இனிமேல் உங்கள் இந்தி எதிர்ப்பு நாடகம் வேலைக்கு ஆகாது.. ஒரே கேள்வியால் திமுகவை திக்குமுக்காட செய்த வானதி..!

By vinoth kumarFirst Published Oct 20, 2022, 7:15 AM IST
Highlights

இந்தியை எதிர்க்கும், தமிழ் தான் எங்கள் உயிர் என பேசும் தி.மு.க. நிர்வாகிகளில் யாராவது தங்கள் பிள்ளைகளை தமிழ் வழியில் படிக்க வைத்துள்ளார்களா? தமிழகத்தில் தி.மு.க.வினர் நடத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில், எத்தனை பள்ளிகளில் இந்தி பாடம் உள்ளது? 

திமுகவினர் நடத்தும் இந்தி பாடம் உள்ள பள்ளிகள், தமிழ் வழியில் படிக்கும் திமுக நிர்வாகிகளின் பிள்ளைகள் பட்டியலை வெளியிட வேண்டும் என வானதி சீனிவாசன் சுறியுள்ளார். 

இதுதொடர்பாக பாஜக மகளிரணி தேசியத் தலைவர், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு என்று கடந்த ஒன்றரை ஆண்டுகால தி.மு.க. ஆட்சியின் அவலங்களால், தமிழக மக்கள் கொந்தளித்து போயுள்ளனர். ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையை மடைமாற்ற, இந்தி எதிர்ப்பு என்ற ஆயுதத்தை தி.மு.க. மீண்டுமொரு முறை கையிலெடுத்திருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி நாடாளுமன்ற குழு, குடியரசுத் தலைவரிடம் அளித்த பரிந்துரைகளை, இந்தி திணிப்பு என திரித்து, சட்டப்பேரவையில் தி.மு.க. அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இதையும் படிங்க;- தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகளை முடக்க நினைப்பது பகல் கனவாகவே முடியும்.. திமுகவை அலறவிடும் வானதி..!

பா.ஜ.க.வைப் பொறுத்தவரை அனைத்து இந்திய மொழிகளுக்கு சம முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பா.ஜ.க.வின் கொள்கை இதுதான். மத்திய பா.ஜ.க. அரசு எந்த மாநிலத்திலும், எந்த இடத்திலும் இந்தி மொழியை ஒருபோதும் திணிக்கவில்லை. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழிகளிலேயே பள்ளிக் கல்வி முதல் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வி இருக்க வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் கொள்கை. இதனைத்தான் தேசிய கல்வி கொள்கை வலியுறுத்துகிறது. தாய் மொழி வழி கல்விக்கு பா.ஜ.க. அரசின் புதிய கல்விக் கொள்கை வழி செய்கிறது. ஆனால், அதனை தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் எதிர்க்கின்றன.

மாநில மொழிகளுக்கு மாற்றாக இந்தியை கற்க வேண்டும், இந்தியில் அலுவல்கள் நடக்க வேண்டும் என, மத்திய பா.ஜ.க., அரசு கூறவில்லை. புதிய கல்விக் கொள்கையில் கூட, மூன்றாவது மொழியாக இந்தி உட்பட எந்த இந்திய மொழிகளை வேண்டுமானாலும் விருப்ப பாடமாக எடுத்து படிக்கலாம் என்றே கூறப்பட்டுள்ளது. தாய்மொழி வழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில்தான், மருத்துவப் படிப்பை இந்தியில் கற்கும் வாய்ப்பை பா.ஜ.க. அரசு மத்தியப்பிரதேசத்தில் உருவாக்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட மற்ற இந்திய மொழிகளிலும் மருத்துவம் படிக்க பா.ஜ.க. அரசு ஏற்பாடு செய்து வருகிறது. மருத்துவப் பாட புத்தகங்களை தமிழில் தயாரிக்க உதவியாக, மருத்துவம் தொடர்பான தமிழ் சொற்கள் அடங்கிய சொற்களஞ்சியத்தை உருவாக்கும் பணியை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்கியிருக்கிறது. இந்த சூழலில்தான் இந்தி திணிப்பு என தி.மு.க. பொய் பிரசாரம் செய்து வருகிறது.

இந்தியை எதிர்க்கும், தமிழ் தான் எங்கள் உயிர் என பேசும் தி.மு.க. நிர்வாகிகளில் யாராவது தங்கள் பிள்ளைகளை தமிழ் வழியில் படிக்க வைத்துள்ளார்களா? தமிழகத்தில் தி.மு.க.வினர் நடத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில், எத்தனை பள்ளிகளில் இந்தி பாடம் உள்ளது? என்பதை வெள்ளை அறிக்கையாக தி.மு.க. தலைமை வெளியிட வேண்டும். இந்தியில் மருத்துவப் படிப்பை துவங்க தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மருத்துவத் துறையியின் எதிர்காலத்தை இருளில் தள்ளும் முயற்சி என, முரசொலி விமர்சித்துள்ளது. 

இதையும் படிங்க;- திமுகவையும் இந்து மத வெறுப்பையும் ஒருநாளும் பிரிக்க முடியாது.. அதற்கு ஆ.ராசாவின் பேச்சே உதாரணம்.. வானதி.!

நாளை, தமிழில் மருத்துவப் படிப்பு வரும்போது அதனை தி.மு.க. ஏற்குமா, தமிழில் மருத்துவப் படிப்பு விவகாரத்தில் தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன என்பதை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவுப்படுத்த வேண்டும். தி.மு.க.வின் இந்தி எதிர்ப்பு நாடகத்தை நம்பி இனியும் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். தாங்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தியை பாடமாக வைத்து விட்டு, தங்களை பிள்ளை ஆங்கில வழியில் படிக்க வைத்துவிட்டு, அரசுப் பள்ளிகளில் மட்டும் தமிழ், தமிழ் என இரட்டை வேடம் போடும் தி.மு.க.வை இனியும் தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள். பா.ஜ., இந்திய மொழிகளுக்கு, தாய் மொழி கல்விக்கு ஆதரவாக நிற்கிறதே தவிர, இந்தி மொழிக்கு அல்ல. இந்த உண்மையை தமிழக மக்கள் நன்கறிவார்கள் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

click me!