திமுக கூட்டணி தொகுதி பங்கீடு... யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்?

By sathish kFirst Published Sep 28, 2018, 5:32 PM IST
Highlights

வரப்போகும் நாடாளுமன்ற தேர்தல் தமிழக அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கருணாநிதி , ஜெயலலிதா என இரு பெரும் அரசியல் தலைவர்களின் இழப்பிற்கு பிறகு , தலைமையை இழந்து , இந்த தேர்தலை சந்திக்கவிருக்கின்றன தமிழகத்தின் இரு பெரும் கட்சிகள். 

வரப்போகும் நாடாளுமன்ற தேர்தல் தமிழக அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கருணாநிதி , ஜெயலலிதா என இரு பெரும் அரசியல் தலைவர்களின் இழப்பிற்கு பிறகு , தலைமையை இழந்து , இந்த தேர்தலை சந்திக்கவிருக்கின்றன தமிழகத்தின் இரு பெரும் கட்சிகள். இதனால் இந்த இரண்டு கட்சியின் தலைமைகுமே தன்னை நிரூபித்து காட்ட வேண்டிய பொருப்பு இருக்கிறது. 

இதில் அதிமுகவின் நிலை ஏற்கனவே தாறுமாறாக இருப்பதால், மக்கள் மத்தியில் தற்போது மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருப்பது திமுக தான்.  என்ன தான் ரஜினியும் கமலும் அரசியலில் காலடி எடுத்து வைத்திருந்தாலும், திமுகவிற்கு என ஒரு பாரம்பரியம் இருக்கிறது. அதை நிரூபித்து காட்ட வேண்டிய கட்டாயம் இருப்பதால் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். 

அவர் தலைமை பொறுப்பேற்ற பிறகு நடைபெற இருக்கும் மிகப்பெரிய அளவிலான தேர்தல் இது என்பதற்கு இதற்கு இன்னுமொரு முக்கிய காரணம். இதனால் நாடாளுமன்ற தேர்தலில் திமுக யார் யாருடன் எல்லாம் கூட்டணி வைக்கப்போகிறது? எத்தனை தொகுதிகளில் போட்டி இடப்போகிறது? யார் யார் எந்தெந்த தொகுதியில் போட்டி இடப்போகிறார்கள் என ஒரு பட்டியலையே தாயார் செய்து வைத்திருக்கிறது. வழக்கமாக இது போன்ற முன்னேற்பாடான வேலைகளில் எல்லாம் ஜெயலலிதா தான் முன்னிலையில் இருப்பார்.

முதல் முதலாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவிப்பது, அதில் தடாலடியான மாற்றங்களை கொண்டுவருவது என பரபரப்பை ஏற்ப்படுத்தும் அவர் இப்போது இல்லை. அதனாலேயோ என்னவோ அங்கு தொய்வு காணப்படுகிறது. ஆனால் அதற்கெல்லாம் சேர்த்து வைத்து பக்காவாக திட்டம் போட்டிருக்கிறது திமுக. 
வழக்கமாக திமுக கூட்டணி வைத்துக்கொள்ளும்  காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இரு இடதுசாரிகள், தேசிய லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் தான், இந்த முறை திமுக தயாரித்திருக்கும் உத்தேசப்பட்டியலிலும் இடம் பெற்றிருக்கின்றன. 

ஆனால் இந்த முறை கூட்டணிக்கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கும் விஷயத்தில் மிகவும் கண்டிப்புடன் செயல்பட திட்டமிட்டிருக்கிறாராம் ஸ்டாலின். இதனால் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 28 தொகுதிகளில் திமுக தான் போட்டி இடப்போகிறது என தெரிவித்திருக்கிறார்கள். இந்த விஷயம் குறித்து ஆரம்பம் முதலே காரசாரமாக விவாதம் நடத்தி தான் இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறதாம் கட்சி தலைமை. இம்முறை நாம் தான் மிக அதிகபட்ச தொகுதிகளில் போட்டியிட வேண்டும். கூட்டணி தர்மம் என்று சொல்லி முன்னர் செய்தது போல் பாதி சீட்டுகளை விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என ஸ்டாலினிடம் கராராக பேசி இருக்கின்றனர் சீனியர் மாவட்டச் செயலாளர்கள். 

