​மானம் காக்குமா மானாமதுரை..? சொந்த கட்சிக்காரரை நினைத்து மனதுக்குள் அடித்துக் கொள்ளும் திமுக வேட்பாளர்..!

By Thiraviaraj RMFirst Published Mar 13, 2021, 5:40 PM IST
Highlights

திமுக தலைமை தைரியப்படுத்தி மீண்டும் மானாமதுரை தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கொடுத்துள்ளது. ஆனாலும் சேங்கைமாறனை நினைத்து ஒருபுறம் கலக்கத்தில்தான் இருந்து வருகிறாராம் தமிழரசி. 

சிவகங்கை மாவட்டத்தில் தா.கிருஷ்ணன் காலத்திற்கு பிறகு திமுக குறிப்பிட்ட வளர்ச்சியடையவில்லை. கடந்த சட்டமன்றத்தேர்தலின் போது சிவகங்கை தொகுதி திமுக வெற்றி பெற வேண்டியது. அந்த வெற்றியை தோற்கடித்தது அதிமுக அல்ல. திமுகவினரே.!  

மானாமதுரை தொகுதி 2011ம் ஆண்டு போட்டியிட்டவர் முன்னாள் அமைச்சர் தமிழரசி ரவிக்குமார். கண்ணுக்கு தெரிந்து வெற்றி வாய்ப்பை இழக்கச்செய்தார்கள் திமுக நிர்வாகிகள். அதில் முக்கியமானவர் சேங்கைமாறன். இவர் மட்டும் தமிழரசி கொடுத்த ஒருகோடி பணத்தை திருப்புவனம் ஒன்றியத்தில் ஒழுங்காக மக்களுக்கு செலவு செய்திருந்தால் தமிழரசி வெற்றி பெற்றிருப்பார். தேர்தலுக்காக செலவுக்கு தமிழரசி கொடுத்த அந்த பணத்தைக்கொண்டு அமெரிக்கா சென்று விட்டார் சேங்கை மாறன். ’’என் தோல்விக்கு என்ன காரணம்?’’என்பதை கருணாநிதியிடம் அப்போதே தமிழரசி புகார் கொடுத்திருக்கிறார்.

 2016ம் போட்டியிட்ட சித்திரைசெல்வி நடந்து முடிந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட கொந்தகை இலக்கியதாசன் ஆகியோர் பக்கம் பக்கமாக தலைமைக்கழகத்திற்கு புகார் அனுப்பியிருக்கிறார்கள். அந்த புகாரை மையப்படுத்தி சமீபத்தில் ஐபேக் டீம் விசாரணை நடத்தினர். கடந்த சில மாதங்களுக்கு முன் காரைக்குடியில் முன்னாள் அமைச்சர் தமிழரசி மற்றும் சேங்கை மாறன் ஆகியோரை அழைத்து விசாரணை நடத்தினார் ஏ.வ.வேலு.

திருப்புவனம், இளையான்குடி எப்போதும் திமுகவிற்கு அதிகமான வாக்குகளை வாங்கி கொடுக்கும் யூனியன். ஆனால், யூனியன் சேர்மன் பதவியை வாங்க மட்டும் கவுன்சிலர்களை வெற்றி பெற வைக்க முடியும் என்றால் எம்.எல்.ஏ தேர்தலில் இந்த யூனியன் பகுதியில் திமுகவிற்கு அதிக வாக்குகள் வாங்கி கொடுக்காமல் கட்சி கொடுக்கும் பணத்தை வைத்துக்கொண்டு படுத்துக்கொள்வார் சேங்கை மாறன். அதுதான் இப்போது வரைக்கும் நடந்து கொண்டிருக்கிறது.

திருப்புவனம் ஒன்றியத்தை இரண்டாக பிரித்து தெற்கு ஒன்றியச்செயலாளர் சேங்கை மாறன் மனைவி வசந்திக்கும் வடக்கு ஒன்றியம் அவருடைய வீட்டில் வேலைபார்த்த கடம்பசாமிக்கும் வாங்கி கொடுத்திருக்கிறார். இதுவே கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

சிவகங்கை தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதற்காக சேங்கைமாறன் என்ற பெயரை ஃபேஸ்புக்கில் சிவகங்கைசேங்கை மாறன் என்று மாற்றியிருந்தார். ஆனால் இது போன்ற புகார்களால் சிவகங்கை மாவட்ட துணை செயலாளரான சேங்கை மாறனுக்கு சிவகங்கையில் சீட் கொடுக்கவில்லை திமுக தலைமை. சேங்கைமாறனை மாவட்ட பொறுப்பாளராக போட்டால் இரண்டு தொகுதிகள் தோற்பது உறுதி. ஆகையால் அவருக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்க கூடாது என்று முன்னாள் திருப்புவனம் ஒன்றிய இளைஞர் அணிச் செயலாளர் அச்சங்குளம் முருகன். மானாமதுரை நகர் செயலாளர் பொன்னுச்சாமி சிவகங்கை வடக்கு ஒன்றியச்செயலாளர் ஜெயராமன் தெற்கு ஒன்றியச்செயலாளர் நெடுஞ்செழியன் சிவகங்கை நகர் செயலாளர் துரை. ஆனந்த்  பொதுக்குழு உறுப்பினர் முத்து ஆகியோர் மண்டல பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலுவிடம் நேரடியாக சென்று புகார் மனு வழங்கியிருந்தார்கள். 

ஆகையால் தான் சிவகங்கை திமுக மாவட்டச்செயலாளராக இருக்கும் பெரியகருப்பன் மாவட்டத்தை பிரிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. சிவகங்கை தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் சேங்கை மாறனின் கனவு தவிடுபொடியாகி விட்டது. சேங்கை மாறன் சிவகங்கையில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தார். ஆனால் தலைமை விரும்பாததால் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புக் கொடுக்கவில்லை. அப்போது நடந்த தேர்தலின் போது வாக்காளர்களுக்கு கொடுக்க தமிழரசி கொடுத்த பணத்தை பல வகைகளில் கேட்டுப்பார்த்து வந்தார் முன்னாள் திமுக அமைச்சரான தமிழரசி. ஆனால் சேங்கை மாறன் இதுவரை திருப்பிக் கொடுக்கவே இல்லை. 

சேங்கைமாறன் இம்முறையும் தனக்கு இடையூறாக இருக்கலாம் என நினைத்த தமிழரசி சோழவந்தான் தனித் தொகுதியைத் தான் கேட்டு வந்தார். ஆனால், திமுக தலைமை தைரியப்படுத்தி மீண்டும் மானாமதுரை தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கொடுத்துள்ளது. ஆனாலும் சேங்கைமாறனை நினைத்து ஒருபுறம் கலக்கத்தில்தான் இருந்து வருகிறாராம் தமிழரசி. திமுகவின் முன்னாள் அமைச்சரான ஒருவருக்கே இந்த நிலைமையா? 
 

click me!