார்கள், தினந்தோறும் பெயர் வைப்பார்கள். அந்தப் பெயரோடு அன்றைய தினம் முடிந்துவிடும். அதேபோல் ஒரு திட்டத்தை அறிவித்து அதற்கு ஒரு குழு அமைத்துவிடுவார்கள். அதற்கு ஒரு தலைவர் போடுவார்கள், 52 குழு போட்டுள்ளனர், அதோடு ஒன்றும் நடக்கவில்லை. குழுவின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்டால் கொடுப்பதில்லை. வெற்று அறிவிப்பு விட்டு, கவர்ச்சிகரமாக திட்டத்தை அறிவித்து மக்களை ஏமாற்றுகிறது.
பல்வேறு துறைகளில் ஊழல் நடந்திருக்கிறது. எந்தெந்த துறைகளில் ஊழல் நடந்திருக்கிறது என்று பட்டியலிட்டு ஆளுநரிடம் மனு அளித்திருக்கிறோம். இதுவரை 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது. அதுமட்டுமில்ல, இன்னொரு வேதனையான செய்தி, 2026-27ம் நிதியாண்டின் நெடுஞ்சாலைத்துறைக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியில் இருந்து விதிமுறைகளை மீறி இந்த மாதமே 2 ஆயிரம் கோடி ரூபாய் சாலைப் பணிக்கு ஜனவரி மாதம் ஒப்பந்தம் இட்டுள்ளனர். அதாவது, 2026-27 நிதியாண்டில் சட்டமன்றத்தில் வைத்து அதற்கு ஒப்புதல் வாங்கி அதன்பிறகு தான் ஒதுக்க முடியும். அடுத்து யார் ஆட்சிக்கு வருகிறார்களோ அவர்கள் தான் நிதி ஒதுக்க முடியும். இந்த ஆட்சியில் அதைக் கூட கடைப்பிடிக்காமல் விதிகளை மீறியுள்ளனர். எந்த ஒரு அச்சமும் இல்லாமல் தைரியமாக ஊழல் செய்யும் அரசாங்கம் திமுக அரசு தான்.
மேலும், 650 கோடி ரூபாய்க்கு கிராம சாலைகள் ரினீவ் பண்ண வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். இதெல்லாம் விதிமுறைக்குப் புறம்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டது அதனால் இப்படியெல்லாம் வெளியிட்டிருக்கிறது. அதிமுக ஆட்சி அமைந்ததும் இதுபோன்று விதிமுறைக்கு முரணாக டெண்டர் விட்ட ஒப்பந்தங்கள் எல்லாம் ரத்து செய்யப்படும்’’ என்றார்.
ஏற்கனவே நடத்தப்பட்டக் கருத்துக்கணிப்பில் மீண்டும் திமுகதான் ஜெயிக்கும் என்று தகவல் வந்தது. உங்கள் கூட்டணி பலமாகிவிட்டது என்று அடிப்படையில் வெற்றி எப்படி அமையப்போகிறது? என செய்தியாளர்கள் கேட்டதற்கு. ‘‘தயவுசெய்து ஊடக நண்பர்கள் நல்ல செய்தியாக போடுங்கள். நீங்கள் போட்டீர்கள் என்றால் நாங்கள் ஜெயித்துவிடுவோம். ஒன்றுமே செய்யாத அரசாங்கத்தைத் தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். கூடுதலான செய்தியைப் போடச் சொல்லவில்லை. நாட்டில் நடக்கும் உண்மைச் செய்தியை வெளியிட்டாலே போதும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துவிடும். திமுக போல பூஸ்ட் பண்ணி போடச் சொல்லவில்லை. நாங்கள் திறமையாக ஆட்சி செய்தோம் மக்களிடம் நல்ல பெயர் இருக்கிறது. திமுக அரசு ஊழல் நிறைந்த அரசாக மக்களின் பார்வைக்குப் போய்விட்டது. எந்த திட்டமும் நிறைவேறவில்லை. உதாரணத்துக்கு சேலத்தில் எதுவுமே செய்யவில்லை. மக்கள் கம்பேர் பண்ணத் தொடங்கிவிட்டனர். தேர்தல் நெருங்க நெருங்க அதிமுகவின் வெற்றி பிரகாசமாகிறது.
