DMK alliance : மேயர் பதவி கனவு.. சைலண்ட் மோடில் திமுக.? அப்செட்டில் திமுக கூட்டணி கட்சிகள்.!

Published : Jan 30, 2022, 10:16 AM IST
DMK alliance : மேயர் பதவி கனவு..  சைலண்ட் மோடில் திமுக.? அப்செட்டில் திமுக கூட்டணி கட்சிகள்.!

சுருக்கம்

தேர்தல் முடிவு பிப்ரவரி 22-இல் வெளியானாலும், மேயர், சேர்மன் தேர்தல் மார்ச் 4-இல்தான் நடைபெற உள்ளது. எனவே இடைப்பட்ட காலத்தில் பேசிக்கொள்ளலாம் என்பது திமுகவின் நிலைப்பாடு. 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவியை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்பார்க்கும் நிலையில், அக்கட்சிகளுக்கு அப்பதவி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கி நடைபெறும் நிலையில், கூட்டணி அமைத்து போட்டியிடும் கட்சிகள், உடன்பாடு எட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ, ஐ.யூ.எம்.எல்., மமக, தவாக என ஏராளமான கட்சிகள் இருக்கின்றன. என்றாலும் இதில் காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகளுடனான பேச்சுவார்த்தை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இக்கட்சிகளின் தலைவர்கள் வரிசையாக அறிவாலயத்துக்கு வந்து பேச்சுவார்த்தையை நடத்திவிட்டு சென்றிருக்கிறார்கள். ஆனால், வார்டுகள் பங்கீடுகள் எல்லாமே மாவட்ட அளவில்தான் நடைபெற்று வருகின்றன. எனவே, திமுக மாவட்டச் செயலாளர்கள் ஒதுக்குவதைப் பொறுத்துதான் திமுக கூட்டணி கட்சிகளுக்கு வார்டுகள் கிடைக்கும்.

இந்த முறை மேயர், நகராட்சி சேர்மன் போன்ற பதவிகள் மறைமுகமாக (கவுன்சிலர்கள் மூலம்) தேர்ந்தெடுகப்பட இருப்பதால், அதிக கவுன்சிலர்கள் இருந்தால்தான் மேயர், நகராட்சி மற்றும் பேருராட்சி சேர்மன் பதவிகள் குறித்து ஆசையே பட முடியும். அந்த வகையில் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 10 சதவீத இடங்களை ஒதுக்கியதுபோல,  இப்போதும் குறைந்தபட்சம் ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் 10 சதவீத வார்டுகளை ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. செல்வாக்கான இடங்களில் கூடுதல் வார்டுகளையும் காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கிறது. மேலும், காங்கிரஸ் கட்சி குறைந்தபட்சம் 5 மேயர் பதவிகளை எதிர்பார்க்கிறது. 2006-இல் 6 மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெற்றபோது காங்கிரஸ் கட்சிக்கு திருச்சி, கோவை என இரு மாநகராட்சிகளை திமுக ஒதுக்கியது. அப்போது காங்கிரஸ் தயவில் திமுக ஆட்சி நடத்தியதால், கருணாநிதி தாராளம் காட்டினார்.

இப்போது அதுபோன்ற சூழல் இல்லாததால், திமுக விரும்பிக் கொடுத்தால்தான் மேயர் பதவி கிடைக்கும் நிலையில்தான் காங்கிரஸ் உள்ளது. இப்போது மாநகராட்சிகளின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ள நிலையில், நாகர்கோவில், தூத்துக்குடி, ஓசூர் உள்பட 5 மாநகராட்சிகளை காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கிறது என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, செல்வாக்காக உள்ள சிவகாசி மேயர் பதவியைக் கேட்டு திமுக தலைமையை அணுகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டணியில் உள்ள இன்னொரு கட்சியான விசிகவும் மேயர் பதவி மீது கண் வைத்திருக்கிறது.  கடலூர் அல்லது வேலூர் மாநகராட்சியை ஒதுக்க வேண்டும் என்று திமுக தலைமையிடம் விசிக கோரி வருகிறது. 

இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல், மதுரை, நாகர்கோவில் என ஏதாவது ஒரு மேயர் பதவியை எதிர்பார்க்கிறது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கும்பகோணம், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் ஒன்றை எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் உலா வருகின்றன. திமுக கூட்டணி கட்சிகளிடமிருந்து இப்படி கோரிக்கைகள், ஆசைகள் வெளிப்பட்டாலும், திமுக சைலண்ட் மோடில்தான் உள்ளது. பேச்சுவார்த்தை நடத்த வரும் தலைவர்களிடம், மேயர், சேர்மன் பதவிகள் குறித்து தேர்தல் முடிவுக்குப் பிறகு பேசிக்கொள்வோம் என்று ஒற்றை பதிலை திமுக தலைமை கூறி வருகிறது. தேர்தல் முடிவு பிப்ரவரி 22-இல் வெளியானாலும், மேயர், சேர்மன் தேர்தல் மார்ச் 4-இல்தான் நடைபெற உள்ளது. எனவே இடைப்பட்ட காலத்தில் பேசிக்கொள்ளலாம் என்பது திமுகவின் நிலைப்பாடு. 

ஆனால், அதிக எண்ணிக்கையில் திமுக கவுன்சிலர்கள் வெற்றி பெற்றால், மேயர் அல்லது சேர்மன் பதவியைத் தர முன்வரமாட்டார்கள் என்பதால், இப்போதே உடன்பாடு செய்துகொள்ள வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் எதிர்பார்க்கின்றன. ஆனால், தேர்தல் முடிவுக்குப் பிறகே பதவிகள் குறித்து பேசுவது என்பதில் திமுக உறுதியாக இருப்பதால், மேயர் பதவிகள் கூட்டணி கட்சிகளுக்குக் கிடைக்குமா, அவர்களுடைய கனவு நனவாகுமா என்பது பிப்ரவரி 22-க்கு பிறதான் தெரிய வரும். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி