நம்ப வைத்து ஏமாற்றிய திமுக... கட்சியிலிருந்து விலகும் தென்மாவட்ட முக்கியப்புள்ளி..!

By Thiraviaraj RMFirst Published Oct 28, 2020, 12:42 PM IST
Highlights

நம்ப வைத்து ஏமாற்றியதால் வி.பி துரைசாமி, கு.க செல்வத்தைத் தொடர்ந்து திமுகவிலிருந்து இன்னொரு முக்கிய புள்ளியும் வெளியேற இருப்பதாக தென்மாவட்டங்களில் தகவல் தந்தியடிக்கிறது. 

நம்ப வைத்து ஏமாற்றியதால் வி.பி துரைசாமி, கு.க செல்வத்தைத் தொடர்ந்து திமுகவிலிருந்து இன்னொரு முக்கிய புள்ளியும் வெளியேற இருப்பதாக தென்மாவட்டங்களில் தகவல் தந்தியடிக்கிறது. 

தமிழக அரசால் புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி வருவாய் மாவட்டம் திமுக அமைப்பு ரீதியாக நெல்லை மேற்கு மாவட்டம் என்றே அழைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தின் செயலாளராக சிவபத்மநாபன் பணியாற்றி வருகிறார். இவருக்கும் இதே மாவட்டத்தைச் சேர்ந்த திமுக வர்த்தக அணி துணைத் தலைவர் அய்யாதுரை பாண்டியனுக்கும் ஆரம்பம் முதலே ஏழாம் பொருத்தம்தான்.

 

ஜெயலலிதா முன்னிலையில் கழகத்தில் இணைய ஆசைப்பட்டார் அய்யாத்துரைப் பாண்டியன். 200 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதியாக ஊருக்குள் உலா வருகிறார். இதைக் கணக்கு காட்டித்தான் அதிமுகவுக்குள் வந்தார். அதிமுகவில் உறுப்பினர் அட்டை வாங்கிய நான்காவது நாளில் படுத்த படுக்கையாக அப்பல்லோவில் அட்மிட் ஆனார் ஜெயலலிதா. அதன்பிறகு அவர் மீண்டும் போயஸ் கார்டனுக்குள் கால் வைக்கவில்லை. அவர் இறந்த பிறகு போயஸ் கார்டனில் சசிகலாவைப் பார்த்து ஆதரவு தெரிவித்தார். அடுத்து வந்த நாள்களில் சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு தண்டனை பெற்றார். 
ஒரு பெரிய கம்பெனியில் சிஇஓவாக பதவியில் இருந்தவர் அய்யாத்துரை. அப்படி சம்பாதித்ததுதான் அந்த 200 கோடிகளும். தென்மாவட்டத்தில் நான்தான் பெரிய தலைவர் என்ற கோதாவில் வலம் வருபவர். அவர் திமுகவுக்குள் சென்றதன் காரணமே, பாராளுமன்றத் தேர்தலில் தளபதி சீட் கொடுப்பார் என நம்பித்தான். ஆனால் கிடைக்கவில்லை. பெரும் செல்வந்தரான அய்யாதுரை பாண்டியன் மாவட்டம் முழுவதும் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தினாலும் சிவபத்மநாபனை அழைப்பதில்லை.

இரு தரப்புகளுக்கும் இடையில் அடிதடி, மோதல் எல்லாம் நடந்து வழக்குகளும் பதிவாகியிருக்கின்றன. மேற்கு மாவட்டத்தை இரண்டாக பிரித்து கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி அடங்கிய மாவட்டத்திற்கு செயலாளராக வேண்டும் என காய் நகர்த்தினார் அய்யாதுரை பாண்டியன். கடையநல்லூர் தொகுதியை குறிவைத்து களப்பணியும் செய்து வருகிறார்.

எனினும் அய்யாதுரை பாண்டியன், ஸ்டாலினின் குட்புக்கில் அண்மைக்காலமாக இடம்பெறவில்லை. சமீபத்தில் இவரையும், சிவபத்மநாபனையும் அறிவாலயத்திற்கு அழைத்து பஞ்சாயத்து நடைபெற்றது. அப்போது ஸ்டாலின் முன்னிலையிலேயே சீறியிருக்கிறார் அய்யாதுரை பாண்டியன். இந்த நிலையில் நெல்லை மேற்கு மாவட்டத்தை இரண்டாக பிரிக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய தனி தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டப் பொறுப்புக்கு தென்காசி எம்.பி தனுஷ் எம்.குமாரின் பெயர் இறுதி செய்யப்பட்டிருக்கிறது. கடையநல்லூர், தென்காசி சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டத்துக்கு பொறுப்பாளராக சிவபத்மநாபன் நியமிக்கப்படவிருக்கிறார்.

இதில் கடையநல்லூர் தொகுதியின் மாவட்டப் பொறுப்பாளராக சிவபத்மநாபனை நியமிக்க அறிவாலயம் முடிவெடுத்திருப்பது அய்யாதுரை பாண்டியன் தரப்பை கொதிக்க வைத்திருக்கிறது. இதுபற்றி அவர்களிடம் கேட்டபோது,’’அரசியலே வேண்டாம்ணு இருந்த அய்யாதுரை பாண்டியனுக்கு ஆசைகாட்டி இழுத்தது திமுக மேல்மட்ட நிர்வாகிகள்தான். இதை நம்பி கோடிக்கணக்கில் இதுவரை அவர் செலவு செய்திருக்கிறார். குறிப்பா கடையநல்லூர் தொகுதியில் அவர் கலந்துகொள்ளாத விசேட நிகழ்ச்சிகளே இல்லை என சொல்லலாம். அந்தளவுக்கு மிகக் கடுமையா களப்பணி செய்துகொண்டு வருகிறார். இந்த நிலைமையில் கடையநல்லூர் தொகுதிக்கு பொறுப்பாளரா சிவபத்மநாபனை போடப் போறாங்கண்ணா என்ன அர்த்தம்?

நம்ப வெச்சு கழுத்தறுக்கிற காரியம்தானே இது. சுயமரியாதை உள்ள அய்யாதுரை பாண்டியன் இதை நிச்சயம் பொறுத்துக்கொள்ள மாட்டார். குறிப்பிட்ட இரண்டு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அவரிடம் பேசிக்கிட்டிருக்காங்க. விரைவில் அவர் முடிவெடுப்பார். அப்போது அவருடன் பெரும் எண்ணிக்கையிலான திமுகவினரும் வெளியேறுவார்கள்’’ என்கிறார்கள்.

click me!