நகர்புற தேர்தலில் தனித்து களமிறங்கும் தேமுதிக.. மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முக்கிய முடிவு ?

By Thanalakshmi VFirst Published Dec 2, 2021, 3:23 PM IST
Highlights

வரும் போகும் நகர்புற தேர்தலில், தேமுதிக தனித்து களம் காணும் என்று அறிவித்திருந்த நிலையில் வரும் 6-ம் தேதி சென்னை தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
 

வரும் போகும் நகர்புற தேர்தலில், தேமுதிக தனித்து களம் காணும் என்று அறிவித்திருந்த நிலையில் வரும் 6-ம் தேதி சென்னை தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து இன்று கட்சி பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தல், கட்சியின் வளர்ச்சி போன்ற பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்படும். எனவே, தேமுதிக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்திருக்கிறார். கடந்த மாதம் நடந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு கணிசமான இடங்களைக்கூட கைப்பற்ற முடியாத நிலையில், தே.மு.தி.க தலைமையின் இந்தமுடிவு கட்சியினரிடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், அ.ம.மு.க கூட்டணியில் இணைந்து 60 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக மிக குறைவான வாக்குகளைப் பெற்றது. தேமுதிக பலம்வாய்ந்த பகுதிகளிலும் கூட எதிர்பார்த்த அளவிலும் அவர்களால் வாக்குகளை அள்ள முடியவில்லை. இந்நிலையில் தொடர்ந்து நடைபெற்ற ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தே.மு.தி.க திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியில் ஒரேயொரு ஒன்றியக் கவுன்சிலர் இடத்தை மட்டுமே கைப்பற்றியது. ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக, தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், தேமுதிக தனித்துக் களம் கண்டது. இந்த நிலையில், வரும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்துப் போட்டி என தற்போது கட்சியின் தலைமை அறிவித்திருக்கிறது.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், இதுகுறித்து அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், ``தமிழகத்தில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க தனித்துப் போட்டியிடும். தே.மு.தி.க சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளும், தொண்டர்களும், தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை வரும் டிசம்பர் மாதம் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை அந்தந்த மாவட்டத் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க-வின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தே.மு.தி.க-வின் நிர்வாகியாக இருப்பவர்களும், தே.மு.தி.க-வின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. கடந்த தேர்தல்களைப்போல் இல்லாமல், கண்டிப்பாக இந்தத் தேர்தலில் கணிசமான வெற்றியை பெறுவோம் என்று நிர்வாகி மத்தியில் சொல்லப்படுகிறது

click me!