அதிமுக கூட்டணிக்கு எதிராகப் பேசிய தேமுதிக மா.செ... பதறி போய் நிர்வாகிகள் பேச தடை விதித்த கட்சி தலைமை?

By Asianet TamilFirst Published Jan 7, 2020, 7:04 AM IST
Highlights

வெங்கடேசனின் இந்தப் பேச்சுக்கு கட்சி நிர்வாகிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. ஆனால், வெங்கடேசனின் பேச்சால் தேமுதிக தலைமை அதிர்ச்சி அடைந்தது. வெங்கடேசனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் வரிசையாகப் பேச ஆரம்பித்தால், பிற பகுதிகளில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தல், அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணிக்கு சிக்கலை ஏற்படுத்திவிடும் என்று தேமுதிக கருதியதாகக் கூறப்படுகிறது. 

அதிமுக தங்களை வஞ்சித்துவிட்டது என்றும் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று தேமுதிக மாவட்ட செயலாளர் பேசிய நிலையில், கட்சி நிர்வாகிகள் கூட்டணி குறித்து பேச கட்சி தலைமை தடை விதித்துள்ளது.
 உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக 20 சதவீத இடங்களை அதிமுக கூட்டணியில் எதிர்பார்த்தது. ஆனால், ஊரகப் பகுதிகளில் தேர்தல் நடந்த பகுதிகளில் அந்த அளவுக்கு தேமுதிகவுக்கு ஒதுக்கவில்லை. அதே வேளையில் பாஜக, பாமக ஆகிய கட்சிகளுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதனால், தேமுதிக தலைமை அதிருப்தி அடைந்தது. இதற்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பிரசாரம் மேற்கொண்ட தேமுதிக தலைமை, இந்த முறை பிரசாரத்திலும் ஈடுபடவில்லை. இந்நிலையில்  தேமுதிகவின் அதிருப்தியை விழுப்புரம் மாவட்ட தேமுதிக செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வெங்கடேசன் எதிரொலித்தார்.
விழுப்புரத்தில் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய வெங்கடேசன், “விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் நடந்தபோது மக்களின் மனநிலை, நம்முடைய கூட்டணிக்கு சாதகமாக இருந்தது. கூட்டணி கட்சிகளும் ஒருமனதாக களத்தில் இருந்தனர். ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணியில் ஒருங்கிணைப்பும் இல்லை, ஒற்றுமையும் இல்லை. இதை அதிமுக சரியாக செய்யவில்லை. அதேபோல உள்ளாட்சித் தேர்தலில் உரிய இடத்தை தேமுதிகவுக்கு அதிமுக வழங்கவில்லை. 27 மாவட்டங்களில் தேமுதிக வஞ்சிக்கப்பட்டது. தேமுதிகவின் பலம் இன்னும் குறையவில்லை. தனித்து நின்றால் நம்முடைய ஓட்டு வங்கியை நிரூபிக்க முடியும். தேவைப்பட்டால் அதற்கும் தயாராக உள்ளோம்” என்று வெங்கடேசன் பேசினார்.


வெங்கடேசனின் இந்தப் பேச்சுக்கு கட்சி நிர்வாகிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. ஆனால், வெங்கடேசனின் பேச்சால் தேமுதிக தலைமை அதிர்ச்சி அடைந்தது. வெங்கடேசனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் வரிசையாகப் பேச ஆரம்பித்தால், பிற பகுதிகளில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தல், அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணிக்கு சிக்கலை ஏற்படுத்திவிடும் என்று தேமுதிக கருதியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், “கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகள் யாரும் பேசக் கூடாது” என்று வாய்மொழியாக உத்தரவிட்டிருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

click me!