இது எப்படிப்பட்ட கூட்டணி தெரியுமா..? கே.என். நேரு நினைச்சாலும் பிரிக்க முடியாது... கே.எஸ்.அழகிரி ஆதங்கம்!

By Asianet TamilFirst Published Jun 24, 2019, 8:39 AM IST
Highlights

திமுகவின் தலைமையில் தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமைக்கப்பட்டதென்பது, தலைவர் ராகுல் காந்தி, ஸ்டாலினின் உதிரத்தால் கையெழுத்திட பெற்றதாகும். 

திமுக - காங்கிரஸ் கூட்டணியை அழகிரி நினைத்தாலும் அல்லது நேரு நினைத்தாலும் பிரித்துவிட முடியாத உறுதியான கூட்டணி என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 
காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை நாட்கள் பல்லக்கு தூக்குவது என திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தெரிவித்த கருத்து திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் பேசுபொருளாக மாறிவிட்டது. கே.என். நேரு கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்த தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், “உங்களை யார் பல்லக்கு தூக்கச் சொன்னது?” என்று கேட்டிருந்தார். இந்நிலையில் கூட்டணி தொடர்பாக கட்சியின் கட்டுபாடின்றி ஊடகங்களிடம் பேட்டி அளிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி எச்சரித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் அமைக்கப்பட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்பது சில நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தொகுதிகளுக்காக அமைக்கப்பட்டது அல்ல. இந்தியாவின் இறையாண்மையைக் காக்க வேண்டும்; சாதி மத பேதமற்ற சமதர்ம சமுதாயத்தை அமைக்க வேண்டும்; சமூக நீதியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டதாகும். இக்கூட்டணியைக் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் உயர்ந்த நோக்கத்தோடு அமைத்தார்கள்.


“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கன் கலைவதாம் நட்பு” என்னும் வள்ளுவரின் வாக்குக்கு இணங்க, இந்தியாவின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை, மு.க.ஸ்டாலின் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி முன்மொழிந்தார். இதனால் கோடிக்கணக்கான தேசிய தோழர்களின் இதயத்தில் மு.க.ஸ்டாலின் நீங்கா இடம் பெற்றிருக்கிறார். இந்த வரலாற்று புகழ்பெற்ற கூட்டணியைச் சிலர் சிறு ஆசைக்காகச் சிதைப்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள இயலாது.
தனி மனித லாப நஷ்டங்களையும் ஆசைகளையும் தவிர்த்து, சீறிய லட்சியத்திற்காகத் தியாகம் செய்திட வேண்டும் என்பதுதான் தேசிய இயக்கத்தின் உயிர்மூச்சு. கூட்டணி பற்றியோ, தேர்தல்களை பற்றியோ, கூட்டணிக் கட்சிகளோடு பேசுகிற அதிகாரம் காங்கிரஸ் தலைமைக்கு மட்டுமே உண்டு. மற்றவர்கள் அதுபற்றி பேசுதல் கூடாது. தங்களுக்கு தோன்றும் எண்ணங்களை நேரிலோ, கடிதம் மூலமோ காங்கிரஸ் தலைமைக்குத் தெரிவிக்கலாமே தவிர, ஊடகங்கள் மூலமாக எந்தச் செய்தியையும் யாரும் தெரிவிக்கக் கூடாது.


அப்படி கட்டுப்பாடின்றிச் செயல்படுபவர்கள் உடனடியாக கட்சியிலிருந்து அகற்றப்படுவார்கள் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவின் முன்னோடி கே.என்.நேரு சில கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். அது அவருடைய தனிப்பட்ட உரிமை. திமுகவின் தலைமையில் தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமைக்கப்பட்டதென்பது, தலைவர் ராகுல் காந்தி, ஸ்டாலினின் உதிரத்தால் கையெழுத்திட பெற்றதாகும். அதனை அழகிரி நினைத்தாலும் அல்லது நேரு நினைத்தாலும் பிரித்துவிட முடியாத உறுதியான கூட்டணியாகும். தமிழகத்தில் கடந்த தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெற்ற வெற்றியைப்போல தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற அனைவரும் இணைந்து செயல்படுவோம்.” என்று கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

click me!