பேராசியர் க.அன்பழகனின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் 100 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில தீர்மானம் நிறைவேற்ப்பட்டுள்ளது.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேராசியர் க.அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் இனமானப் பேராசிரியரின் நூற்றாண்டு பிறந்த நாள் தொடக்க விழாவினையொட்டி, மாண்புமிகு முதலமைச்சருமான தளபதி அவர்கள், “7500 கோடி ரூபாய் மதிப்பில் பேராசிரியர் அன்பழகனாரின் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்'' நேற்று (30.11.2022) அறிவித்தார்.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி
அவரது நூற்றாண்டு நிறைவைப் போற்றும் வகையில் இந்த வருடம், 19.12.2022 அன்று தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை செயல்படும் D.P.I. வளாகத்தில் இனமானப் பேராசிரியர் அவர்களின் திருவுருவச் சிலை நிறுவி, அந்த வளாகம் "பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்" என்று அழைக்கப்படும் எனவும், கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் பெயரில் விருது வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழகத்தில் 100 பொதுக்கூட்டம்
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சோதனைகளும் நெருக்கடிகளும் ஏற்பட்ட காலங்களில், கொள்கையுணர்வு சிறிதும் குன்றாமல், இயக்கத்தைக் காக்கும் பெரும் பொறுப்பை சுமந்திருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு உற்ற துணையாக நின்று, தோள் கொடுத்துக் காத்தவர் இனமானப் பேராசிரியர் அவர்கள். கொள்கையுணர்வு மறையாமல் நம் நெஞ்சில் நிலைத்து, நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் இனமானப் பேராசிரியர் பெருந்தகை அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவினையொட்டி, தலைமைக் கழகத்தின் சார்பில் டிசம்பர் 15 (வியாழக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் 100 பொதுக்கூட்டங்கள் நடத்த தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்படும் அந்த கூட்டங்களை மாவட்டக்கழகச் செயலாளர்கள் சிறப்புடன் நடத்திட இந்தக்கூட்டம் தீர்மானிக்கிறது.
கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம்
அதேபோல் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் டிசம்பர்-17 (சனிக்கிழமை) அன்று பேராசிரியர் பெருந்தகை அவர்களின் பொது வாழ்வைப் போற்றிடும் கவியரங்கம் நடைபெறும். டிசம்பர்-18 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வடசென்னையில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெறும். இனமானப் பேராசிரியர் அவர்களின் பிறந்த நாளான 19-12-2022 (திங்கட்கிழமை) அன்று மாவட்ட - ஒன்றிய - நகர பகுதி - பேரூர் - கிளைக் கழகங்களின் சார்பிலும், துணை அமைப்புகளான அணிகள் சார்பிலும் இனமானப் பேராசிரியரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்திடவும் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.
இதையும் படியுங்கள்