சி.பி.எஸ்.இ என்பது மத்திய அரசு தேர்வு வாரியமா? ஆணவம் பிடித்த வாரியமா ? கொந்தளித்த ஸ்டாலின் !!

By Selvanayagam PFirst Published Aug 31, 2018, 8:14 AM IST
Highlights

நீட் தேர்வு கேள்வித்தாள் மொழி பெயர்ப்பில் குளறுபடிகள் செய்து துரோகம் இழைத்த சிபிஎஸ்சி, மாணவர்களை குற்றம்சாட்டுவது ஆணவத்தின் உச்சம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வின்போது தமிழ் வினாத்தாளில் 49 வினாக்கள் பிழையாக இருந்ததால், தமிழில் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 196 கருணை மதிப்பெண்கள் வழங்கும்படி சிபிஎஸ்இ-க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து சிபிஎஸ்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், கருணை மதிப்பெண் வழங்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கை தொடர்ந்து விசாரித்தது.
 


இதற்கிடையே, இவ்வழக்கு நேற்று  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த ஆண்டு கலந்தாய்வு முடிந்துவிட்டதால் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு தேர்வு வாரியமான சி.பி.எஸ்.சி.க்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழில் எழுதிய மாணவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும், அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் என கூறிய சி.பி.எஸ்.சி நிர்வாகத்தை கண்டிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

மேலும், கேள்வித்தாள் மொழிபெயர்ப்பில் குளறுபடிகளை செய்து மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கிய சி.பி.எஸ்.சி. தலைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரை ஸ்டாலின்  வலியுறுத்தியுள்ளார். 



கேள்வித்தாள்களில் துரோகத்தை செய்துவிட்டு மாணவர்களை குற்றஞ்சாட்டுவது ஆணவத்தின் உச்சம்  என்றும்,  ஆதிக்க வர்க்கத்தின் ஆணவ மனப்பான்மை, பிளவுப்படுத்தி பேதப்படுத்தும் குணம் போன்றவை சி.பி.எஸ்.சி.யிடம் உள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அதே நேரத்தில் தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் இல்லை என உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது தமக்கு மிகுந்த  வருத்தம் அளிக்கிறது எனவும்  திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

click me!