கொரோனா கொடூரத்திலும் குறுக்குசால் ஓட்டும் நோட்டீஸ்... கடமை தவறாத கழக உ.பி.,கள்..!

By Thiraviaraj RMFirst Published Apr 2, 2020, 6:08 PM IST
Highlights

அந்தக்கட்சிக்கு மக்களை பற்றிய போதிய அக்கறை இல்லை. முக்கிய, தமிழகத்தின் எதிர்கட்சி,  37 மக்களவை எம்.பி களை கொண்ட ஒரு கட்சி இந்த நேரத்தில் எப்படி செயல்படுகிறது என்பதை சுட்டிக்காட்டி விமர்சித்தால் நோட்டீஸ் அனுப்புகிறது. 

கொரோனா பாதிப்பால் தமிழகம் தவிக்கிறது. திமுக எம்.பி.க்கள் எங்கே? தொகுதிப் பணிக்கு மத்திய அரசு தரும் 1 கோடி விடுத்து, மிக்க வசதி படைத்த எம்.பி.க்களில் பலர், சுயமாக வழங்கிய நிதி என்ன? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் கட்சியின் கடமையே கண்ணாயிருக்கிறது கழகம். திமுக விவசாய அணி மாநில செயலாளர் கே.பி.ராமலிங்கம் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிக நீக்கி கொரோனா அதிர்ச்சியைவிட கழக உடன்பிறப்புகளுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது அக்கட்சி தலைமை.

இந்த நேரத்திலும் கட்சி கடைமையை செய்து களையெடுத்து வருவதால், கொரோனாவில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதில் கவனம் செலுத்துவதை விட கட்சியில் பொறுப்புகளை காப்பாற்றிக் கொள்ளும் கவலையில் ஆழ்ந்துள்ளனர் கழக கண்மணிகள். 

இது போதாதென்று நோட்டீஸ் அனுப்பி மற்றொரு களேபரத்தை கூட்டியிருக்கிறது அறிவாலயக் கட்சி. அதாவது,’’ தமிழக பாரதிய ஜனதா கட்சி தங்களுடைய அதிகாரபூர்வ சமூகவலை தளப்பக்கங்களின் மூலம் தி.மு.க. குறித்து அவதூறு பரப்பிவருவதாக அக்கட்சி குற்றம்சாட்டி பா.ஜ.கவின் தேசியத் தலைவர், மாநிலத் தலைவர், ட்விட்டர் நிறுவனம் ஆகியோருக்கு தி.மு.க. நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கான @BJP4TamilNadu என்ற கணக்கில் மார்ச் 30ஆம் தேதியன்று தி.மு.க. குறித்த பதிவு ஒன்று வெளியானது. அதில், “தொகுதி வளர்ச்சி நிதியை சொந்தக் காசாகக் காட்டிய @arivalayam; இல்லாத தோரணை உருவாக்க 380 கோடி செலவாக்கும் @mkstalin; சொந்த மக்களுக்கு வெறும் ஒரு கோடி கொடுக்கத்தான் மனசாட்சி உள்ளதா? ஆட்சியில் இருந்து தேன் எடுத்தபோது ஊழல் செய்து புறங்கையை நக்கிய பணத்தை மக்களுக்கும் தாராளமாகக் கொடுக்கலாமே” என்று கூறி விமர்சித்து இருந்தது. 

இது தொடர்பாக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விடுத்துள்ள நோட்டீஸில், ’’இது முழுக்க முழுக்க அவதூறானது. தி.மு.கவின் சார்பில் ஒரு கோடி ரூபாயும், ஒவ்வொரு எம்.எல்.ஏ., எம்.பிக்களும் தங்கள் ஊதியத்தையும் வழங்கியிருப்பதோடு, தி.மு.கவின் தலைமையகமான அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தையும் கொரோனா தனிமைப்படுத்துதலுக்காக வழங்க முன்வந்திருகிறது. பா.ஜ.கவின் சார்பில் கோரோனா நிதிக்கு எந்தத் தொகையும் தரப்படவில்லை.

