
காவிரி இறுதித் தீர்ப்பை செயலிழக்க வைக்கும் கர்நாடக மாநிலத்தின் முயற்சிக்கு மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு துணை போகக்கூடாது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பையே சீர்குலைக்கும் வகையில், காவிரி இறுதித் தீர்ப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் முன்பு மத்திய அரசு வாதிட்டிருப்பது கண்டனத்திற்கு உரியது என தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அமைக்காமல், அரசியல் நோக்கங்களுக்காக வேண்டுமென்றே மத்திய பா.ஜ.க. அரசு, கர்நாடக மாநிலத்தில் தேர்தலைச் சந்திக்க வேண்டும்', என்ற நோக்கத்திற்காக தமிழகத்தின் நலனை, காவு கொடுக்கத் தயாராகி விட்டது என்பதை எடுத்துக் காட்டுகிறது.
2013-ல் காவிரி இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டு விட்டாலும், இன்றுவரை ஏறக்குறைய நான்கு வருடங்களாக காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு முன்வரவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் நடைபெறப் போகும் சட்டப்பேரவை தேர்தலில் அம்மாநில மக்களின் ஆதரவைப் பெற, தமிழகத்தின் நலனை - உரிமைகளை அடகு வைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுவது ஏன்? எனவும் தமிழகத்திற்கு இழைக்கப்படும் துரோகத்திற்கு, மாநிலத்தில் உள்ள பா.ஜ.க. தலைவர்கள் என்ன சப்பைக்கட்டு கட்ட போகிறார்கள்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆகவே காவிரி இறுதித் தீர்ப்பை செயலிழக்க வைக்கும் கர்நாடக மாநிலத்தின் முயற்சிக்கு மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு துணை போகக்கூடாது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.