கனிமொழி தவிர மற்ற வாரிசுகள் தோற்கணும்..! தி.மு.க.வில் பெரும் கலகக்குரல்..!

By Vishnu PriyaFirst Published Mar 22, 2019, 4:06 PM IST
Highlights

ஸ்டாலினிடம் கருணாநிதி தோற்றார் போங்க! என்று ஒட்டுமொத்த தி.மு.க.வும் வாய்பிளக்கிறது. இதில் பெருமைப்பட ஒன்றுமேயில்லை. காரணம்?...விவகாரம் அப்படி. 

ஸ்டாலினிடம் கருணாநிதி தோற்றார் போங்க! என்று ஒட்டுமொத்த தி.மு.க.வும் வாய்பிளக்கிறது. இதில் பெருமைப்பட ஒன்றுமேயில்லை. காரணம்?...விவகாரம் அப்படி. 

வாரிசு அரசியலில் ஊறி வளர்ந்ததுதான் தி.மு.க! என்பார்கள் பொதுவாக. அந்த விமர்சனத்துக்கு வலு கொடுக்கும் வகையில் கருணாநிதியும்  தேர்தல்களிலும் சரி, கட்சிப் பதவிகளிலும் சரி கழக முக்கியஸ்தர்களின் வாரிசுகளுக்கு அடிக்கடி வாய்ப்பு கொடுப்பார். ஆனால் கருணாநிதி இறந்து, அக்கட்சியின் தலைவர் பதவிக்கு வந்திருக்கும் ஸ்டாலினோ...தன் அப்பாவையே மிஞ்சிவிடும் வகையில் கழக தூண்களின் வாரிசுகளுக்கு எம்.பி. சீட்டை அள்ளியள்ளிக் கொடுத்து வாரி வழங்கி தன் கட்சிக்குள்ளேயே பெரும் விமர்சனத்தை வாங்கிக் கட்டிக்கொண்டுவிட்டார். 

கருணாநிதியின் மகளும், தன் சகோதகரியுமான கனிமொழியை ராஜ்யசபா பாதையிலிருந்து மாற்றி தேர்தல் அரசியலுக்கு இழுத்திருக்கும் ஸ்டாலினை பாராட்டலாம். கனிமொழிக்கு சீட் கொடுக்கப்பட்டதை ‘வாரிசு அரசியல்’ என்று சிம்பிளாக சொல்லிவிட முடியாது. ஆனால் வடசென்னை வேட்பாளரான கலாநிதி, ஆற்காடு வீராசாமியின் மகன். தென் சென்னை வேட்பாளரான தமிழச்சி தங்கபாண்டியன், மாஜி அமைச்சர் தங்கபாண்டியனின் மகளும், மாஜி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அக்காவுமாவார்.  

மத்திய சென்னை வேட்பாளரான தயாநிதி, முரசொலி மாறனின் மகன். அதேபோல் வேலூரில் போட்டியிடபோகும் கதிர் ஆனந்த், கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன். கள்ளக்குறிச்சியில் போட்டியிட போகும் கவுதம சிகாமணியோ மாஜி அமைச்சர் பொன்முடியின் மகன். ஆக இப்படி வாரிசுகள்தான் வி.ஐ.பி. வேட்பாளர்களாக அவதாரம் எடுத்துள்ளனர் தி.மு.க.வில். அக்கட்சியின் இரண்டாம் நிலை நிர்வாகிகளில் இருந்து அடிமட்ட தொண்டர்கள் வரை எல்லோருமே இந்த விஷயத்தில் ஸ்டாலின் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். கட்சிக்காக ராவும் பகலும் பாடுபடும் நபர்கள் ஏராளமாக இருக்க, இப்படி வாரிசுகளுக்கு வாரி வழங்குவது ஏன்? இது கட்சியா இல்ல கம்பெனியா! என்று கொதிக்கிறார்கள். 

அதோடு நில்லாமல் இப்போது தி.மு.க.வினுள் கடந்த இரண்டு நாட்களாக ஒரு வாட்ஸ் அப் பதிவு வளைய வருகிறது. அது இந்த வாரிசு வேட்பாளர்களின் ஒரிஜினல் தகுதியை போட்டுக் கிழிக்கிறது இப்படி...”தென் சென்னை வேட்பாளரான தமிழச்சி கட்சியின் எந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்? வெயிலில் வேக வேக மகளிரணி நடத்திய எந்த போராட்டத்திலாவது அவர் தென்பட்டிருக்கிறாரா? கைதாகியிருக்கிறாரா! மேக் அப் கலையாமல் ஏஸி மேடைகளில் வலம் வந்தவருக்கு ஏன்  எம்.பி. சீட்? மாஜி அமைச்சரின் மகள், மாஜி அமைச்சரின் அக்கா என்பதால் சீட்டா!  வாய் வலிக்காமல் இலக்கியம் பேசியதன் மூலம் தமிழச்சி நம் கட்சிக்கு வாங்கிக் கொடுத்த வாக்குகள் எவ்வளவு? 

துரைமுருகன் நம் கட்சியில் தொடாத உயரமா? கட்சிக்காக அவர் உழைக்கிறார் என்றால் அதற்கு பிரதி உபகாரமாக கட்சி ஆட்சியிலமரும் போதெல்லாம் பசையான ‘பொதுப்பணி துறை’ பதவியை கொடுத்து மிக நன்றாக சம்பாரித்து செட்டிலாக வைத்துள்ளோமே? கல்லூரி, வாட்டர் பிஸ்னஸ் என்று துவக்கி எத்தனை பிஸ்னஸ்கள், எத்தனை நூறு கோடிகளை குவித்துள்ளது இந்த குடும்பம்! ஏன் இவருக்கு சீட்? 

துரைமுருகனை விட மிக மோசமானது பொன்முடியின் மகனுக்கு வழங்கப்பட்ட சீட். சொந்த கட்சிக்காரனையே ஏதோ அசிங்கத்தை கண்டது போல் அருவெறுப்பாக நடத்தி, பாரபட்சம் பார்த்து நடக்கும் பொன்முடிக்கு இனி வரும் காலங்களில் சீட் வழங்குவதே தப்பு. இந்த லட்சணத்தில் அவர் மகன் கவுதம சிகாமணிக்கு ஏன் சீட்? கதிர் ஆனந்த் மற்றும் கவுதம சிகாமணி இருவரும் சீட் கிடைத்த அன்று தளபதியை சந்தித்த கோலத்தை பாருங்கள். இருவருமே கட்சி கரை வேஷ்டி கட்டவில்லை, அட கட்சிக்கரையில்லாமல் சாதாரண வேட்டி கூட கட்டவில்லை. இத்தனைக்கும் தங்களின் அப்பாக்கள் மூலமாக ‘சீட் உறுதி’ என்று பல மாதங்களுக்கு முன்பே அறிந்து வைத்த இந்த மகன்கள் தலைவரை சந்திக்க வரையில் மரியாதைக்காக கட்சிக்கரை வேட்டி கட்டவில்லை. ஆனால் இவர்களுக்கு அள்ளிக் கொடுக்கிறார் தலைவர். இவரல்லவா தலைவர்? 

இவர்களை விடுங்கள், ஏற்கனவே எம்.பி., மத்தியமைச்சர் என்று அதிகாரங்களை சுவைத்ததோடு, தன் அண்ணனின் சன் டி.விக்கு தொலைதொடர்பு துறையில் தன் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்தார் என்று குற்றசாட்டுக்கு உள்ளாகி கட்சியின் பெயரை கெடுத்த தயாநிதி மாறனுக்கு சீட். இவராவது என்றாவது வேட்டி கட்டியிருக்கிறாரா? ஐந்து பைசா எடுத்து கட்சிக்காரனுக்கு செலவுக்கு கொடுத்திருப்பாரா? இவர் கட்சிக்காக செய்த தியாகமென்ன? உழைப்பென்ன? ஒரு தலைமை கழக பேச்சாளரால் ஈர்க்க முடிகிற வாக்குகளில் ஒரு சதவீதத்தை இவரது பேச்சு ஈர்க்குமா! 

ஆனால் இந்த துரைமார்களுக்காக நாங்கள் வேகாத வெயிலில் கொடி பிடித்து கோஷம் போடவேண்டும் இல்லையா! கோஷம் போடுகிறோம் தளபதி...’கனிமொழி தவிர இந்த வாரிசுகள் அத்தனைபேரும் தோற்க வேண்டும். தொண்டனின் ரத்தத்தை உறிஞ்சி வாழும் அட்டைப்பூச்சிகள் வீழ வேண்டும்!’ என்று கோஷம் போடுகிறோம். இனியாவது மாறுங்கள் தளபதி.” என்று அதில் பரபரத்துக் கிடக்கிறது தகவல். சத்தம் கேட்குதா ஸ்டாலின் சார்!?

click me!