திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இவை தான் !! மு.க. ஸ்டாலின் இன்று அதிகாரப்பூர்வமா அறிவிக்கிறார் !!

By Selvanayagam PFirst Published Mar 12, 2019, 6:47 AM IST
Highlights

எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி  கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் திமுக – காங்கிரஸ் இடையே  ஒரு சில தொகுதிகளில் மட்டும் மாற்றங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இது குறித்து இன்று காலை முடிவு செய்யப்பட்டு பிற்பகலுக்குள்  மு.க.ஸ்டாலின் அதிகாரப் பூர்வமாக அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 40  நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும் 18 சட்டசபைகளுக்கு இடைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் திமுக  தலைமையில் 8 கட்சிகள் பங்கேற்கும் மெகா கூட்டணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.


 
திமுக 20, காங்கிரஸ் 10, இடது சாரிகள், விசிக தலா 2 , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1, கொமதேக 1, ஐஜேகே 1 மதிமுக 1 என போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட உள்ளன என்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திமுக வட சென்னை, தென் சென்னை , மத்திய சென்னை, வேலூர், நெல்லை, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை , கடலூர், பொள்ளாச்சி, மயிலாடுதுறை, நீலகிரி, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி, காஞ்சிபுரம், கரூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், தேனி ஆகிய 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளன.

அதே போல் காங்கிரஸ் கட்சி கன்னியாகுமரி, சிவகங்கை, திண்டுக்கல், அரக்கோணம், சேலம், திருவள்ளூர் , திருச்சி, ஆரணி, விருதுநகர் மற்றும் புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளன.

சிபிஎம் மதுரை மற்றும் கோவை தொகுதிகளிலும், சிபிஐ நாகை மற்றும் திருப்பூர் தொகுதிகளிலும், மதிமுக ஈரோடு தொகுதியிலும், ஐஜேகே பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ராமநாதபுரம் தொகுதியிலும், கொமதேக நாமக்கல் தொகுதியிலும் போட்டியிட உள்ளது.

அதே நேரத்தில்  திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் போட்டியிடும் சில தொகுதிகளில் மட்டும் இழுபறி நீடிப்பதாகவும் அதுவும் இன்று காலை பேசி தீர்க்கப்படும் என தெரிகிறது. இதையடுத்து இன்று பிற்பகலுக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என தெரிகிறது,

click me!