
குட்காவுக்கும், ஸ்டாலினின் ஜாதகத்துக்கும் அப்படி என்னதான் பஞ்சாயத்தோ?! சட்டமன்றத்துக்குள் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலாவை கொண்டு வந்தார் என்று அவர் மீது சட்டமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு பாய்ச்சல் காட்டியது.
தடைசெய்யப்பட்ட குட்காவை கடைகளில் விற்பனை செய்திட கள்ள அனுமதி வழங்கியதாக தமிழக அமைச்சர் மற்றும் முன்னாள், இந்நாள் போலீஸ் அதிகாரிகள் மீது பாய்ந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற போராடி வெற்றி பெற்றிருப்பது ஸ்டாலின் தான்.
இந்நிலையில் கோயமுத்தூரில் சுற்றி வளைக்கப்பட்டுள்ள குட்கா ஆலை விவகாரம் ஸ்டாலினை அநியாயத்துக்கு குழப்பியுள்ளது.
கண்ணம்பாளையத்தில் சமீபத்தில் ஒரு குட்கா தயாரிப்பு ஆலையானது கண்டறியப்பட்டது. பல மணி நேரங்கள் ஆய்வு நடத்தி இந்த குட்கா ஆலையில் கிரிமினல்தனங்களை பிரித்து மேய்ந்த போலீஸ், அதற்கு சீல் வைத்தது.
இந்நிலையில் போலீஸ் இந்த ஆலையை ரெய்டு செய்தபோது கோயமுத்தூரின் சிங்காநல்லூர் தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ.வான கார்த்திக் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ‘நியாயமான நடவடிக்கை தேவை’ எனும் கோரிக்கையுடன் மறியல், முற்றுகை என்று அதகளப்படுத்தினர்.
இதில் எம்.எல்.ஏ. உள்ளிட்ட எட்டு பேர் மீது ‘அரசு ஊழியர்களை கடமையாற்ற விடாமல் தடுத்தல்!’ உள்ளிட்ட வழக்குகளை போட்டிருக்கிறது போலீஸ். கூடவே சிலரை கைது செய்துவிட்டனர், ஆனால் எம்.எல்.ஏ. கார்த்திக்கோ கைதுக்கு தப்பி முன் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
இந்நிலையில், இந்த ஆலை விவகாரம் தொடர்பாக நேற்று கோயமுத்தூரில் பேசிய எஸ்.பி. மூர்த்தி, ’கைதானவர்களில் ஒருவரான முருகேசன், தொழிற்சாலை அமைந்திருக்கும் கண்ணம்பாளையம் பேரூராட்சியின் முன்னாள் தலைவர். சட்ட விரோதமாக இந்த தொழிற்சாலை நடத்திட பல வழிகளில் இவர் உதவியுள்ளார்.’ என்று ஒரே போடாக போட்டார்.
இது போதாதென்று எம்.எல்.ஏ. கார்த்திக்கும் இந்த குட்கா ஆலை விவகாரத்தில் ’லிங்க்’ இருப்பதாக ஒரு தகவலை போலீஸ் முணு முணுக்க ஆரம்பித்துள்ளதாம்.
இந்நிலையில் வரும் 4-ம் தேதியன்று குட்கா ஆலை மற்றும் தங்கள் நிர்வாகிகள் மீது பொய் நடவடிக்கை ஆகியவற்றுக்கு எதிராக கோயமுத்தூருக்கே சென்று போராட்டம் நடத்திட முடிவெடுத்திருக்கிறாராம் ஸ்டாலின். ஆனால் கழக சீனியர்கள் சிலரோ ‘நம்ம கட்சி நிர்வாகிகளே இந்த விஷயத்தில் கைதாகியிருக்காங்க. நல்ல விசாரிச்சு பார்த்தா நம்மாளுங்க சைடுலேயும் சில தப்புகள் தெரியுது தளபதி. அதனால அவசரப்பட்டு அங்கே போய் ஆர்பாட்டம் நடத்த வேண்டாமுன்னு தோணுது. ஒரு வேளை அந்த ஆலை விஷயத்துல நம்மாளுங்களுக்கு தொடர்பிருந்தால், தப்பான செயலுக்கு நீங்கள் ஆதரவு தெரிவிச்சா மாதிரி ஆயிடும்.’ என்று முட்டுக்கட்டை போடுகிறார்களாம்.
இதனால் கோயமுத்தூருக்கு செல்வதா, கைவிடுவதா? என குழப்பத்தில் இருக்கிறாராம் ஸ்டாலின்.
இந்நிலையில், எம்.எல்.ஏ. கார்த்திக்கின் ஆதரவாளர்களோ “இந்த மாவட்டத்தில் தி.மு.க.வுக்கு இருக்கும் ஒரே எம்.எல்.ஏ. கார்த்திக் தான். ஆளும் அரசுக்கு எதிரா பல வித போராட்டங்களை நடத்தி, குறைகளை தட்டிக் கேட்டு தூள் பண்ணிட்டு இருக்கிறார். அவரை அரசியல் ரீதியாக முடக்கிடத்தான் இந்த வழக்கை கையிலெடுக்கிறது ஆளுங்கட்சியின் ஏவல் பொருளான காவல்துறை.
குட்கா ஆலைக்கும் எம்.எல்.ஏ. கார்த்திக்கும் தொடர்பு இருப்பதாக ஒரு ஜோடிக்கப்பட்ட விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லி, மக்களை நம்ப வைக்க பார்க்கிறாங்க.” என்று புலம்புகின்றனர்.
ஹூம் ஆக மொத்தத்துல குட்கா விவகாரத்தால தி.மு.க. தாறுமாறா தலைசுத்தி கிடக்குது போங்கோ!