எடப்பாடிக்கு இப்படி சொல்ல வெட்கமா இல்ல...? துவைத்துக் கட்டிய துரைமுருகன், வேடிக்கை பார்க்கும் அ.தி.மு.க.!

By Vishnu PriyaFirst Published Jan 10, 2019, 3:16 PM IST
Highlights

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் தேடித்தேடி சிலைகளை கண்டுபிடிக்கிறார். அவருக்கு ஊக்கம் அளிக்க வேண்டியது எடப்பாடி அரசின் கடமை. நீதிமன்றமே மாணிக்கவேலுக்கு அனுமதி வழங்கிய பின்னும் ‘யோக்கியமானவரா?’ என்று அமைச்சர் கேட்கிறார்.

ஏதோ ஆட்சிக்கே வந்துவிட்டது போன்ற கற்பனையில் சில காமெடிகளை செய்து கொண்டிருக்கிறார்கள் தி.மு.க.வினர். அதிலும் ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்பட்டது உச்சக்கட்ட காமெடி! என்று ஸ்டாலின் அண்ட்கோவை வறுத்தெடுக்கிறது அ.தி.மு.க. இந்த காமெடிக்கு ஏற்றபடியே, பல இடங்களில் ஊராட்சி சபை கூட்டமானது ஏக சொதப்பலுக்கு ஆளானதும் உண்மையே. 

ரேஷனில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாயை வாங்கும் வெறியில் இருக்கும் கிராம மக்களை, ஊராட்சி சபையில் வந்து உட்காரு! என்று தி.மு.க.வினர் அழைத்ததும், ‘ஏதோ இந்த ஆட்சியில அதிசயமா ஒரு நல்லது நடக்குது. அது உனக்கு பிடிக்கலையா?’ என்று மக்கள் மல்லுக்கட்டியதும் செம்ம கலகலப்புகள். 

அதன் பின் வேறு வழியில்லாமல் வழக்கமாக எல்லா அரசியல் கட்சிகளும் செய்வது போல் அவுட்சோர்ஸிங்கில் சிலரையும், கட்சிக்காரர்களின் குடும்பத்தினர் சிலரையும் சேர்த்து உட்கார வைத்து மேக் - அப் செய்தனர். ஆனாலும் இந்த நிகழ்வையும் பயன்படுத்தி, தி.மு.க. சீனியர் தலைகள் சிலர் ஆளுங்கட்சியை வறுத்தெடுத்தனர் வகைதொகையில்லாமல். அந்த வகையில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்து கொண்ட துரைமுருகன், பிற்பாடு வறுத்தெடுத்தார் எடப்பாடி அரசை இப்படி...

”இந்த மாநிலத்தின் முக்கிய பிரச்னைகளில் ஸ்டெர்லைட் விவகாரமும் ஒண்ணு. இதில் என்ன நடக்கப்போகுதுன்னு குழப்பமான நிலை உள்ளது. தமிழக அரசுக்கே இது தொடர்பாக தெளிவான நிலை இல்லை. முதல்வர் பழனிசாமியை கேட்டாலும், ‘தெரியாது’ன்னு சொல்றார். இப்படி சொல்வதற்கு வெட்கக்கேடாக இல்லையா? என்ன அரசாங்கம் இது!” என்றவர், தொடர்ந்து... ”சிலை திருட்டை கண்டுபிடிக்க வேண்டியது அரசின் கடமை. சில கடத்தல் ஆபத்தானது. கலை உணர்வு மிக்க சிலைகள் திருட்டு போவது நாட்டுக்கே அவமானம். 

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் தேடித்தேடி சிலைகளை கண்டுபிடிக்கிறார். அவருக்கு ஊக்கம் அளிக்க வேண்டியது எடப்பாடி அரசின் கடமை. நீதிமன்றமே மாணிக்கவேலுக்கு அனுமதி வழங்கிய பின்னும் ‘யோக்கியமானவரா?’ என்று அமைச்சர் கேட்கிறார். இதை வெச்சு பார்க்கிறப்ப, சிலை திருட்டை மறைமுகமாக இந்த அரசாங்கமே ஆதரிக்குதோன்னு சந்தேகம் வருது.” என்று போட்டாரே ஒரு போடு. நியாயப்படி இதற்காக துரைமுருகனுக்கு எதிராக கடும் கோபத்தை கொப்பளித்து தாட்பூட் தடபுடல் செய்திருக்க வேண்டும் அ.தி.மு.க. அரசு. ஆனால் ஏன் இப்படி மெளனியா இருந்து வேடிக்கை பார்க்குதுன்னு தெரியலை! என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதே நேரத்தில், நாத்திக கோட்டைக்குள் குடியிருக்கும் துரைமுருகனுக்கு, ஏன் கோயில் சிலைகளின் மேல் இவ்வளவு அக்கறை? என்கிறார்கள். அதுவும் சரிதான்!

click me!