திமுக கூட்டணியில் அதிக சீட்டு கேட்கக் கூடாது... திடீர் கண்டிஷன் போடும் முத்தரசன்..!

By Asianet TamilFirst Published Feb 14, 2021, 9:42 PM IST
Highlights

திமுக கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால், அவர்கள் கூடுதல் இடங்களைக் கேட்கக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
 

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மத்திய அரசு விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை இயற்றி வருகிறது. பாசிச போக்கோடும் பாஜக அரசு செயல்படுகிறது. மத்திய பாஜக அரசின் இசைவு அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய பாஜக அரசின் எல்லா தீங்கான திட்டங்களையும் அதிமுக அரசு ஆதரிக்கிறது. தேர்தலுக்காக பயிர்கடன் ரத்து போன்ற அறிவிப்புகள் வருகின்றன. ஆளும்கட்சியினர் பயனடையவே இந்தக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.


இதை முன்கூட்டியே அறிந்த ஆளுங்கட்சியினர் சில வாரங்களுக்கு முன்பே கடன் பெற்றுள்ளனர். யார், யாருக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்ற விவரங்களை எடப்பாடி பழனிசாமி வெளியிட வேண்டும். இந்தக் கடன் தள்ளுபடியால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு பயன் ஏதுமில்லை. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும். சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் 19 பேர் இறந்தது வருத்தமளிக்கிறது. பட்டாசு ஆலைகளில் விதிமுறைகளை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டும்.


வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுன் தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த எங்கள் கட்சி சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் நல கூட்டணி போன்ற கூட்டணியை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை. தமிழகத்தில் மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை. திமுக தலைமையில்தான் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும். பாஜகவையும் அதோடு கூட்டணி வைக்கும் கட்சிகளையும் தோற்கடிக்க வேண்டும் என்பதே எங்கள் கொள்கை.
நாங்கள் மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளோம். திமுக கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால், அவர்கள் கூடுதல் இடங்களைக் கேட்கக் கூடாது.” என்று முத்தரசன் தெரிவித்தார்.

click me!