திமுக-காங்கிரஸ் நல்லா நாடகம் ஆடுறீங்க! இது எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு அதிமுக சும்மா இருக்காது! எகிறும் EPS

By vinoth kumar  |  First Published Feb 3, 2024, 8:17 AM IST

திமுக-காங்கிரஸ் திரை மறைவு நாடகத்தை உடனடியாக நிறுத்திக்கொண்டு, தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை துளியளவும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்று இந்த திமுக அரசை கடுமையாக எச்சரிக்கிறேன்.


தீய சக்தி திமுகவும், அதன் கூட்டணிக் கட்சியான கர்நாடக காங்கிரஸ் அரசும், இந்தத் திரைமறைவு நாடகத்தை நடத்தி, தமிழகத்துக்கு காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் மீண்டும் மீண்டும் துரோகத்தை நிகழ்த்தி வருவது கடும் கண்டனத்துக்குரியது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: காவிரி நதிநீர் தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், டெல்டா உள்ளிட்ட பத்து மாவட்டங்களின் விவசாயத்துக்குப் பயன்படும் ஜீவாதாரமாக விளங்குகிறது. பல சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு அதிமுக அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகளின் காரணமாக, 16.2.2018 அன்று உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பைப் வழங்கியது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: யார் கட்சி தொடங்கினாலும் அதிமுக ஓட்டுக்களில் கை வைக்க முடியாது.! விஜய்யின் அரசியல் பயணம்- ஜெயக்குமார் பதில்

மத்திய அரசு, வரலாற்றுச் சிறப்பு மிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த காலம் தாழ்த்தியதால், 2018-ம் ஆண்டு அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களால், உச்சநீதிமன்ற ஆணையை செயல்படுத்த வலியுறுத்தி 22 நாட்கள் நாடாளுமன்றம் முடக்கப்பட்டு மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்பட்டது.

பல போராட்டங்களின் விளைவாக, 1.6.2018 அன்று மத்திய அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் நீர் முறைப்படுத்தும் குழு செயலாக்கத் திட்டத்தை மத்திய அரசிதழில் வெளியிட்டது. அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையம், அணைகளில் உள்ள நீரின் கொள்ளளவு, மழை அளவு, நான்கு மாநிலங்களின் தண்ணீர் தேவை போன்ற விஷயங்களை விவாதித்து, ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு தண்ணீர் திறந்துவிடுவது என்பது குறித்து, நான்கு மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளும், மத்திய அரசின் காவிரி மேலாண்மை அதிகாரிகளும் முடிவெடுப்பார்கள்.


எங்களது ஆட்சிக் காலத்தில் ஒருபோதும் மேகேதாட்டு அணை குறித்து ஆணையத்தில் விவாதிக்கவோ, அதுபற்றி விவாதப் பொருளில் கொண்டுவரவோ அனுமதித்ததில்லை. ஆனால், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-வது கூட்டம் டெல்லியில் 1.2.2024 அன்று நடைபெற்றபோது, மேகேதாட்டு அணை விவகாரம், கூட்டத்தின் விவாதப் பொருளில் குறிப்பிடப்பட்டிருப்பதால், அதுகுறித்துப் பேசவேண்டும் என்று கர்நாடக தரப்பு அதிகாரிகள் வலியுறுத்தியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

இதையும் படிங்க:  பாஜகவை அழிக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம்! மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் ஆதரவு கிடையாது! திண்டுக்கல் சீனிவாசன்!

* ஏற்கெனவே விவாதப் பொருள் பட்டியலில், மேகேதாட்டு அணை குறித்து இருப்பதை அறிந்த திமுக அரசும், கலந்துகொண்ட அதிகாரிகளும் ஏன் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை?

* விதிகளுக்குப் புறம்பாக மேகேதாட்டு பிரச்சினை குறித்து கர்நாடக அரசு அதிகாரிகள் பிரச்சினை எழுப்பியபோது, அதனைக் கடுமையாக எதிர்த்து வெளிநடப்பு செய்யாமல், வாக்கெடுப்பில் கலந்துகொண்டது ஏன்? 

* விவாதப் பட்டியலில், மேகேதாட்டுவை சேர்க்காமல் விட்டிருந்தாலோ, ஆட்சேபனை தெரிவித்து வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்திருந்தாலோ, 1.2.2024 அன்று நடைபெற்ற கூட்டத்தில் மேகதாது பிரச்சினை நீர்வளக் கமிஷனின் பார்வைக்குச் சென்றிருக்காது.

தீய சக்தி திமுகவும், அதன் கூட்டணிக் கட்சியான கர்நாடக காங்கிரஸ் அரசும், இந்தத் திரைமறைவு நாடகத்தை நடத்தி, தமிழகத்துக்கு காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் மீண்டும் மீண்டும் துரோகத்தை நிகழ்த்தி வருவது கடும் கண்டனத்துக்குரியது. தமிழகத்தை வஞ்சிக்க முயற்சிக்கும் எந்தப் பிரச்சினையையும் அதிமுக பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. திமுக-காங்கிரஸ் திரை மறைவு நாடகத்தை உடனடியாக நிறுத்திக்கொண்டு, தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை துளியளவும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்று இந்த திமுக அரசை கடுமையாக எச்சரிக்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

click me!