
தீவிர சிகிச்சை பிரிவில் காங்-திமுக கூட்டணி? - சுயமரியாதை இழந்து கூட்டணி வேண்டாம் மாவட்ட தலைகள் கொந்தளிப்பு
சுயமரியாதை இழந்து அப்ப்டி ஒன்றும் திமுகவுடன் கூட்டணி தேவை இல்லை என்று நேற்று காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் அனல் பறக்கும் விவாதம் நடந்துள்ளது. காங்கிரஸ் திமுக கூட்டணி உள்ளாட்சி தேர்தல் வரை கூட தாங்காது என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
பல கட்ட போராட்டத்துக்கு பின் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வந்த திருநாவுக்கரசர் கொடுத்த முதல் பேட்டியிலேயே தனது அதிரடியை துவக்கினார். காங்கிரஸ் திமுக கூட்டணி உள்ளாட்சியில் தொடருமா என்ற கேள்விக்கு இது சட்டசபை தேர்தல் போன்று அல்ல 50 ஆயிரம் இடங்களுக்கு நடைபெறும் போட்டி இதனால் உடனடியாக முடிவு செய்ய முடியாது என்று கூறினார்.
காங்கிரஸ் திமுக கூட்டணியை முடிவுக்கு கொண்டு வர மு.க.ஸ்டாலின் வாசனை அழைக்க வாசனும் நம்பிக்கையுடன் பேட்டி அளிக்க கனிமொழி தந்தையுடன் பேசி திருநாவுக்கரசரை வரவழைத்து உடனடியாக வந்த திருநாவுக்கரசரிடம் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி தொடரும் என சொல்ல வைத்தனர். இதனால் மு.க.ஸ்டாலின் கொந்தளித்து போனார்.
இதன் பின்னரும் உள்ளாட்சி தேர்தல் குறித்து பேச வந்த காங்கிரசை அலட்சியப்படுத்தியவர்கள் மாவட்ட செயலாளர்களுடன் பேசி முடிவெடுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தனர். இதனால் பலமாவட்டங்களில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் அவமானப்பட்டனர். காங்கிரசுக்கு 10% இடத்தைகூட திமுக ஒதுக்கவில்லை. 12 மாநகராட்சியில் ஒரு மாநகராட்சிகூட இல்லை என்ற நிலை உருவானது.
இதனால் மாவட்ட நிர்வாகிகள் கொதித்து போயினர். இதனிடையே தேர்தல் ரத்தானது. இதனிடையே காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்வு செய்த பின்னர் திருநாவுக்கரசர் கூட்டும் முதல் கூட்டம் . அதில் பாதிப்பேர் ஈவிகேஎஸ் இளங்கோவனால் நியமனம் செய்யப்பட்டவர்கள். கூட்டத்துக்கு 5 , 6 நபர்களைத்தவிர அனைத்து மாவட்டத்தலைவர்களும் கூட்டத்தில் ஆஜராகினர்.
கூட்டத்தின் முக்கிய அஜெண்டா காவிரி பிரச்சனை என்றாலும் மாவட்ட தலைவர்கள் பேசியது என்னவோ உள்ளாட்சித்தேர்தலில் திமுகவால் அடைந்த அவமானம் பற்றியே பேசினர்.
சுயமரியாதை இழந்து கூட்டணியில் நீடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஒட்டுமொத்தமாக கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர்களின் குரலாக இருந்தது. கடந்த முறை கடைசி நிமிடத்தில் தனித்து போட்டியிட்ட நாம் 720 இடங்களில் வெற்றி பெற்றோம். மொத்தம் 20,000 இடங்களில் 19000 இடங்களில் போட்டியிட்டோம் . இப்போதோ திமுக 20,000 இடங்களில் சுமார் 1800 இடங்களை மட்டுமே தந்துள்ளது . அதுவும் பலவீனமான இடங்கள் தரபட்டுள்ளது. இதில் நாம் எத்தனை இடங்களை வெல்ல முடியும் என்ற கேள்வியை மாவட்ட த்தலைவர்கள் எழுப்பியுள்ளனர்.
டெல்லி தலைமையும் விரும்பவில்லை., மாவட்ட தலைமையும் விரும்ப வில்லை, வாய்ப்பு கிடைக்காதால் தொண்டர்கள் விரும்ப வில்லை , ஆகவே காங்கிரசில் கீழ் மட்டத்திலிருந்து தலைமை வரை கூட்டணி விஷயத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சியும் தலைமை உங்கள் உணர்வை பூர்த்தி செய்யும் என திருநாவுகரசர் மாவட்ட தலைவர்களிடம் நம்பிக்கை தெரிவித்தார். 17 ம்தேதி டெல்லி செல்லும் தாம் நிச்சயம் இந்த தகவலை ராகுல் காந்தி சந்திப்பில் தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்ட நடவடிக்கை களை விவரித்து தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட தலைவர்கள் பலரும் திமுக மாவட்ட செயலாளர்கள் தங்களை அலட்சியமாக நடத்தியதாகவும், சென்னையில் ஒரு வார்டுக்கு குறிப்பிட்ட அளவுத்தொகையை தங்களிடம் கேட்டதாகவும் கொடுத்தால் ஜெயிக்க வைப்போம் என்று தெரிவித்ததாக கூறினர்.
இன்னும் சிலர் தங்களுக்கு கூட்டணியில் இடம் ஒதுக்கி விட்டு அதே இடத்தில் போட்டி வேட்பாளர்களையும் நிறுத்தினர் ஆகவே கூட்டணியில் நீடிப்பது சுயமரியாதையை விட்டு செல்லும் செயல் என்று கூறினர்.
பின்னர் கூட்டத்தில் பேசிய திருநாவுக்கரசர் சிறிய விஷயமானாலும் அகில இந்திய வழிகாட்டுதலோடு தான் செய்வேன். உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போனதால் இனி தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் திமுகவுடன் பேச்சு நடத்துவோம் என்று கூறினார்.
ஒட்டுமொத்த காங்கிரஸ் நிர்வாகிகள் விருப்பப்படாத நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணி என்பது தற்போது அவசர சிகிச்சை பிரிவில் உள்ளது என்றே சொல்ல வேண்டும். அதற்கு இரு தரப்பும் ஒத்துழைத்தால் பிழைக்க வாய்ப்பு உள்ளது. இல்லாவிட்டால் தனித்து போட்டியை நோக்கி காங்கிரஸ் செல்லும் என தெரிகிறது. - முத்தலீஃப்