திமுக கூட்டணியில் விரிசல் வந்துவிட்டதே விரிசல். நீங்கள் தான் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நேற்று கூட கனிமொழி சென்று ராகுலை சந்திக்கிறார். எதற்காக சந்திக்கிறார்..? எங்களைச் சொன்னார்கள் எடப்பாடி பழனிசாமி டெல்லி அடிமை என்றார்கள். யார் அடிமை? நாங்கள் அடிமை இல்லை. திமுக தான் அடிமை. இன்று அங்குபோய் கெஞ்சும் நிலைக்கு வந்துவிட்டது திமுக. குழப்பம் வந்துவிட்டது அல்லவா?
திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா என்று தடுமாறிக்கொண்டிருக்கிறது. திமுக நிர்வாகிகளும் சரி, காங்கிரஸ் நிர்வாகிகளும் சரி தினந்தோறும் பத்திரிகையில் மாறி மாறி தாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். விரிசல் நிலைக்கு போய்விட்டது. அதிமுக அலுவலகம் அமித் ஷா வீட்டு அருகில் இருக்கிறது என்றார்கள், இப்போது திமுக அலுவலகம் தான் டெல்லிக்குப் போய்விட்டது. அதுமட்டுமில்லை, தேர்தல் அறிக்கைதான் கதாநாயகி என்றார் கனிமொழி, 2021 தேர்தல் அறிக்கையும் கனிமொழி தானே தயாரித்தார், ஏன் நிறைவேற்றவில்லை? நேற்று கூட ஸ்டாலின் தஞ்சைக்கு செல்லும்போது விவசாயிகள் போராட்டம் நடத்தி கைது செய்யும் நிலைக்குச் சென்றுவிட்டனர். மக்களைப் போய் சந்திக்க முடியவில்லை.
அதிமுக - திமுக என்ற நிலை மாறி விஜய் தேர்தலில் ஒரு முக்கியப் பங்கு வகிப்பார் என்கிறார்கள். என்ன பங்கு வகிப்பார்? வந்தால் தானே தெரியும். டிஆர்பி ரேட்டுக்காக அவரை காட்டிக்கொண்டு இருக்கிறீர்கள். அதிமுக பொன்விழா கண்ட கட்சி, 32 ஆண்டு காலம் ஆட்சி செய்த கட்சி. மத்திய அரசில் இருந்து மாநில அரசு வரை என்னென்ன திட்டங்களை நிறைவேற்றி அதன்மூலம் தமிழகம் எந்தளவுக்கு உயர்ந்திருக்கிறது என்று பளிச்சென்று சொல்கிறோம். அவரால் சொல்ல முடியுமா..?
ரசிகர்கள் கூட்டம் வரத்தான் செய்யும். விஜய் சிறந்த நடிகர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், சிறந்த அரசியல்வாதிகள் நாங்கள் தான். மக்களுக்கு சேவை செய்வதும், மக்களுக்குக் குரல் கொடுப்பதும் நாங்கள் தான். இந்த ஆட்சியை எதிர்த்துக் கூடப் பேச முடியவில்லை அவருக்கு. இப்போதுதானே அரசியலுக்கு விஜய் வந்திருக்கிறார், நான் 1974 பொது வாழ்க்கைக்கு வந்தேன். 51 ஆண்டுகாலம் ஆகிவிட்டது.
