தேர்தல் முடிவால் பரிகாசத்துக்கு ஆளான காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் முக்கியத்துவம் அதலபாதாளத்துக்கு செல்லுமா.?

Published : Mar 12, 2022, 10:06 AM IST
தேர்தல் முடிவால் பரிகாசத்துக்கு ஆளான காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் முக்கியத்துவம் அதலபாதாளத்துக்கு செல்லுமா.?

சுருக்கம்

திமுகவின் தோல்விக்கு காங்கிரஸ் கட்சிக்கு அதிகமாக ஒதுக்கிய தொகுதிகளும் காரணம் என்று பேச்சு திமுகவில் எழுந்தது. இதற்கிடையே 2020 பீகார் தேர்தலில் 71 தொகுதிகளை ஆர்.ஜே.டி.யிடம் பெற்று 19 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றது. அங்கு ஆர்.ஜே.டி. ஆட்சிக்கு வர முடியாமல் போனதற்கு காங்கிரஸ் அழுத்தம் கொடுத்து வாங்கிய தொகுதிகளே காரணம் என்று  ஆர்.ஜே.டி.யினர் கடுப்பாயினர்.

ஐந்து மாநில தேர்தல் முடிவால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான முக்கியத்துவம் இன்னும் குறையுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

தமிழகத்தில் 2011-இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை ‘டார்கெட்’ செய்து 63 தொகுதிகளை வாங்கி போட்டியிட்டது காங்கிரஸ். அப்போது வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. இதனால், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகளை 41 ஆகக் குறைத்தது திமுக. அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி 98 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கட்சி 8 இடங்களில் மட்டுமே வென்றது. திமுகவின் தோல்விக்கு காங்கிரஸ் கட்சிக்கு அதிகமாக ஒதுக்கிய தொகுதிகளும் காரணம் என்று பேச்சு திமுகவில் எழுந்தது. இதற்கிடையே 2020 பீகார் தேர்தலில் 71 தொகுதிகளை ஆர்.ஜே.டி.யிடம் பெற்று 19 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றது. அங்கு ஆர்.ஜே.டி. ஆட்சிக்கு வர முடியாமல் போனதற்கு காங்கிரஸ் அழுத்தம் கொடுத்து வாங்கிய தொகுதிகளே காரணம் என்று  ஆர்.ஜே.டி.யினர் கடுப்பாயினர்.

இதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட திமுகவினர், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிகளை குறைக்க முடிவு செய்தது. 2016-இல் கொடுத்ததுபோல 41 தொகுதிகளையாவது காங்கிரஸ் கட்சி கேட்டுப் பார்த்தது. ஆனால், திமுக 25 தொகுதிகளோடு நின்றுகொண்டது. 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றதால் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். இதேபோல 2009 நாடாளுமன்றத் தேர்தலில் 15 தொகுதிகளை வாங்கிய காங்கிரஸ், 2019 தேர்தலில் 9 தொகுதிகளை மட்டுமே திமுக கொடுத்தது. கடந்த காலங்களில் உள்ளாட்சித் தேர்தலில் திமுக காங்கிரஸ் கட்சிக்கு 15 சதவீதங்கள் வரை இடங்களையும் பதவிகளையும் விட்டுக்கொடுத்திருக்கிறது. உதாரணமாக 6 மாநகராட்சிகள் மட்டுமே இருந்தபோது 2006-இல் 2 மேயர் பதவிகளை காங்கிரஸ் கட்சிக்கு திமுக வழங்கியது. ஆனால், இன்று 21 மாநகராட்சிகள் உள்ள நிலையில், நகராட்சியிலிருந்து மாநகராட்சியாக மாறிய கும்பகோணத்தை மட்டுமே காங்கிரஸுக்கு திமுக வழங்கியது. அந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சிக்கான முக்கியத்துவம் திமுக கூட்டணியில் ஏற்கனவே குறைந்துவிட்டது.

தற்போது நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசம் தவிர்த்து எஞ்சிய 4 மாநிலங்களில் காங்கிரஸ் முத்திரைப் பதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏற்கெனவே ஆட்சியில் இருந்த பாஜகவிடம் இருந்தும் ஆட்சியை காங்கிரஸால் கைப்பற்ற முடியவில்லை. கையில் இருந்த பஞ்சாப்பையும் ஆம் ஆத்மியிடம் இழந்தது. இதனால், தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி பரிகாசத்துக்கு ஆளாகியுள்ளது. அக்கட்சி மீதான பிற கட்சிகளின் பார்வை மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. மோடி - அமித்ஷா யுகம் தொடங்கிய பிறகு கடந்த 8 ஆண்டுகளாகப் பெரும்பாலும் தோல்வியை மட்டுமே காங்கிரஸ் பெற்று வருகிறது. 

இதற்கிடையே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மீதான பார்வை திமுகவின் பார்வை எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. தமிழகம் போல தேசிய அளவில் கூட்டணியை உருவாக்கும்படி ராகுல் காந்தியைப் பார்க்கும்போது பேசும்போதெல்லாம் திமுக தலைவர் ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால், அதற்கான முயற்சி காங்கிரஸ் கட்சியிடம் இருக்கிறதா என்ற கேள்வி பெரிதாக எழுந்திருக்கிறது. பழைய வரலாற்றைப் பேசி, காங்கிரஸ் கட்சியைத் தேடி பிற கட்சிகள் வர வேண்டும் என்ற தோரணையிலேயே காங்கிரஸ் கட்சி இருப்பது போல தெரிகிறது. பிற கட்சிகளை அரவணைத்து, ஒருங்கிணைக்க காங்கிரஸ் கட்சி எந்த முயற்சியையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அப்படி செய்திருந்தால் கோவா, உத்தராகண்ட், மணிப்பூரில் காங்கிரஸால் வெற்றி பெற்றிருக்க முடியும்.

தமிழகத்தில் அண்மைக் காலமாக காங்கிரஸ் பலத்தை அறிந்தும், பிற இடங்களில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளைப் பார்த்தும்  திமுக சீட்டுகளை ஒதுக்கி வருகிறது. இதுபோன்ற சூழலில் அடுத்து நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் கடந்த முறை புதுச்சேரியையும் சேர்த்து வாங்கிய 10 தொகுதிகளைப் பெறுவதில்கூட காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் சிக்கல் ஏற்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு சட்டப்பேரவைத் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலே ஓர் உதாரணம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!