
வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக மீது திட்டமிட்டு பழி சுமத்தப்படுவதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்யும் வகையில், 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் வன்னியர் உள் இடஒதுக்கீடு சட்டம் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதுக்குறித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அதிமுக ஆட்சியில் அவசரமாக கொண்டுவந்து முறையாக அவர்கள் நிறைவேற்றவில்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக மீது திட்டமிட்டு பழி சுமத்தப்படுவதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்றத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு சம்மந்தமாக முதலமைச்சர் பதில் கூறும் போது அதிமுக ஆட்சியில் அவசரமாக இந்த 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டுவந்து முறையாக அவர்கள் நிறைவேற்றவில்லை என்ற தவறான செய்தியை சட்டமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார். அதிமுகவை பொறுத்தவரை எல்லா வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் சமமாக உரிமை கிடைக்க வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம். அதைத்தான் நாங்கள் கடைப்பிடித்து கொண்டிருக்கிறோம். வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து பல பேர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள்.
அப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. திமுக ஆட்சிக்கு வந்தது வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே வழக்கறிஞர் போதிய ஆதாரங்களை மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. மூத்த வழக்கறிஞரை வைத்து வாதாடவில்லை. சாதிவாரியாக கணக்கெடுப்புக்கு ஒரு குழு அமைக்கப்பட்டு அதை 6 மாதத்திற்குள் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என குலசேகரன் தலைமையில் அதிமுக ஆட்சியில் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையம் நீட்டிக்கப்பட்டு இருந்தால் வன்னியர் இட ஒதுக்கீட்டில் இந்த நிலை வந்திருக்காது. திமுக அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக அரசு மீது பழி சுமத்துகிறது. விழுப்புரத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்தை கைது செய்தது வன்மையாக கண்டிக்க கூடிய செயல் என்று தெரிவித்தார்.