
நீண்ட நாட்களுக்குப் பிறகு பொதுவெளிக்கு வந்த விஜயகாந்த், அதிரடியாக பேட்டி அளித்தார். அதில், மாட்டிறைச்சி விவகாரம், ஓ.பி.எஸ்., உள்ளிட்ட பல விவகாரங்களில் அதிரடியாக கருத்து தெரிவித்தார்.
தே.மு.தி.க. சார்பில் கோயம்பேட்டில் நேற்று இஃப்தார் விருந்து அளிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட விஜயகாந்த், அதிரடியாக பல கருத்துக்களைக் கூறினார்.
மத்திய அரசுக்கு எதிராக, எடப்பாடி அரசு, கருத்து தெரிவிக்க யோசித்து வரும் நிலையில், மாட்டிறைச்சி உண்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஒருவருடைய உணவு பிரச்சனையில் யாரும் தலையிட முடியாது. அப்படிப் பார்த்தால், ஆடு, கோழி இவைகளையும் தடை செய்துவிட வேண்டியதுதானே. இதுபோன்று உணவு உரிமையில் தலையிட விரும்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று விஜயகாந்த், பாஜகவுக்கு எதிராக அதிரடியாக கருத்து தெரிவித்தார்.
பின்னர், ஓ.பி.எஸ்.யும் அவர் விட்டு வைக்கவில்லை. ஓ.பி.எஸ். தர்மயுத்தம் என்று முதல்வர் பதவிக்காக வேஷம் போட்டு வருகிறார். சசிகலா, பொது செயலாளர் ஆவதற்கு ஓ.பி.எஸ்.தான் முதல் காரணம். இப்போது தர்மயுத்தம் என்று யாரை ஏமாற்றுகிறார்? எடப்பாடி என்ன செய்கிறார் என்று தெரியவில்லை? என்று விஜயகாந்த் விமர்சனம் செய்தார்.