திமுக அரசு திருத்தாமல் தவறை தொடர்கிறது... கிருஷ்ணசாமி அதிரடி குற்றச்சாட்டு..!

By Thiraviaraj RMFirst Published Dec 25, 2021, 11:52 AM IST
Highlights

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் முன்னோடித் திட்டமான ஜவாஹர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டக் காலத்தில் இருந்தே இதில் நடக்கிற ஊழல்களைச் சுட்டிக்காட்டி வருகிறேன்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திமுக அரசு திருத்தாமல் தவறை தொடர்கிறது என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து அவர், ‘’இன்றைய நவீன காலத்துக்கேற்ப நகரங்களின் அடிப்படைக் கட்டமைப்புகளையும், இணையம் உள்ளிட்ட நவீன வசதிகளையும் மேம்படுத்துவதற்காகத்தான் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அறிவித்து பல்லாயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியது. ஆனால், அந்த நிதியை தமிழகத்தில் முறையாகப் பயன்படுத்தாமல் கொள்ளையடிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தியதன் விளைவாகவே, நகரங்களின் அடிப்படை கட்டமைப்புகள் அனைத்தும் சீரழிக்கப்பட்டிருக்கின்றன. வீட்டுத்தளங்களைவிட 2 அடி உயரம் கூடுதலாக கழிவுநீர் வாய்க்கால் கட்டியது தொடங்கி பள்ளமான இடத்தில் 20, 30 அடி ஆழத்திற்குள் வணிக வளாகம் கட்டுவது என்று எத்தனையோ சொதப்பல்கள். சும்மா சொல்லவில்லை. தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களில் நானே நேரடியாக ஆய்வுசெய்துவிட்டுத்தான் சொல்கிறேன்.

நகரங்களை நரகமாக மக்கள் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். முன்பு எப்படி கிராமங்களில் இருந்து நகரங்களில் குடியேறினார்களோ, அதேபோல இப்போது நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு இடம்பெயர்கிற சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இந்தத் திட்டங்களை இப்போதே நிறுத்தாவிட்டால், அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் மோசமான விளைவுகள் ஏற்படும்.

நான் கோவையை மையமாக வைத்தல்ல, தமிழ்நாட்டை மையப்படுத்தித்தான் அரசியல் செய்கிறேன். அடுத்து நான் எல்லாம் முடிந்த பிறகுதான் இந்தப் பிரச்சினையைக் கிளப்புகிறேன் என்பதும் தவறு. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் முன்னோடித் திட்டமான ஜவாஹர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டக் காலத்தில் இருந்தே இதில் நடக்கிற ஊழல்களைச் சுட்டிக்காட்டி வருகிறேன். அப்போது வெளிவந்த எங்கள் கட்சியின் வாரப்பத்திரிகையான புதிய தமிழகத்தில்கூட, இதுபற்றி பக்கம் பக்கமாக செய்தி வெளியிட்டிருக்கிறோம்.

இப்போதும்கூட 2004-ம் ஆண்டு முதல் 2021 வரையில் இவ்விரு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, செய்யப்பட்ட பணிகள் அனைத்தையும் ஆய்வு செய்து தவறு செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும், இதற்கென மத்திய அரசு தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றும்தான் கோரிக்கை விடுத்திருக்கிறேன். 90 சதவீதம் பணி முடிந்துவிட்டதாக நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், தூத்துக்குடியில் பள்ளத்திற்குள் வணிக வளாகம் கட்டத் தீர்மானித்தது தான் அதிமுக அரசு, அந்தத் தவறைத் திருத்தாமல் அப்படியே செயல்படுத்துவது திமுக அரசுதான். எனவேதான், தவறான பணிகள் அனைத்தையும் நிறுத்திவைக்க வேண்டும் என்கிறேன்.

தவறுகளைச் சரி செய்ய வேண்டுமே தவிர, தொடரக்கூடாது. அதுதான் மாநகர வெள்ளத்துக்குக் காரணம். சீனா போன்ற நாடுகளில் எல்லாம் 100 மாடி கட்டிடமே கட்டப்பட்டாலும்கூட தவறு என்று தெரிந்தால், அடுத்த கணமே இடித்துத் தரைமட்டமாக்கிவிடுகிறார்கள். இந்தத் தவறுகள் அதிமுக ஆட்சியில் நடந்தாலும், திமுகவினரும் பலன்பெற்றிருப்பதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள். அதில் உண்மையிருக்கும் என்றே தோன்றுகிறது’’ என அவர் தெரிவ்வித்தார்.

click me!