உற்சாகம் இல்லை... எழுச்சி மிஸ்ஸிங்... சம்பிரதாயமாக நடந்து முடிந்த திமுக பொதுக்குழு..!

By vinoth kumarFirst Published Nov 11, 2019, 10:34 AM IST
Highlights

எப்போதுமே திமுக பொதுக்குழுவில் காரசாரமான விஷயங்கள் இருக்காது. நிர்வாக காரணங்களுக்காகவே திமுக பொதுக்குழு கூட்டப்படும். ஆனால் பொதுக்குழுவில் கலைஞர் பேசுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். கலைஞர் பொதுக்குழுவில் ஒரு விஷயத்தை பேசுகிறார் என்றால் அதற்கு கட்சியில் அவ்வளவு முக்கியத்துவம் இருக்கும்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஏற்பாடு செய்யப்பட்ட திமுக பொதுக்குழு எவ்வித பரபரப்பும் இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்துவிட்டது.

எப்போதுமே திமுக பொதுக்குழுவில் காரசாரமான விஷயங்கள் இருக்காது. நிர்வாக காரணங்களுக்காகவே திமுக பொதுக்குழு கூட்டப்படும். ஆனால் பொதுக்குழுவில் கலைஞர் பேசுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். கலைஞர் பொதுக்குழுவில் ஒரு விஷயத்தை பேசுகிறார் என்றால் அதற்கு கட்சியில் அவ்வளவு முக்கியத்துவம் இருக்கும்.

இதே போல் பொதுக்குழுவில் கலைஞர் பேச அனுமதிக்கும் நிர்வாகிகளின் அடிப்படையில் தான் அவர்களின் கட்சி செல்வாக்கு தெரிய வரும். அவ்வளவு எளிதாக யாராலும் திமுக பொதுக்குழுவில் பேசிவிட முடியாது. கலைஞருக்கு நேராகவே பலர் மூத்த நிர்வாகிகளை விமர்சித்த நிகழ்வுகள் எல்லாம் பொதுக்குழுவில் அரங்கேறியுள்ளது. அதைத்தான் உட்கட்சி ஜனநாயகம் என்று கூறி பெருமைப்படுவார் கலைஞர்.

அவர் மறைவுக்கு பிறகு கடந்த ஆண்டு நடைபெற்ற திமுக பொதுக்குழு மிகவும் பரபரப்பாக இருந்தது. காரணம் அந்த பொதுக்குழுவில் தான் ஸ்டாலின் திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு இந்த ஆண்டும் பொதுக்குழு மீதான எதிர்பார்ப்பு எழுந்தது. ஏனென்றால் இந்த முறை திமுகவில், தலைவருக்கு பிறகு அதிகாரம் மிக்க பதவியாக கருதப்படும் பொதுச் செயலாளர் மாற்றம் இருக்கும் என்பது தான்.

ஆனால் இந்த பொதுக்குழுவில் பொதுச் செயலாளர் மாற்றம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதே போல் பொதுக்குழுவில் பேசிய திமுக நிர்வாகிகள் பெரும்பாலும் சம்பிரதாயமான வார்த்தைகளுடன் முடித்துக் கொண்டனர். ஸ்டாலினை புகழ்ந்தும் உதயநிதியை வாழ்த்தியுமே அனைவரது பேச்சும் இருந்தது. யாரும் கட்சியின் தற்போதைய நிலை குறித்து பேசவில்லை. மேலும் இடைத்தேர்தல் தோல்வி குறித்தும் மறந்தும் கூட யாரும் மூச்சுவிடவில்லை.

தோல்வி ஒரு பாடம் தான் என்று வழக்கமான பல்லவியை பாடிவிட்டு சென்றுவிட்டார்கள். ஸ்டாலின் பேச்சிலாவது பரபரப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சென்டிமென்டாக பேசிவிட்டு ஜகாவாங்கிவிட்டார். இடைத்தேர்தல் தோல்வி, விஸ்வரூபம் எடுக்கும் எடப்பாடி பழனிசாமி, நெருங்கும் உள்ளாட்சித் தேர்தல், ரஜினியின் அரசியல் பிரவேசம் என தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.

இந்த நேரத்தில் நடைபெற்ற திமுக பொதுக்குழு இப்படி உப்பு சப்பில்லாமல் முடிந்திருப்பது திமுக தொண்டர்களை மட்டும் அல்லாமல் நிர்வாகிகளையும் கவலை அடையச் செய்துள்ளது.

click me!