மக்கள் பிரச்னையை அனுபவ ரீதியாக தெரிந்திருக்கிறோம். ஒரு சாதாரண பிரச்னைக்கே, சாதாரண பிரச்னையில்லை பெரிய கடுமையான பிரச்னைதான், நான் சொன்ன வார்த்தை தவறு. இன்று 41 உயிர்களை இழந்துவிட்டோம். யாருக்காக உயிர் இழந்தார்கள், அவருடைய பேச்சைக் கேட்க வந்த கூட்டம். என்ன செய்திருக்க வேண்டும்? நேரடியாக அங்கு சென்றிருக்க வேண்டும், நாங்கள் எல்லாம் போகவில்லையா? இந்தக் கட்சி அந்தக் கட்சி என்றெல்லாம் பார்க்கவில்லை. விலைமதிக்க முடியாத உயிர்கள் போய்விட்டது, அவர்களுக்கு ஆறுதல் சொல்லச் சென்றோம். இவர் சென்று ஆறுதல் கூட சொல்ல முடியவில்லையே அப்புறம் கட்சி நடத்தி என்ன செய்யப் போகிறீர்கள்?
இதுவே அம்மா இருக்கும்போது சுனாமி வந்தது, அதிகாரிகள் எல்லாம் எச்சரிக்கை செய்தார்கள், அதையும் மீறி சென்று பார்த்தார்கள். கஜா புயல் வந்தது எங்களுடைய அமைச்சர்கள் எல்லாம் 3 மாதங்கள் தங்கி, நிவாரணப் பணிகளை மேற்கொண்டு புயல் அடிச்சுவடு இல்லாமல் பார்த்துகொண்டோம். ஒரு அரசு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரி அரசு அதிமுக அரசு. எதையுமே செய்யாமல் திரைப்படத்தில் இருக்கும்வரை சம்பாதித்தீர்கள். விட்டுவிட்டு வந்த பின்னர் பல்லாயிரக்கணக்கான கோடி விட்டு வந்தேன் என்கிறீர்கள். யாருக்காக விட்டு வந்தீர்கள்?
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். ரசிகர் பட்டாளம் இருப்பதால் எதையும் பேசிவிட முடியாது. 8 கோடி மக்களின் வாழ்வாதாரப் பிரச்னை. ஒரு அரசு அமைந்தால் எப்படி செயல்பட வேண்டும் என்பதைப் பார்க்க வேண்டும். கொரோனா காலம் வந்தது, கொரோனா காலத்தில் இவரெல்லாம் வீட்டை விட்டு வெளியே வந்திருப்பாரா? நான் 32 மாவட்டத்துக்கு நேரடியாகச் சென்றேன். மருத்துவர்கள் எல்லாம் தடுத்தார்கள். 15 மாவட்டம் சென்று 16வது மாவட்டம் சென்றபோது தமாகா நிர்வாகி ஒருவர் கொரோனாவில் இறந்துவிட்டார். அப்படியிருந்தும் 32 மாவட்டத்துக்கும் நேரடியாகச் சென்றேன். மக்களை சந்தித்தோம். இக்கட்டான காலகட்டம். மக்களைக் காக்க வேண்டும். அப்படியொரு சூழல் வரும்போது எப்படி அவரெல்லாம் சமாளிக்க முடியும்?
இவ்வளவு பலம் வாய்ந்த கட்சியை விடுத்து, தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என்கிறார். ஆயிரத்தெட்டு பேசலாம். இது சுதந்திர நாடு யார் வேண்டுமாலும் கட்சி துவங்கலாம் பேசலாம் அதையெல்லாம் பொருட்படுத்த வேண்டும். ஊடக நண்பர்கள் உங்களுக்குத் தெரியும் ஏதாவது பேசி விறுவிறுப்புச் செய்தி வேண்டும் என்பதற்குக் கேட்கிறீர்கள். எந்தக் கேள்வி கேட்டாலும் பதிலளிக்கத் தயார் அதில் மாற்றுக்கருத்தில்லை. யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. இது அரசாங்கம், அனுபவம் தேவை, அனுபவம் இன்றி செய்யமுடியாது. அதிமுக ஆட்சியில் எம்ஜிஆர் இருந்தார், அவருக்கு பின்னர் அம்மா இருந்தார்கள், அவருக்குப் பிறகு நான் இருந்தேன். எந்தளவுக்கு தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது என்று மற்ற மாநிலத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். இதற்குக் காரணம் அதிமுக ஆட்சி. அதனால் தான் தைரியமாகச் சொல்கிறோம்’’ என்றார்.