புறக்கணிக்கப்படுகிறதா தேமுதிக?... பாமக தேர்தல் அறிக்கையால் கூட்டணிக்குள் வெடித்த குண்டு...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 5, 2021, 2:51 PM IST
Highlights

இன்று வெளியான பாமக தேர்தல் அறிக்கை அதிமுக கூட்டணியில் புதிய பிரச்சனையை கொளுத்திப் போட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 6ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் அறிக்கை தயாரிப்பு ஆகிய பணிகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கின்றன. 

அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக அக்கட்சியின் கூட்டணியில் முக்கியமானதாக கருதப்படும் பாஜக, தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தேமுதிகவை பொறுத்தவரை பாமகவிற்கு கொடுத்தது போல் தங்களுக்கும் 23 தொகுதிகள் வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும், இல்லையெல் 20 தொகுதி + 1 எம்.பி. சீட் என்பதில் கறார் காட்டுவதுமே இழுபறிக்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 

பாமகவிற்கு அதிக தொகுதிகளை ஒதுக்கி விட்டு, தங்களுக்கு வெறும் 12 தொகுதிகளை மட்டுமே கொடுப்பதால் தேமுதிகவின் ஓட்டுமொத்த கோபமும் பாமக பக்கம் திரும்பியுள்ளது. இதனால் சமீபத்தில் நடந்த சில கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்களில் கூட அக்கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சதீஷ் விமர்சித்து வந்தார். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தது தவறல்ல, ஆனால் மற்ற கட்சியினரின் நிலை என்ன என்றெல்லாம் கேட்டு கூட்டணியில் சர்ச்சையை கிளப்பினார். 

இந்நிலையில் இன்று வெளியான பாமக தேர்தல் அறிக்கை அதிமுக கூட்டணியில் புதிய பிரச்சனையை கொளுத்திப் போட்டுள்ளது. மழலையர் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவச கல்வி. தனியார் பள்ளிகளின் மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அரசே செலுத்தும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. பாமக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முதல் பக்கத்தில் 2021 சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க வேண்டிய சின்னங்கள் எனக்குறிப்பிட்டு, மாம்பழம், இரட்டை இலை, தாமரை ஆகிய சின்னங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. தேமுதிகவின் முரசு சின்னம் இடம் பெறாதது அதிமுக கூட்டணியில் அக்கட்சி நீடிக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. 

click me!