விடாமல் துரத்தும் ரூ.25 கோடி... ஓடிப் பதுங்கும் திமுக... விழி பிதுங்கும் இடதுசாரிகள்...! கூட்டணிக்கு ஆபத்து..?

By Selva KathirFirst Published Oct 3, 2019, 10:00 AM IST
Highlights

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக சார்பில் கொடுக்கப்பட்ட ரூ.25 கோடி விவகாரம் தான் தற்போது தமிழக அரசியலின் ஹாட் டாபிக்.

தேர்தல் சமயத்தில் திமுகவிடம் இருந்து இடதுசாரிக்கட்சிகள் ரூ.25 கோடி பெற்ற விவகாரம் எதிர்பார்த்ததை விட மிகத் தீவிரமாக சர்ச்சையாகி வருகிறது.

எதிலும் நீதி நியாயம் பேசுபவர்கள் இடதுசாரிகள். தங்கள் கட்சி ஒரு திறந்த புத்தகம் என்று கூட அவர்கள் கூறிக் கொள்வார்கள். மேலும் வெளிப்படைத்தன்மை வேண்டும், வெள்ளை அறிக்கை வேண்டும் என்று இவர்கள் கூறாத விஷயங்களே இல்லை. இதே போல் கடந்த சில வருடங்களாக எதிர்கட்சியாக இருக்கும் திமுகவும் கூட எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கை கொடுங்கள், விளக்கம் கொடுங்கள் என்று ஆளும் கட்சியை கதறவிட்டு வருகிறது.

இந்த நிலையில் தான் இந்த இரண்டு கட்சிகளுக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் தேர்தல் செலவு விவகாரம் பூதாகரமாகியுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக சார்பில் கொடுக்கப்பட்ட ரூ.25 கோடி விவகாரம் தான் தற்போது தமிழக அரசியலின் ஹாட் டாபிக்.

இந்த விவகாரம் தொடர்பாக இடதுசாரிகள் விளக்கம் அளித்தாலும் அவர்கள் கூறும் பதிலில் வெளிப்படைத்தன்மை இல்லை. உதாரணத்திற்கு இந்தியா முழுவதுமே தேர்தலுக்கு செலவு என்று ரூ.1.25 கோடியைத்தான் கணக்கு காட்டியுள்ளது இடதுசாரிக் கட்சிகள். ஆனால் தமிழகத்தில் மட்டுமே திமுகவிடம் இருந்து ரூ.25 கோடியை பெற்றுள்ளன இடதுசாரிகள்.

மேலும் 25 கோடி ரூபாயும் தமிழகம் முழுவதும் தேர்தலில் செலவழிக்கப்பட்டதாக இடதுசாரிக் கட்சிகள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் செலவுக் கணக்கை காட்டுங்கள் என்றால் நேரம் இருக்கிறது காட்டுவோம் என்கிறார்கள். இங்கு தான் இடதுசாரிகளின் வெளிப்படைத்தன்மை, நேர்மை போன்றவை சந்தேகத்திற்கு உள்ளாக்கப்படுகிறது.

உண்மையில் தேர்தல் செலவுக்கு தான் அந்த பணத்தை வாங்கினார்கள் என்றால் வாங்கிய காரணத்திற்காக அந்த 25 கோடியையும் தற்போது இடதுசாரிகள் செலவழித்திருக்க வேண்டும். மேலும் அதற்கான கணக்கு வழக்குகளையும் பிரச்சனை என்று வந்த பிறகு வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் தற்போது நழுவி ஓடும் வித்தையை இடதுசாரிகள் கையாண்டு வருகிறார்கள்.

இதனிடையே புதிய தலைமுறை தொலைக்காட்சி இந்த விவகாரம் தொடர்பாக ஒரு விவாதத்தை நேற்று நடத்தியது. இதில் இடதுசாரிகள் சார்பில் பங்கேற்ற சிந்தன் பேசிய பேச்சு கொடுத்த விளக்கம் அனைத்துமே அபத்தமாகவும் காமெடியாகவும் இருந்தது. ஆனால் பாஜக சார்பில் பங்கேற்ற நாராயணன் கேட்ட கேள்விகள் இடதுசாரிக்கட்சிகளை நிலை குலைய வைக்கும் வகையில் இருந்தது.

அத்துடன் தேர்தல் செலவுக்குத்தான் பணத்தை வாங்கினார்கள் என்றால் அதற்கான செலவுக் கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் சட்டவிரோதம் தான் என்று நாராயணன் கூறிய போது இடதுசாரிகளின் பிரதிநிதி சிந்தன் முகத்தில் ஈயாடவில்லை. இதில் இன்னொரு வேடிக்கை என்ன என்றால் இந்த விவாதத்தில் பங்கேற்க வருமாறு திமுகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் ஆனால் அவர்கள் வரவில்லை என்றும் புதிய தலைமுறை நெறியாளர் கார்த்திகேயன் உண்மையை போட்டு உடைத்துவிட்டார். ஆக 25 கோடி விவகாரம் என்பது பெரும் தலைவலி ஆகியுள்ள நிலையில் கூட்டணியில் இந்த விவகாரம் எதிரொலிக்கும் என்று பாஜகவினர் ஆனந்த கூத்தாடி வருகின்றனர்.

click me!