கொரோனா போன்ற கொடிய நோய் பரவிவரும் நேரத்தில் மக்களுக்கு உதவாமல் பாஜக அரசியல் செய்து வருகிறது. தற்போது மாநிலத் தலைவராக உள்ள எல்.முருகன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக இருந்தபோது அந்தப் பதவியைப் பயன்படுத்தி முரசொலி டிரஸ்ட் அமைந்துள்ள கட்டடம் குறித்து பொய் பிரசாரம் செய்ய முயன்றார்.

அரசியல் கட்சிகளுக்குப் பணம் கொடுத்ததாக தி.மு.கவின் தேர்தல் பிரசார வியூக வகுப்பாளர் பிராந்த் கிஷோருக்கு பணம் கொடுத்ததாக ஒரு மீமை பகிர்ந்துள்ளது. ஆகவே, உடனடியாக இந்த ட்வீட்களுக்காக பா.ஜ.கவின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவும், மாநிலத் தலைவர் எல். முருகனும் மன்னிப்புக் கேட்க வேண்டும். கொரோனா தொடர்பான முதல்வரின் நிதிக்கு 100 கோடி ரூபாய் நிதி அளிக்க வேண்டும்’ எனறு அந்த நோட்டீஸில் தி.மு.க. வலியுறுத்தி இருக்கிறது.

பா.ஜ.கவின் ட்விட்டர் ஐடியை நிர்வகிப்பது யார் என்பதைத் தெரிவிக்க வேண்டும். அந்த ஐடியை முடக்க வேண்டும் என்று ட்விட்டரின் தலைமை நிர்வாகிகளிடம் கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜக நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது, ‘’கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்து கட்சிகளிலும் பாரபட்சமின்றி மக்களுக்கு சேவையாற்றி வருகின்றன. 

இந்த நேரத்தில் மக்களுக்கான சேவை பணிகளில் ஈடுபடாமல், தொகுதி நிதியில் இருந்து தொகையை அறிவித்து விட்டு திமுக, எம்.பிக்கள் விலகியே இருக்கின்றனர். அத்தோடு இந்த நேரத்தில் கட்சி நடவடிக்கைகளில் திமுக தீவிரம் காட்டி வருகிறது. அதற்கு உதாரணம் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகி கே.பி.ராமலிங்கத்தின் நீக்கம்.  மக்களை பற்றி கவலையில்லாமல் திமுக வரும் சட்டமன்றத்தேர்தலை குறி வைத்து இந்த இக்கட்டான நிலையிலும் கட்சிப்பணிகளில்தான் தீவிரம் காட்டி வருகிறது. 

அந்தக்கட்சிக்கு மக்களை பற்றிய போதிய அக்கறை இல்லை. முக்கிய, தமிழகத்தின் எதிர்கட்சி,  37 மக்களவை எம்.பி களை கொண்ட ஒரு கட்சி இந்த நேரத்தில் எப்படி செயல்படுகிறது என்பதை சுட்டிக்காட்டி விமர்சித்தால் நோட்டீஸ் அனுப்புகிறது. இது அக்கட்சியின் சர்வாதிகாரப்போக்கை காட்டுகிறது. பக்குவமின்மையை நிரூபிக்கிறது. இந்த வழக்கை நாங்கள் சட்டப்படி எதிர்க்கொள்வோம். ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு அதனை முதல்வரின் நிதிக்கு கொடுக்கச்சொல்லி இருப்பது தான் உச்சக்கட்ட அரசியல் இந்த அரசியலை மக்கள் உணர்ந்து எத்த்னையோ நாட்களாகி விட்டது என்பதை திமுக உணராமல் இருப்பதுதான் வேதனை’’ எனக் கொட்டித் தீர்த்தார் அந்த நிர்வாகி..! 

 

click me!