அவர்கள் சொல்வதிலும் விஷயம் இருக்கிறது என்பதை உணர்ந்த ஸ்டாலினும் அப்படியே செய்ய் முடிவு எடுத்து தான் ,இம்முறை 28 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களை களமிறக்க முடிவு செய்திருக்கிறார். கூட்டணி வைத்துக்கொள்ள வரும் காங்கிரஸுக்கு 7 இடங்களை தான் தரமுடியும் என்பதையும் அவரது உத்தேசப்பட்டியலில் குறிப்பிட்டிருக்கிறாராம். இந்த 7ல் தான் புதுசேரி தொகுதிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது., இரண்டு இடதுசாரிகளுக்கும் ஒவ்வொரு தொகுதி என இரண்டு தொகுதிகள்,  மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், தேசிய லீக் ஆகிய கட்சிகளுக்கு ஒவ்வொரு தொகுதி என மூன்று தொகுதிகள், என புதுச்சேரியையும் சேர்த்து 40 தொகுதிகளையும் பிரித்து பட்டியல் போட்டிருகிறதாம் திமுக.

இந்த பட்டியலில் கடைசிவரை எந்த மாறுதலும் வந்துவிடக்கூடாது என்பதனால் , காங்கிரசிடமும் கரார் காட்டி வருகிறாராம் ஸ்டாலின். காங்கிரஸைப் பொறுத்தவரை ஏழு இடங்கள் என்பதை இங்குள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், காங்கிரஸ் டெல்லி தலைமை, திமுகவோடு  கூட்டணி  என்பதில் உறுதியாக இருக்கிறது. ராகுல் காந்தியிடம் இது குறித்து பேசிய ப.சிதம்பரம் கூட ”திமுகவோடு இருக்கும்பட்சத்தில் நாம் போட்டியிடும் சீட்டுகளில் எல்லாம் ஜெயிக்க முடியும்” என்று நம்பிக்கை தெரிவித்திருப்பதால் காங்கிரஸ் திமுகவை தான் வழக்கம் போல ஃபஸ்ட் சாய்சில் வைத்திருக்கிறது.

அதே சமயம் திமுக தலைவர் ஸ்டாலின் இது வரை காங்கிரசுடனான கூட்டணி குறித்து எதுவும் குறிப்பிடாமல் இருப்பது ஒரு பக்கம் குழப்பத்தை ஏற்படுத்தினாலும், அதுவும் கூட காரியமாக தான் என்கின்றனர் அரசியல் வட்டாரத்தினர்.ஸ்டாலின் காங்கிரசுடனான கூட்டணியை விரும்ப தான் செய்கிறார். காங்கிரஸ் கட்சியின் ரஃபேல் ஆர்ப்பாட்டத்தின் போது கராத்தே தியாகராஜன் திமுகவைக் குறை கூறிப் பேசியபோது கூட, ஸ்டாலின்அதை பெரிதாக்கவில்லை. காங்கிரஸுக்கும் திமுகவுக்குமிடையே பிரச்சனை ஏற்படுவதை அவர் எப்போதும் விரும்பவில்லை. சீட் விவகாரத்தில் விவாதங்களை தவிர்க்க தான் இப்போதே கடுமை காட்டி வருகிறார் என்றும் கருத்து தெரிவித்திருக்கின்றனர் காங்கிரஸ் தரப்பினர். 

அதே சமயம் இந்த சீட் விவகாரத்தை திமுகவின் மற்ற கூட்டணி கட்சிகள் எற்றுக்கொள்ளுமா ?என்பது தான் இப்போதைக்கு கேள்விக்குறி. ஏற்கனவே ஒரு தொகுதிக்காக 39 தொகுதியில் உழைக்கவேண்டுமா. திமுகவை விட்டு வெளியேறு தலைவா. உனக்கு வெற்றி நிச்சயம் என்று திருமாவளவன் கட்சியினர் அவரை திமுகவில் இருந்து விலக சொல்லி போஸ்டர் அடிக்கும் அளவிற்கு போய்விட்டனர். இனி இந்த தொகுதி விவகாரம் வேறு கூட்டணிக்குள் எப்படிப்பட்ட குழப்பத்தை கொண்ட்டுவரப்போகிறதோ? என இப்போதே கலக்கத்தில் இருக்கின்றனர் அரசியல் வட்டாரத்தினர்.

click me!